சவூதி ஜனதரியா - அரபு மண்ணில் அனைவரையும் பிரமிக்க வைத்த தமிழ்!
ரியாத்(20 பிப் 2018): சவூதி அரேபியாவின் தேசிய பாதுகாப்புப் படை, ஒவ்வொரு ஆண்டும் ஜனதரியா என்கின்ற கலாச்சாரத் திருவிழாவை, அதன் தலைநகர் ரியாத்தில் நடத்திக் கொண்டு வருகிறது.
அந்தக் கலாச்சாரத் திருவிழாவில், ஒவ்வொரு தே(நே)ச நாடுகளையும் கவுரவித்து, அவர்கள் சார்ந்த கலாச்சாரம், வரலாறு, தொழில்வளம், கல்வி வளர்ச்சி போன்ற விஷயங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அரங்குகளை அமைத்துத் தருவர்!
அந்த வரிசையில், 2018 ஆம் ஆண்டு நடைபெறும் ஜனதரியா கலாச்சாரத் திருவிழாவில் இந்தியாவை கவுரவிக்கும் முகமாக, இந்த ஆண்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் இந்திய நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டு, கடந்த ஃபிப்ரவரி 7ஆம் தேதி அன்று, சவூதி மன்னர் இரண்டு புனித பள்ளிகளின் காவலர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அவர்களும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி. சுஷ்மா சுவராஜ் அவர்களும் ஜனதரியா கலாச்சாரத் திருவிழாவைத் தொடங்கி வைத்தார்கள்!
இதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகித்தது. கடந்த 15 மற்றும் 16 ஆம் தேதிகளில், வியாழன் மற்றும் வெள்ளியன்று தமிழ்நாட்டிற்கான அரங்கு அமைக்கப்பட்டது. ரியாத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு தமிழ் அமைப்புகள் ரியாத் தமிழ்ச் சங்கத்துடன் ஒன்றிணைந்து, அதி நவீனத் தொழில்நுட்பங்களின் உதவியுடன், பிரமாண்டமாக தமிழ் கலாச்சார பாரம்பரியம் மற்றும் வரலாற்றை உலகிற்கு பறைசாற்றும் வண்ணம் அரங்குகள் அமைக்கப்பட்டன.
மேலும் தமிழக சுற்றுலாத் துறையுடன் இணைந்து, தமிழகத்தில் உள்ள சுற்றுலா வாய்ப்புகள் குறித்த கையேடுகளும், துண்டு பிரசுரங்களும், தமிழர்களுக்கும் - அரேபியர்களுக்கும் வரலாற்று மற்றும் மொழி ரீதியான தொடர்புகள் குறித்தும், ஆத்திச் சூடி, திருக்குறள் போன்றவற்றை அரபு மொழியில் மொழி பெயர்த்த விழா மலரும், தமிழர்களின் பாரம்பரிய இனிப்பு வகையும் அரங்கிற்கு வருபவர்க்கு அளிக்கப்பட்டன.
இதில் தமிழர்கள் மட்டுமல்லாமல் இந்தியாவின் அனைத்துப் பகுதி மக்கள் மேலும் சவூதி நாட்டினர் இன்னபிற நாட்டினரும் கலந்துகொண்டு தமிழர் பண்பாடு மற்றும் நாகரீகத்தைக் கண்டு வியந்தனர்.
தகவல் : நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், அஹமது இம்தியாஸ்
சவூதி ஜனதரியா - அரபு மண்ணில் அனைவரையும் பிரமிக்க வைத்த தமிழ்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:52:00
Rating:
No comments: