கேரளாவில் சாக்கடையைச் சுத்தம் செய்ய ரோபோ!
கேரளாவில் பாதாளச் சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணிக்கு ரோபோக்களைப் பயன்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கேரளாவில் உள்ள ‘ஜென்ரோபாட்டிக்ஸ்’ நிறுவனம் தாங்கள் தயாரித்த பெருச்சாளி என்னும் ரோபோவை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள 5 ஆயிரம் பாதாளச் சாக்கடைகளில் இந்த ரோபோவை இறக்கி சுத்தம் செய்து பார்க்கப்பட்டது.
கேரள நீர் ஆணையத்தின் மேலாளர் இயக்குநர் ஏ. ஷைனாமோல்,“ஜென்ரோபாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்த பெருச்சாளி ரோபோ பாதாளச் சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணியில் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது. இந்த ரோபோ தயாரிப்புக்கான அனைத்து செலவுகளையும் கேரள அரசு செய்துள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தக் கேரள அரசு மிகுந்த ஆர்வமாக இருக்கிறது. எனவே, அடுத்த வாரம் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
ரோபோவைத் தயாரித்த ஜென்ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விமல் கோவிந்த், “இந்தப் பெருச்சாளி ரோபோவை 9 இளைஞர்கள் கொண்ட குழு தயாரித்தது. இந்த ரோபோவைத் தயாரிக்க 8 மாதங்கள் தேவைப்பட்டது. இந்த ரோபோவை வைஃபை, புளூடூத் மற்றும் கன்ட்ரோல் பேனல் மூலம் இயக்க முடியும். ‘ரிமோட் கார்’ போல் இதை இயக்கலாம். இதில் உள்ள பக்கெட் போன்ற அமைப்பும், துடுப்பு போன்ற அமைப்பும், கழிவுகளை எளிதாக அள்ளி, சுத்தம் செய்யும். இந்தத் திட்டத்துக்கு கேரள அரசின் நீர் வாரியம் முழுமையாக நிதி அளித்து ஊக்கப்படுத்தியது. குறிப்பாக சுத்தம் செய்தல், பாதாளச் சாக்கடைக் குழாய்களைச் சீரமைத்தல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பாதாளச் சாக்கைடையைச் சுத்தம் செய்யும் ஊழியர்கள் உயிரைப் பணயம் வைத்தே கழிவுகளை அகற்றிவருகின்றனர். எனவே, மனிதர்களே சாக்கடையைச் சுத்தம் செய்யும் முறையை மாற்ற இந்தப் பெருச்சாளி ரோபோ உதவும். சமீபத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் நடத்தப்பட்ட சோதனையில், சானிட்டரி நாப்கின்கள், துணிகள், அறுவைச் சிகிச்சை பிளேடுகள் உள்ளிட்ட 30 கிலோ கழிவுகளைப் பாதாளச் சாக்கடையில் இருந்து இந்த ரோபோ அள்ளியது.டெல்லியில் வரும் 22ஆம் தேதி நடைபெறும் ஸ்வச் பாரத் திட்டப் பயிலரங்கில் இந்த ரோபோ குறித்த செயல்விளக்கம் காட்ட அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த ரோபோ தற்போது ஆங்கிலத்தில் கட்டளைகளைப் பிறப்பித்தால் இயங்குகிறது. விரைவில் மாநில மொழிகளுக்கு ஏற்ப மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் சாக்கடையைச் சுத்தம் செய்ய ரோபோ!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:47:00
Rating:
No comments: