ஜெய் ஷா ஊழல்: மோடி பேச வேண்டும்!
பிரதமர் மோடி ஊழலைப் பற்றி பேச விரும்பினால் அமித் ஷா மகன் ஜெய் ஷா ஊழல் குறித்தும் மக்களிடம் பேச வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடக மாநிலச் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் வர உள்ளது. அங்கு ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள ஒரே பெரிய மாநிலம் கர்நாடகா தான். எனவே, அங்கு வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்ற பாஜக மூத்த தலைவர்கள் தீவிரமாக உள்ளனர்.
கடந்த 4ஆம் தேதி பெங்களுருவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, கர்நாடகாவிலிருந்து காங்கிரஸை வெளியேற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதாக கூறினார். மேலும், வரும் மார்ச் மாதத்தில் கர்நாடகாவில் நான்கு நாள்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார் பிரதமர் மோடி.
இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 12) கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, “மோடியவர்களே நீங்கள் ஊழல் பற்றி பேசவிரும்பினால் அமித் ஷாவின் மகன் குறித்து சிறிது பேசுங்கள். ஜெய் ஷா தன்னுடைய நிறுவனத்தின் வருவாயை மூன்று மாதத்தில் 50,000 ரூபாயில் இருந்து ரூ.80 கோடியாக்கினார். இதை நீங்கள் இந்த தேச மக்களிடம் தெரிவிக்க வேண்டும்” என்று கோரினார்.
தொடர்ந்து பேசும்போது, “மோடிஜி நீங்கள் ஊழல் தொடர்பாக பேசுகிறீர்கள். இதைத்தான் முன்னரும் பேசினீர்கள். இப்போது உங்களுக்கு இடது மற்றும் வலது புறத்தில் உள்ளவர்கள் யார் என்று பாருங்கள். ஒருபுறம் சிறைக்குப் போன எடியூரப்பா. மறுபுறம் சிறைக்குச் சென்ற முன்னாள் நான்கு மந்திரிகள். உங்களுக்கு பின்னால் நிற்கும் 11 தலைவர்கள் ஊழல் குற்றச்சாட்டில் ராஜினாமா செய்தவர்கள்” என்று கடுமையாக விமர்சனம் செய்தார் ராகுல் காந்தி.
ஜெய் ஷா ஊழல்: மோடி பேச வேண்டும்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:11:00
Rating:
No comments: