ராணுவத்துடன் ஒப்பீடு: குவியும் கண்டனங்கள்!
ராணுவத்தையும் ஆர்எஸ்எஸ் அமைப்பையும் ஒப்பிட்டுப் பேசிய மோகன் பாகவத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்படப் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிகார் மாநிலம் முசாஃபர்பூரில் நேற்று (பிப்ரவரி 11) நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய மோகன் பாகவத், “ஆர்எஸ்எஸ் ராணுவமோ அல்லது துணை ராணுவமோ அல்ல. ஆனால் ராணுவத்துக்கு நிகரான ஒழுக்க நெறிகள் பின்பற்றப்படும் ஒரு குடும்ப அமைப்பாகும். ஆர்எஸ்எஸ் இயக்கம் மூன்றே நாட்களில் ராணுவ வீரர்களை உருவாக்கும் திறன் கொண்டது. ராணுவம் 6 முதல் 7 மாதப் பயிற்சியில் செய்வதைச் சங்கம் மூன்றே நாட்களில் செய்துவிடும். அதுதான் எங்களின் திறமை. நாட்டுக்கு இக்கட்டான சூழல் ஏற்பட்டால், அரசியல் சாசனம் அனுமதித்தால் நாங்கள் நிச்சயமாக இதைச் செய்து முடிப்போம்" என்று குறிப்பிட்டார்.
அவரது இந்தப் பேச்சு ராணுவத்தை அவமதிக்கும் விதமாக உள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆர்எஸ்எஸ் தலைவரின் இந்தப் பேச்சு ஒவ்வொரு இந்தியரையும் புண்படுத்தியுள்ளது. ஏனெனில் நமது நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களை இது அவமரியாதை செய்துள்ளது.
ஒவ்வொரு வீரரும் வணக்கம் செலுத்தும் நமது கொடியை அவமதித்துள்ளது. நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களையும் நமது ராணுவத்தையும் அவமரியாதை செய்ததற்காக உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன் பாகவத்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
ராணுவத்துக்கு ஒரு அவமரியாதை என்றால் அது தேசத்துக்கும் அவமானம் எனக் காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
கேரள முதல்வர் பினராயி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய ராணுவம் குறித்த மோகன் பாகவத்தின் கருத்து கீழ்த்தரமானது. அரசியலமைப்புக்கு எதிரானது. சங்கிகளுக்கு இந்திய அமைப்புகள் மீது மரியாதை இல்லை என்ற எங்கள் பயத்தை உறுதிசெய்வதாக அமைந்துள்ளது இந்தப் பேச்சு. முசோலினியின் இத்தாலி போன்றும் ஹிட்லரின் ஜெர்மனி போன்றும் இந்தியாவை மாற்ற ஆர்எஸ்எஸ் விரும்புகிறது. இந்து தீவிரவாதம் என்று நாங்கள் எதற்கு எதிராக எச்சரித்துவருகிறோமோ அது குறித்துத்தான் அவர் பேசியுள்ளார். ஆர்எஸ்எஸ் தலைவர் தனது பேச்சுக்கு இந்திய மக்களிடம் மன்னிப்புக் கேட்டே ஆக வேண்டும். பாகவத்தின் இந்தக் கருத்து தொடர்பாகத் தனது அரசின் நிலை என்ன என்பதைப் பிரதமர் மோடி விளக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், மோகன் பாகவத்தின் பேச்சு தவறாக அர்த்தப்படுத்தப்படுவதாக ஆர்எஸ்எஸ் விளக்கமளித்துள்ளது. ராணுவத்தையும் சங்க அமைப்பையும் ஒப்பிட்டு அவர் பேசவில்லை. பொதுச் சமூகத்தையும் சங்க அமைப்பையும் ஒப்பிட்டே அவர் பேசியுள்ளார் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும் #ApologiseRSS என்ற ஹேஷ்டேகின் கீழ் பலரும் தங்களது எதிர்ப்பைப் பகிர்ந்துவருகின்றனர்.
ராணுவத்துடன் ஒப்பீடு: குவியும் கண்டனங்கள்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:24:00
Rating:
No comments: