பெண்கள் உரிமை - சட்டத்திருத்தம் அவசியம்!


திருவாரூரில் நடைபெற்ற திராவிடர் மகளிர் எழுச்சி மாநாட்டில் பெண்கள் உரிமையை நிலைநாட்ட சட்டத்திருத்தம் அவசியம் என்பது போன்ற 36 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
திருவாரூரில் திராவிடர் மகளிர் எழுச்சி மாநாடு நடைபெற்றது. அதில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்பட திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு, 33 சதவிகித இடஒதுக்கீடு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், விதவைப் பெண்களுக்கு முன்னுரிமை போன்ற 36 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
மக்கள் தொகையில் சரி பகுதியாக இருக்கும் பெண்களுக்கு அனைத்துத் துறைகளிலும் 50 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்பட ஆவன செய்யுமாறு மாநில, மத்திய அரசுகளையும் தனியார்த் துறைகளையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் நீதிபதி பதவிகளில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க மத்திய அரசு வழிசெய்ய வேண்டும் என்றும், நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படாமல் 1996ஆம் ஆண்டு முதல் முடக்கப்படுவதற்குக் காரணமான அனைத்துத் தரப்பினருக்கும் இம்மாநாடு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டது. இனியும் காலதாமதமின்றி நடப்புத் தொடரிலேயே அந்த சட்டத்தை நிறைவேற்றிக் கொடுக்குமாறு அனைத்துக் கட்சிகளையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. அதில் உள்ஒதுக்கீடு கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்பதையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. தவறும்பட்சத்தில் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் அனைத்துத் தரப்புப் பெண்களையும் குறிப்பாக மாணவிகளை ஒன்றுதிரட்டி வீதிக்கு வந்து கடுமையாகப் போராட நேரிடும் என்று எச்சரிக்கை விடப்பட்டது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளும் வளர்ந்து வருகின்றன. ஆண்டுக்கு 12 சதவிகிதம் அதிகரித்து வருவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது. இது மிகவும் வெட்கப்படத்தக்கதாகும். சட்டம் வெறும் காகிதமாக இல்லாமல் நகமும், பல்லும் உள்ளதாக மாற்றப்பட்டு, செயல்பாட்டிற்கு வரவேண்டும் என்றும் இதுபோன்ற குற்றங்களை விசாரிக்கும் காவல்துறைப் பிரிவில் பெண்களையே அதிகமாக நியமிக்குமாறும் மாநில, மத்திய அரசுகளை மாநாடு வலியுறுத்தியது. துணைவரை இழந்த பெண்களைத் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்குதல், விதவைகளுக்குப் பூச்சூட்டல் (அத்தன்மையை அழிக்க) போன்றவற்றிற்கு முன்னிலைப்படுத்துதல் என்பதை முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டுமாய் இம்மாநாடு கழகத் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறது. அதன் மூலமாகச் சமுதாயத்தில் ஒரு விழிப்பை ஏற்படுத்த முடியும்.
மாமியாரை மருமகள் எட்டி உதைத்தால் அது ஒன்றும் குற்றமல்ல என்றும், என் மகன் உன்னை விவாகரத்து செய்து விடுவான்! என்று மாமியார் மிரட்டுவதும் குற்றமல்ல; இது குற்றவியல் பிரிவு 498இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமல்ல என்று உச்ச நீதிமன்ற அமர்வு (நீதிபதிகள் எஸ்.பி.சின்கா, சிரியாக் ஜோசப் - நாள்: 22.7.2008) வழங்கிய தீர்ப்பு மறுபரிசீலனை செய்யப்பட்டு, சட்டத் திருத்தத்தின் மூலம் பெண்களுக்கான உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் மாநாட்டில் வலியுறுத்தப் பட்டது.
விவசாயம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை வறட்சிப் பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது.
பெண்கள் உரிமை - சட்டத்திருத்தம் அவசியம்! பெண்கள் உரிமை - சட்டத்திருத்தம் அவசியம்! Reviewed by நமதூர் செய்திகள் on 23:44:00 Rating: 5

No comments:

Powered by Blogger.