வங்கி மோசடிகளில் அரசின் பங்கு இருக்கிறதா?
பா.நரேஷ்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த நிதி மோசடி அம்பலமானது பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் என்பது நம்மை வந்தடைந்த சேதி. ஆனால், 2017லேயே அம்பலப்படுத்தப்பட்ட இந்த விவகாரம், நீரவ் மோடிக்குத் தெரியும் என்று சொல்லப்படுகிறது. 2018 ஜனவரி 1ஆம் தேதி அவர் இந்தியாவை விட்டு வெளியேறினார். அதன் பிறகு பிப்ரவரி மாதம் 17, 18 தேதிகளில்தான் முழு மோசடியும் அம்பலமானது. அதற்கு அடுத்த நாள், பிப்ரவரி 19ஆம் தேதி நிதி மோசடி நிகழ்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் பிராடி ஹவுஸ் கிளைக்கு மத்தியப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மோசடி வெளிவரப் போகிறது என்று நீரவ் மோடிக்கு எப்படி முன்னதாகவே தெரிந்தது எனும் கேள்வியைவிட மிகப் பெரிய செய்தி என்னவென்றால், பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களில் உடன் செல்லும் தொழில் துறையினருள் நீரவ் மோடி முக்கியமானவர் என்பதுதான். பிரதமருக்கு இவ்வளவு நெருக்கமாக இருக்கும் ஒரு தொழிலதிபர், அவருக்குத் தெரியாமல் இவ்வளவு பெரிய மோசடியில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்வியைத் தாண்டி, உயர் மட்டத்தில் இருப்பவர்களின் உதவியில்லாமல் அவரால் தப்பிச் செல்ல முடியுமா என்பதுதான்.
மேலும், நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த மோசடிகள் அனைத்தும் நடப்பது பொதுத் துறை வங்கிகளில்தான். அதாவது, அரசாங்கம் பங்கு வகிக்கும் அல்லது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் வங்கிகளில்தான்.
மோசடி நடக்க அரசே துணை?
இந்தப் பொதுத் துறை வங்கிகளின் லட்சணத்தை இவ்வாறு விவரிக்கிறார் ‘தி பிரிண்ட்’ இதழின் தலைவரும் தலைமை ஆசிரியருமான சேகர் குப்தா:
“இந்தியாவில் உள்ள சில பொதுத் துறை வங்கிகள் 100 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டுவருகின்றன. எஸ்.பி.ஐ உட்பட அனைத்து வங்கிகளையும் சேர்த்தாலும் அவற்றின் சந்தை மதிப்பு வெறும் 23 ஆண்டுகளே ஆன எச்.டி.எப்.சியின் சந்தை மதிப்பைவிடக் குறைவாக இருக்கிறது. பொதுத் துறை வங்கிகளின் செயல்பாடு இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது. நிதி நிர்வாகத்தைச் சரியாகக் கையாளாமல் இருப்பது அரசு நிறுவனங்களுக்கு வழக்கம்தான். அவர்களை ஒன்றும் செய்ய முடியாது. மேலும் மேலும் மோசடி நடக்க துணைபோகும் வகையில் அரசே பணத்தை வாரி இறைக்கும். இதனால் பலன் அடைவது நகை வியாபாரிகளான மோடிகளும், மல்லையா மற்றும் நூற்றுக்கணக்கான பணக்கார வேடதாரிகளும்தான்” என்கிறார்.
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கிகளில் பஞ்சாப் நேஷனல் வங்கி இரண்டாம் இடத்தில் இருக்கிறது. பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு மும்பையில் உள்ள பெரிய கிளைகளுள் இந்த பிராடி ஹவுஸ் கிளை இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த, மிக அதிகமான பணப் பரிவர்த்தனை நடக்கும் ஓர் இடத்தில்தான் இவ்வளவு பெரிய மோசடி நடந்துள்ளது என்பது சந்தேகமே இல்லாமல் சில விஷயங்களை நமக்கு ஆணித்தரமாகத் தெரிவித்து இருக்கிறது.
தனியார்மயமாக்குவதுதான் நோக்கமா?
அவற்றைத் தெரிந்துகொள்ளும்முன், நாம் சில புரிதல்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இந்தச் செயல்கள் யாவும் வங்கிகளைத் தனியார்மயம் ஆக்கத்தான் நடக்கிறது என்ற பொத்தாம் பொதுவான கருத்துடன் நம் எதிர்ப்பைக் காட்டி விலகிவிடக் கூடாது. ஏனெனில், வங்கிகளைத் தனியார்மயம் ஆக்குவது குறித்த எந்த யோசனையும் அரசுக்குக் கிடையாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி. அது மட்டுமின்றி, தேவைப்பட்டால் சட்ட விதிமுறைகளை மேலும் கடுமையாக்குவோம் என்றும் கூறியுள்ளார்.
