இஸ்லாமிய வங்கி - முஸ்லிம்களுக்கு மட்டுமானதல்ல! - வி.களத்தூர் எம்.பாரூக்

dubai islamic bank
"இஸ்லாமிய வங்கி தொடங்குவது குறித்து மத்திய அரசுடன் இணைந்து பரிசீலனை செய்தோம். அனைத்து விதமான வாய்ப்புகள் மற்றும் அனைவருக்கும் வங்கி சேவை வழங்க வேண்டும் என்பதால் இஸ்லாமிய வங்கியை கட்டமைக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டோம்". சில மாதங்களுக்கு முன் இஸ்லாமிய வங்கி தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி இவ்வாறு பதிலளித்துள்ளது.
இந்தியாவில் இஸ்லாமிய வங்கி குறித்து நீண்ட காலம் பேசப்பட்டு வருகிறது. பல தரப்பிலும் கோரிக்கை வந்ததின் விளைவாக முந்தைய காங்கிரஸ் அரசு இது தொடர்பாக ஒரு ஆய்வை மேற்கொள்ள ரிசர்வ் வங்கியைப் பணித்தது. அதன்படி 2008 ம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. ஆய்வுகள் பல செய்து "தற்போதைய வங்கி அமைப்பில் இஸ்லாமிய வங்கிக்கென ஒரு பிரத்தியேக பிரிவினை உருவாக்கலாம்" என்று அக்கமிட்டி பரிந்துரைத்தது. அதுமுதல் இஸ்லாமிய வங்கி ஏற்படுத்தப்படும் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. கேரளாவிலும் இதற்கான முன்னோட்டம் நடைபெற்றது. பல தடைகளால் அது நடைமுறைக்கு வரவில்லை.
இஸ்லாமிய வங்கி என்பது முஸ்லிம்களுக்கானது என்றே பலரும் எண்ணிக் கொள்கிறார்கள். அது தவறானது. இதில் அனைத்து மக்களும் இணைந்து பயன்பெறலாம். இஸ்லாமிய வங்கி என்றால் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். "இஸ்லாமிய பொருளாதார வழியில் செல்வத்தை பயன்படுத்துவதற்கும், வளப்பங்கீட்டை சீர்படுத்துவதற்கும், நீதியையும், சமூகப் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதற்கும், சேவைகளை வழங்குவதற்கும், செல்வங்களை ஒன்றுதிரட்டி தொழில் முயற்சிகளில் ஈடுபடுகின்ற நிதிசார் நடவடிக்கைகளை இஸ்லாமிய வரையறைக்குள் மேற்கொள்கின்ற நிறுவனமே இஸ்லாமிய வங்கியாகும்" என்று முனைவர் அஹமது நஜ்ஜார் குறிப்பிடுகிறார்.
இஸ்லாமிய வங்கி 1975 ம் ஆண்டு துபையில் முதன்முதலில் தொடங்கப்பட்டது. குறுகிய காலத்திலேயே இன்று மலேசியா, ஜப்பான், ஐரோப்பா, கனடா, இலங்கை போன்ற ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளில் இஸ்லாமிய வங்கி செயல்பட்டு வருகிறது. இதன் நன்மையை உணர்ந்துகொண்ட முஸ்லீம் அல்லாத நபர்களும் இதில் அதிக அளவில் பங்கெடுக்கிறார்கள். இன்று இஸ்லாமிய வங்கி முதலீடுகள் ஆண்டுக்கு 15% - 20% வளர்ச்சி அடைந்து வருவதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணம். இஸ்லாமிய வங்கியின் சிறப்பு என்னவென்றால் முதலீட்டில் வருகிற இலாபம், நட்டம் ஆகிய இரண்டையும் பகிர்ந்துக்கொள்ள கூடிய தன்மையை பெற்றிருக்கிறது. பொருளியல் சமத்துவத்திற்கான அடிப்படையாக இது இருக்கிறது.
வட்டியை முற்றிலுமாக தவிர்த்துக் கொள்கிறது. முதலீட்டுக்கும் வட்டி கிடையாது. கடனுக்கும் வட்டி கிடையாது. ஆனால் மற்ற வங்கிகளைவிட அதிக லாபத்தை தன் முதலீட்டார்களுக்கு வழங்குகிறது. வங்கிகள் செய்யும் முதலீட்டின் மூலம் ஈட்டுகிற பணம்தான் வங்கிக்கு லாபம். அந்த லாபத்தை வங்கியும், முதலீட்டாரும் பங்கிட்டுக் கொள்கிறார்கள். நட்டத்திலும் அப்படியே. உதாரணத்திற்கு இலங்கையில் செயல்படும் "இஸ்லாமிய வங்கிகள் நிதி நிறுவனங்களின் மொத்த சொத்து மதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு செல்லும் அதே நேரத்தில் வாடிக்கையாளர்களின் தொகையும் அதிகரித்து வருகிறது" என்று புள்ளிவிபரம் ஒன்று சுட்டுகிறது.
உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது இஸ்லாமிய வங்கி சிறப்பாக தன்னிறைவுடன் இயங்கியது. அப்போதுதான் பாரிய அளவிலான கவனத்தை அது பெற்றது. "மேற்குலக வங்கிகள் இஸ்லாமிய நிதி அமைப்புகளின் விதிகளை அமல்படுத்தி இன்றைய பொருளாதார சிக்கல்களில் திணறும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்" என்று உலக கத்தோலிக்க தலைமை பீடமான வாடிகன் அப்போது கூறியது.
இஸ்லாமிய வங்கி மதுபானங்கள், சூதாட்டம், புகையிலை, விபச்சாரம் போன்றவற்றில் முதலீடு செய்வதில்லை. அதேபோல் பெருமளவில் கடன் வைத்திருக்கும் நிறுவனங்களிலும் முதலீடு செய்வதில்லை. இதுபோன்ற பல காரணங்களால் மக்கள் இந்த வங்கியின்பால் ஈர்க்கப்படுகிறார்கள். "உலகம் முழுக்க கடந்த ஐந்து வருடங்களில் வர்த்தக வங்கிகள் 2% வளர்ச்சி பெற்றிருக்கின்றன. அதேகாலத்தில் இஸ்லாமிய வங்கிகள் 12% - 15% வளர்ச்சி கண்டிருக்கிறது" என்று தோஹா வங்கியின் தலைமை செயல் அதிகாரி சீத்தாராமன் குறிப்பிட்டதை இங்கு நினைவில் கொள்வது பொருத்தமானது.
வீடு கட்ட விரும்புபவர்கள், தொழில் செய்ய விரும்புபவர்கள், மாணவர்கள், ஏழை எளிய மக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களும் கடன் வாங்கி அதற்கு வட்டி கட்ட முடியாமல் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். கந்து வட்டி கொடுமையால் பலரது குடும்பங்கள் சீரழிந்து வருகிறது. விவசாயிகள் கடனிற்கு வட்டிக்கட்ட முடியாமல் தற்கொலை செய்துகொள்கிற அவலநிலை அதிகரித்து வருகிறது. இவற்றை அடியோடு மாற்றக்கூடிய வல்லமையை இஸ்லாமிய வங்கி பெற்றிருக்கிறது. மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பாராமுகமாக நடந்துகொள்ளாமல் தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு இஸ்லாமிய வங்கியை கட்டமைக்க முன்வர வேண்டும். இஸ்லாமிய வங்கி முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து மக்களுக்கும் நீடித்த பயனைத்தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

வி.களத்தூர் எம்.பாரூக்
thanks to :
http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/34560-2018-02-08-08-57-43
இஸ்லாமிய வங்கி - முஸ்லிம்களுக்கு மட்டுமானதல்ல! - வி.களத்தூர் எம்.பாரூக் இஸ்லாமிய வங்கி - முஸ்லிம்களுக்கு மட்டுமானதல்ல! - வி.களத்தூர் எம்.பாரூக் Reviewed by நமதூர் செய்திகள் on 00:13:00 Rating: 5

No comments:

Powered by Blogger.