ஜெயலலிதா மரணத்தில் அப்பல்லோ மீது வைக்கப்படும் பகீர் சந்தேகங்கள்!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தின் மீது இன்று வரை பல்வேறு சந்தேகங்களை வைக்கின்றனர் மக்கள். இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் அப்பல்லோ மருத்துவமனை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது.
 
 
ஜெயலலிதா விவகாரத்தில் ஆரம்பம் முதலே அப்பல்லோ மருத்துவமனை வெளிப்படைத்தன்மை இல்லாமல் நடந்து கொண்டது. இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார் சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தின் புகழேந்தி. ஜெயலலிதா விவகாரத்தில் மருத்துவமனையின் செயல்பாடுகள் அவ்வளவு திருப்தியாக இல்லை என்கிறார் இவர்.
 
கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி காலமான ஜெயலலிதாவின் மரணத்தில் மருத்துவரீதியாக பல கேள்விகளுக்கு இதுவரையில் பதில் இல்லாமல் இருப்பது சோகத்தையும் மனவேதனையையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது என கூறுகிறார் மருத்துவர் புகழேந்தி.
 
டிசம்பர் 4-ஆம் தேதி மாலை ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு, இதயத் துடிப்பு தற்காலிகமாக நின்று போனது. அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார் என்று அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
 
அதன் பின்னர் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்துவிட்டதால் எக்மோ (ECMO) சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவ அறிக்கை வெளியானது. ஆனால், ஆச்சரியமாக அதற்கெல்லாம் சில தினங்களுக்கு முன்பு வெளியான அப்போலோ அறிக்கையில், அவர் பூரண குணமடைந்துவிட்டார். அவருடைய உறுப்புகள் அனைத்தும் குறிப்பாக நுரையீரல் உட்பட நன்றாகச் செயல்படுகின்றன என கூறப்பட்டது.
 
அவரது உடல் பின்னடைவைச் சந்திக்க எவ்வளவு நேரம் ஆனது என்பது மருத்துவரீதியாக மிகமிக முக்கியமானது. முதல்வரின் இதயத் துடிப்பு சீராக 40 நிமிடம் ஆனது என முதலில் செய்தி வெளியானது. அப்படியெனில் மூளைச் சாவு ஏற்படுவதைத் தடுத்திருக்க முடியாது. ஏனென்றால், 5 முதல் 8 நிமிடங்கள்தான் நமது மூளையால் ரத்த ஓட்டமின்றி உயிர் வாழ முடியும். அப்படியெனில் எக்மோ பொருத்தப்பட்டது உண்மையா?
 
பொதுவாக மூளைச் சாவு ஏற்படுவதைத் தடுக்கவே எக்மோ கருவி பொருத்தப்படும். அன்று இரவு 11.30 மணிக்கு வெளியான அப்போலோ அறிக்கையில், உடலில் உள்ள பிற காரணங்களால் அவரைக் காப்பாற்ற முடியாமல் போனதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த பிற காரணங்கள் எவை என்பது துளியளவுகூட விளக்கப்படவில்லை.
 
கார்டியாக் அரெஸ்ட் வந்த ஒருவருக்கு முதலுதவி தராமல் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு பத்து சதவீதம் குறையும் என மருத்துவம் சொல்கிறது. ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரெஸ்ட் வந்தபோது, எக்மோ கருவி எங்கிருந்தது? அவருக்கு அருகே கொண்டு செல்ல எவ்வளவு நேரமானது? அதை பொருத்துவதற்கு எவ்வளவு நேரமானது?
 
கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுவதற்கு முந்தைய நாளில், முதல்வர் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், மருத்துவர் அறைக்குள் நுழைந்தார். அப்போது அவருக்கு லேசான மூச்சுத் திணறல் ஏற்பட்டது என்று செய்தி வெளியானது. இன்னொரு தகவலோ, மருத்துவர் நுழையும்போது முதல்வர் அவரை வரவேற்கவோ புன்னகைக்கவோ இல்லை. அப்போதே அவருக்கு மூச்சுத் திணறல் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகின.
 
அப்படியானால், அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதை மருத்துவர்களோ நர்சுகளோ கவனிக்கவில்லையா? பகல் நேரத்தில் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படவில்லை என அப்போலோ அறிக்கை சொல்கிறது. எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, சனிக்கிழமை இரவு முழுவதும் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படவில்லை. இதன் விளைவாகவே இப்படியொரு நிலை ஏற்பட்டிருக்கலாம் என அச்சப்படுகிறோம்.
 
செயற்கை சுவாசத்தை மாற்றி அமைத்தது அப்போலோ இதய நோய் சிறப்பு மருத்துவர் ராபர்ட் மாவ். இது அவர் தன்னிச்சையாக எடுத்த முடிவா அல்லது உயர் மருத்துவ அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த முடிவா, யாருடைய உத்தரவின்பேரில் இவ்வாறு செய்யப்பட்டது என்பதையும் விளக்க வேண்டும் என்கிறார் மருத்துவர் புகழேந்தி.
ஜெயலலிதா மரணத்தில் அப்பல்லோ மீது வைக்கப்படும் பகீர் சந்தேகங்கள்! ஜெயலலிதா மரணத்தில் அப்பல்லோ மீது வைக்கப்படும் பகீர் சந்தேகங்கள்! Reviewed by நமதூர் செய்திகள் on 23:34:00 Rating: 5

No comments:

Powered by Blogger.