ஏனெனில், அரசின் கையிலேயே இருந்தால்தானே, தன்னுடைய அரசுக்குத் தேவையான பணக்காரர்களுக்குத் தங்கு தடையின்றி கடன்களை வாரி வழங்க முடியும்.
இதைவிட அதிர்ச்சியான செய்தி ஒன்றை, தொழில் துறை அமைப்பான அசோசெம் தெரிவித்திருக்கிறது.
“தனியாருக்கு நிர்வாகத்தில் வாய்ப்பளிக்கும்போது முதலீட்டாளர்களின் நலன் காக்கப்படும். மக்களின் பணமும் கொள்ளையடிக்கப்படாமல் தடுக்கப்படும். மத்திய அரசு ஓர் அளவுக்குத்தான் அரசு வங்கிகளுக்கு மறு முதலீட்டு நிதி உதவியை அளிக்க முடியும். ஏனென்றால், அனைத்து முதலீட்டு நிதியும் வரி செலுத்துபவர்களின் பணமாகும். ஆனால், அரசு வங்கிகள் தொடர்ந்து இதுபோல வாராக் கடனிலும், மோசடிகளிலும் சிக்கி மக்களின் பணத்தை வீணடித்து வருகிறது” என்று அசோசெம் கூறியுள்ளது.
மறுமுதலீட்டு நிதி என்பது என்ன? வங்கிகள் திவாலாகும் நிலையில் வங்கிகளைக் காப்பாற்ற அரசாங்கம் வழங்குவது ‘மறு முதலீட்டு நிதி’. இந்த நிதி, வரி செலுத்துபவர்களின் பணத்திலிருந்து கொடுக்கப்படுகிறது. இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், பல மோசடிகள் செய்து பெரும் பணக்காரர்கள் ஏமாற்றிய பணத்தைத் திரும்பப் பெற முடியாமல் போகும்பட்சத்தில், அந்த ஏமாற்றப்பட்ட பணத்தால் வங்கிகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்யும் திட்டத்தில் ஒன்றாக மக்களின் வரிப்பணத்தில் ஒரு பகுதி நிதி உதவியாக வங்கிகளுக்குக் கொடுக்கப்படும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், சாமானியர்களின் பணத்தைப் பெரும் பணக்காரர்கள் மறைமுகமாகக் கொள்ளையடிப்பதற்கான ஏற்பாடு.
அந்தப் பெரும் பணக்காரர்களுள் வெளிச்சத்துக்கு வந்த முதலைகள் லலித் மோடி, மல்லையா, நீரவ் மோடி.
இது மட்டுமல்லாமல், ஒரு வங்கி திவாலானால், பொதுமக்கள் வைத்துள்ள சேமிப்புத் தொகையை வைத்து வங்கியை மீட்கலாம் எனும் மத்திய அரசின் உத்தரவையும் மனதில் பதித்துக்கொள்ளுங்கள். இப்போது, ஒரு சம்பவத்தை இதனுடன் தொடர்புபடுத்திப் பாருங்கள்.
எஸ்.பி.ஐ வங்கி விதித்த குறைந்தபட்ச பண வைப்புத்தொகை திட்டத்தாலும், அதன் அபராதங்களாலும், பணமதிப்பழிப்பு நடவடிக்கையாலும், பல கோடி மக்களுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்க வைத்து அவற்றில் பண இருப்பைத் தக்கவைத்ததாலும், எஸ்.பி.ஐ வங்கிக்குக் கணிசமான தொகை இருப்பு வைக்கப்பட்டது. எனினும், இந்த ஆண்டில் எஸ்.பி,ஐயின் நஷ்டம் என்பது சில ஆயிரம் கோடிகள் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. மல்லையா ஏமாற்றிச் சென்ற பல ஆயிரம் கோடி ரூபாய்களைத் திருப்பி வாங்க முடியாமல் போக்கெழுதிவிட்டதால், எஸ்.பி.ஐ வங்கி திவாலாகும் என்று தெரிந்து, மேற்சொன்ன பல ’திட்டங்கள்’ மூலம் மக்களின் பணத்தைத் தன்னிடம் இருப்பு வைத்ததன் மூலம் எஸ்.பி.ஐ வங்கி தப்பித்திருக்கிறது.
“இந்தப் பெரும் பணக்காரர்கள், மக்களின் பணத்தைத்தான் மறைமுகமாக சுருட்டிக்கொண்டு ஓடுகின்றனர். இதை ஈடு செய்ய அரசு, நடுத்தர மக்களை வாட்டி வதைக்கிறது” என்ற செய்தியைதான் வெவ்வேறு வார்த்தைகளில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியும், காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தியும் இன்னும் பலரும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.
இவை அனைத்தோடும் சேர்த்து அசோசெம் போன்ற தொழில் துறை அமைப்புகள் பொதுத் துறை வங்கிகளில் அரசாங்கத்தின் பங்கை 50 சதவிகிதம் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துவருவதும் கவனிக்கப்பட வேண்டியதுதான்.
மேலும் பல மோசடிகள்
அதுவும் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த நிதி மோசடி வெளியே வந்த சில நாள்களிலேயே, நாட்டின் பல்வேறு மூலைகளில் நடந்த நிதி மோசடிகளும் ஒரேயடியாக வெளிவருவதுதான். அதுவும் ஆச்சர்யத்தின் உச்சமாக, ஆறு மாதங்களுக்கு முன்பு அளிக்கப்பட்ட வங்கி மோசடி புகார் ஒன்றைக் குறித்துத் தற்போதைய சூழலில் நடவடிக்கை எடுப்பதுதான். ஓரியன்டல் வங்கியானது டெல்லியைச் சேர்ந்த அணிகலன்கள் நிறுவனமான ’துவாரகா தாஸ் சேத் இண்டர்னேஷனல்’ மீது ஆறு மாதங்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளது. அதற்கு தற்போதுதான் சிபிஐ ரூ.390 கோடி மோசடி வழக்கைப் பதிவு செய்துள்ளது. மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் 11,300 கோடி ரூபாய் மோசடி அம்பலமான சில நாள்களிலேயே ரோட்டோமேக் பேனா நிறுவனத்தின் உரிமையாளர் விக்ரம் கோத்தாரி ரூ.800 கோடிக்கும் மேல் கடன் பெற்று திரும்ப செலுத்தாதது குறித்த மோசடி புகார் எழுப்பப்பட்டது.
இந்த மோசடிகளுக்கான விதை 1969இல் விதைக்கப்பட்டது. இந்திரா காந்தி காங்கிரஸ் உடைக்கப்பட்டபோது, பெரிய தனியார் வங்கிகளை அரசுடைமையாக்குவதாக அறிவித்தார். 1991ஆம் ஆண்டில் பொருளாதார சீர்திருத்தங்கள் அமலாகும்வரை பல வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்டன. 1991க்குப் பிந்தைய தாராளமயமாக்கல் கொள்கையால் இந்திய வங்கித் துறை மிகப் பெரிய வளர்ச்சி அடைந்தது. ஆனால், வளர்ச்சியைவிட அதிகமான மோசடிகளும் நிகழ்ந்துவருகின்றன. ஒவ்வொரு நான்கு மணி நேரத்துக்கும் குறைந்தபட்சம் ஒரு வங்கித் துறை ஊழியராவது மோசடியில் ஈடுபடுகிறார் என்று ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
மேலும் 2013 முதல் 2016 வரையிலான காலத்தில் வங்கிகளில் நிகழ்ந்த மோசடியால் ஏற்பட்ட நஷ்டம் என்பது ரூ.22,743 கோடியாக உள்ளது. இந்த மோசடிகளைக் குறைக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், முதுநிலை ஊழியர்களே மோசடியில் ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கிறது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஒரு வங்கி திவாலானால், பொதுமக்கள் வைத்துள்ள சேமிப்புத் தொகையை வைத்து வங்கியை மீட்கலாம் எனும் மத்திய அரசின் உத்தரவு, இது திட்டமிட்ட சுரண்டல் என்பதை நிரூபிக்கிறது. வங்கிகளில் பொதுமக்களின் சேமிப்புத் தொகை மட்டும் ரூ.110 லட்சம் கோடி என்ற அளவில் உள்ளது. இந்த மோசடிகள் அனைத்திலும் தலையாயதாக, அரசு ஆவணம் மற்றும் அரசு சலுகை சார் மோசடி என்பது 46.4 சதவிகிதம். கடன் சார்ந்த மோசடி வெறும் 2.4 சதவிகிதம்தான்/ அதாவது அரசு ஏதோ ஒருவகையில் சம்பந்தப்பட்ட மோசடிகள்தான் அதிகம்.
அப்படியானால், அரசாங்கத்தின் உதவி இல்லாமல் இந்த மோசடிகள் நடந்திருக்க முடியாது என்ற முடிவுக்கு நாம் வரலாம் அல்லவா?
வங்கி மோசடிகளில் அரசின் பங்கு இருக்கிறதா?
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:05:00
Rating:
No comments: