குரல்கொடுக்க யாருமில்லை: வைகோ
மக்களவையில் தமிழகத்திற்காகக் குரல்கொடுக்க நாதியில்லாமல் போய்விட்டதென வருத்தம் தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. மேலும், மத்திய பட்ஜெட்டில் தமிழகம் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இன்று (பிப்ரவரி 13) காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மத்திய அரசின் 2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தமிழகம் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
“யானைப்பசிக்குச் சோளப்பொரி என்பதைப் போலத்தான் தமிழகத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை, போதுமான நிதி மாநிலத்திற்கு வழங்கப்படவில்லை என்று கூட்டணியில் இருந்துகொண்டே போராடுகிறது தெலுங்கு தேசம் கட்சி. ஆனால், தமிழ்நாட்டுக்கு மக்களவையில் நாதியில்லாமல் போய்விட்டது.
காவிரி நீர், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஷேல் கேஸ் என்று எல்லாப் பிரச்சினைகளிலும், தமிழகத்தை நரேந்திர மோடி அரசு வஞ்சித்துவருகிறது” என்று குற்றம்சாட்டினார் வைகோ. அதிமுக மக்களவை உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதில்லை என்று தெரிவித்தார்.
மேலும், மாநில பாடத்திட்டத்தில் தான் நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும், தமிழகத்தில் புதிதாக சிபிஎஸ்இ பள்ளிகளை அனுமதிப்பது மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் என்றும் வைகோ பேசினார்.
குரல்கொடுக்க யாருமில்லை: வைகோ
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:09:00
Rating:
No comments: