உண்மைக்காக ஒரு புத்தகம் - வி.களத்தூர் எம்.பாரூக்


"அச்சமின்மை என்பதே இப்போது போதிக்கப்பட வேண்டிய ஒரே மதம். அச்சம்தான் எல்லா அழிவுகளுக்கும் காரணம்" என்கிறார் விவேகானந்தர். ஆனால் அச்சத்தின் பிடியிலேயே முஸ்லிம்  சமூகத்தை வைத்திருக்கவே இங்குள்ள ஆதிக்க சக்திகள் விரும்புகின்றன. அதனால்தான் முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு கட்டுக்கதைகளும், அவதூறு பிரச்சாரங்களும் அனுதினமும் நடத்தி வருகிறார்கள். "முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல, ஆனால் தீவிரவாதிகள் அனைவரும் முஸ்லிம்களே" என்ற அவர்களின் விஷப்பிரச்சாரம் இன்று பொதுக்கருத்தாக மாறிப்போயுள்ளது.

இந்தியாவே பற்றி எறிந்த காலகட்டங்களில்கூட தமிழகம் என்றும் அமைதியையே சுவாசித்திருக்கின்றன. அப்படிப்பட்ட அமைதிப் பூங்காவில் நடைபெற்ற மிகப்பெரிய கோரசம்பவம்தான் கோவை கலவரமும், அதற்கு எதிர்வினையாக நடைபெற்ற குண்டுவெடிப்பும். அந்த இரண்டு சம்பவங்களுக்கு பிறகு களத்தில் இறங்கி துணிச்சலாக பல பணிகளை ஆற்றிய முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.வி.அப்துல் நாசர் தனது நேரடி அனுபவங்களை விவரிக்கும் நூல்தான் "கோவை கலவரத்தில் எனது சாட்சியம்". இதை எளிமையாக எழுத்தாக்கம் செய்துள்ளார் எழுத்தாளர் பழனி சஹான்.

கோவையில் நவம்பர் 29, 30 தேதிகளில் மிகப்பெரிய கலவரம் வெடிக்கிறது. 24 அப்பாவி முஸ்லிம்களின் உயிர்கள் காவு வாங்கப்படுகின்றன. 500 கோடிக்கும் மேற்பட்ட சொத்துக்கள் சிதைக்கப்படுகின்றன. தமிழக அரசும், காவல்துறையும், இந்துத்துவ அமைப்புகளும் இணைந்து ஒரு சிறுபான்மை சமூகத்திற்கெதிரான 'இனப்படுகொலை' செய்திருப்பதை இந்நூல் வெளிப்படையாக பேசுகிறது; படம்பிடித்துக்காட்டுகிறது. காவல்துறையின் ருத்ரதாண்டவத்தை அம்பலப்படுத்துகிறது. அவர்களின் முஸ்லிம் விரோதப்போக்கை தோலுரித்துக்காட்டுகிறது. "காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் குண்டடிப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார் அய்யுப்கான். தனது அண்ணன் அய்யுப்கானை காணச் சென்றிருக்கிறார் ஆரிப். இவரை காவல்துறையினர் அரசு மருத்துவமனையில் வைத்தே வெட்டிக் கொலை செய்திருக்கின்றனர். சஹீர் பானு என்ற பெண்மணியின் முகத்தில் ஆசிட் அடித்து முகத்தை சிதைத்திருக்கிறார்கள். ஹபீப் ரஹ்மான், ஹாரிஸ் என்பவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்திருக்கிறார்கள்". இது சிறு உதாரணம்தான். இதுபோன்ற பல காட்டுமிராண்டித்தனங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. 

இவை எல்லாம் செல்வராஜ் என்கிற ஒரு இந்து காவலரின் மரணத்திற்கு எதிர்வினையாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த செல்வராஜ் என்பவரோ ஒரு கிருத்தவர். அவரின் முழு பெயர் அந்தோணி செல்வராஜ் என்பதாகும். இதை மறைத்து அவர் ஒரு இந்து செல்வராஜாக காட்டப்பட்டு இந்து வெறியை ஊட்டி மாபாதக செயலை செய்திருக்கிறார்கள். பேச வேண்டியதை பேசாமல், செய்யவேண்டியதை செய்யாமல் இருப்பது உன்னை தோல்வியின் அருகில் கொண்டு சென்று விடும் என்று சொல்வதற்கேற்ப திட்டமிட்டு கலவரத்தை நடத்தி அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவித்த காவல்துறையினரை கண்டிக்கும் அதே நேரத்தில் அந்த காவலர் அந்தோணி செல்வராஜ் என்பவரை கொன்ற முஸ்லிம் இளைஞர்களையும் கடுமையாக கண்டிக்கிறார் நாசர். 

"ஓர் உயிரை அநியாயமாகக் கொலை செய்தவன், ஒட்டுமொத்த மக்களையும் கொலை செய்ததற்கு ஒப்பாவான்" என்கிற திருக்குரானின் வசனத்தை சுட்டிக்காட்டுகிறார். கோவை கலவரத்திற்கு பிறகான அவருடைய களப்பணி அனைவரும் அறிய வேண்டியதாகும். களத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டது, அறிக்கை தயாரித்தது, முதல்வரிடம் முஸ்லிம் சமூகத்திற்காக முறையிட்டது, சட்டமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பேசியது என அனைத்துமே இந்நூலில் பதிவு செய்துள்ளார்.

அதேநேரம் கோவை கலவரத்திற்கு எதிர்வினையாக சில தவறான போக்கு கொண்ட இளைஞர்களால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பினால் மனம் வெதும்பி ஒதுங்கி இருந்திருக்கிறார் நாசர். மகாத்மா காந்தியின் பேரன் துஷார் அருண் காந்தியுடனான சந்திப்பிற்கு பிறகு அவருடைய களப்பணி மீண்டும் துவங்குவதாக குறிப்பிடுகிறார். "குற்றவாளி என்று அரசு ஒருவரை கைது செய்வதாலேயே அவரை குற்றவாளி என்று சொல்லிவிட முடியாது. அவரைக் குற்றவாளி என்று சொல்ல அரசுக்கு எப்படி உரிமை உள்ளதோ, அதேபோலத்தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்கவும் அவருக்கு எல்லா உரிமைகளும் உண்டு. இந்த சம்பவத்தை நீங்கள் ஆராய வேண்டும். அரசின் கவனத்திற்கு இவற்றைக் கொண்டு போக வேண்டிய பொறுப்பும் உங்களுக்கு உண்டு" என்று துஷார் கூறியது ஒதுங்கி இருந்த நாசரின் மனதில் புதிய வெளிச்சத்தை பாய்ச்சிருக்கிறது. தனது செயல்பாட்டை முன்பைவிட தீவிரமாக அமைத்துக்கொள்கிறார்.

முதல்வரை சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக பேசுவது, சிறைவாசிகளை சிறையில் சந்தித்து காவலர்களின் கொடுமையிலிருந்து காப்பாற்ற முனைவது, அவர்களின் குடும்பத்தை சந்தித்து அவர்களுக்கான மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபடுவது, சிறையில் இருந்த 26 சிறுவர்களை விடுவிக்க முயன்று அதில் வெற்றி கண்டது, அரங்கக்கூட்டங்கள் நடத்தி முஸ்லிம் சமூகம் மத்தியில் நிலவிய அச்சத்தை போக்க முயன்றது, அதற்காக PLEA என்ற அமைப்பை கட்டியது என அவருடைய களப்பணிகள் படிக்க படிக்க கண்முன் காட்சிகளாக விரிகின்றன. அவரின் இந்த பணிக்காக முஸ்லிம் சமூகத்தின் சிலராலேயே ஒதுக்கப்பட்டதும், ஓரங்கட்டப்பட்டதும், உதவிகள் செய்யாமல் புறக்கணிக்கப்பட்டதும் வேதனையுடன் குறிப்பிடுகிறார். சிறையில் சிறைவாசிகள் பட்ட கஷ்டங்களையும், வெளியில் சிறைவாசிகளின் குடும்பத்தினர்கள் பட்ட துயரங்களையும் படிக்கும்போது கண்களில் கண்ணீர் பெருக்கெடுப்பதை தவிர்க்க முடியவில்லை.

குண்டுவெடிப்பு வழக்கில் அப்பாவிகளுக்காக, மனித உரிமைகளுக்காக போராடிய அதே நேரத்தில் குண்டுவெடிப்பை நிகழ்த்தி 58 மனிதர்களின் உயிர்களை பறித்த கொடூர மனங்கொண்டவர்களை கடுமையாக கண்டிக்கிறார். "அநீதியாக ஒரு உயிரைக் கொன்றவன் என்னைச் சார்ந்தவனல்ல" என்ற நபிகள் நாயகத்தின் கூற்றை முன்வைத்து அவர்கள் இஸ்லாத்திற்கெதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதினை உரக்க பதிவு செய்திருக்கிறார்.

"உண்மை என்பது ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் இருக்கிறது" என்று மால்கம் எக்ஸ் கூறியதுபோல இந்த புத்தகம் உண்மையின் பக்கம் நிற்கிறது. நீதிக்காக எல்லா தரப்பு அநீதிகளையும் பாரபட்சம் இல்லாமல் கண்டிக்கிறது. "கோவை கலவரத்தில் எனது சாட்சியம்"  அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய வரலாற்று பொக்கிஷம். குறிப்பாக நடுநிலை மனதுடன். உண்மை வரலாற்றை பிசிறில்லாமல் படைத்ததற்தாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.வி.அப்துல் நாசரும், எழுத்தாளர் பழனி சஹானும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

- வி.களத்தூர் எம்.பாரூக்
உண்மைக்காக ஒரு புத்தகம் - வி.களத்தூர் எம்.பாரூக் உண்மைக்காக ஒரு புத்தகம் - வி.களத்தூர் எம்.பாரூக் Reviewed by நமதூர் செய்திகள் on 04:21:00 Rating: 5

No comments:

Powered by Blogger.