தேமுதிக : வளர்ந்ததும் - வீழ்ந்ததும்... - வி.களத்தூர் எம்.பாரூக்



தமிழகத்தை 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இரு திராவிட கழகங்களுக்கு மாற்றாக ஒரு அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்பது நீண்டகால கனவு பலருக்கு. இதற்கான முயற்சிகளில் பல தலைவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். 

காங்கிரஸ், மதிமுக, பாமக, தேமுதிக, பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட பல கட்சிகளும் தேர்தல் களங்களில் தங்களை இரண்டிற்கும் மாற்றாக அறிவித்துக்கொண்டு களமாடி இருக்கின்றன. இதில் தேமுதிக மட்டுமே தனித்துவமாக நின்று வென்று காட்டியது. அதன் அசுர வளர்ச்சி இரு கழகங்களுக்கு கிலியை ஏற்படுத்தின. 

தேமுதிகவின் தோற்றமும், பயணமும் பல இளைஞர்களை ஈர்த்தது. "அன்னை தமிழ் காப்போம், அனைத்து மொழிகளையும் கற்போம்" என்ற கொள்கை பிரகனத்தோடும், அரசியலில் தூய்மை, நாணயம், மனிதநேயம் ஆகியவற்றை கடைபிடித்து வறுமைக்கோட்டிற்குகீழ் மக்களே இல்லை என்கிற நிலையை உருவாக்கப்பாடுபடுவது" என்பதினை லட்சியமாகவும் கொண்டு 2005 ம் ஆண்டு செப்டம்பர் 14 ம் தேதி மதுரையில் லட்சக்கணக்கான தொண்டர்களுடன் தொடங்கப்பட்டது தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக).

துவங்கப்பட்ட ஒரு வருடத்திலேயே 2006 சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது. அரசியல் அனுபவமற்ற நடிகர் விஜயகாந்த் அவர்களின் ரசிகராக மட்டுமே அறியப்பட்ட தொண்டர்களை வைத்துக்கொண்டு இவர் என்ன சாதித்து விடப்போகிறார் என பலரது ஏளனங்களுக்கு மத்தியில் இக்கட்சி அத்தேர்தலில் வாங்கிய வாக்குகள் தமிழகத்தில் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தின. பலரது புருவங்களை உயர்த்தின. அத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 8.4% வாக்குகளை பெற்றதோடு மட்டுமில்லாமல் விஜயகாந்த் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்தெடுக்கப்பட்டார். தேமுதிக சார்பில் அவர் ஒருவர்தான் வெற்றிபெற்றார் என்றாலும் அவரது கட்சி வாங்கிய வாக்குகள் பலரையும் பிரமிக்க வைத்தது. 

அதிமுக தோற்பதற்கும், திமுக வரலாற்றில் இல்லாத வகையில் தனி மெஜாரிட்டி ஆட்சியாக அமையாமல் போனதற்கும் தேமுதிகவே முதற்காரணம். இரு கழகங்களுக்கு மாற்றாக ஒரு கட்சி பரிணமிக்க வேண்டும் என்று எண்ணிய பலருக்கு இது உற்சாகத்தை கொடுத்தது. நம்பிக்கையை விதைத்தது. பண்ருட்டி ராமச்சந்திரன், குமரி ஆஸ்டின், சி.ஆர்.பாஸ்கரன், கு.ப.கிருஷ்ணன் போன்ற பல தலைவர்களின் வருகை தேமுதிகவுக்கு கூடுதல் பலத்தை கொடுத்தது. துரதிஸ்டவசமாக அவர்களை தக்க வைக்க விஜயகாந்தால் முடியவில்லை. 

2009 நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்தே நின்றது தேமுதிக. கடந்த தேர்தலைவிட கூடுதலாக 2% வாக்குகளை பெற்று 10% என தனது வாக்கு வங்கியை உயர்த்தியது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 1,32,223 வாக்குகளும், குறைந்தபட்சமாக பொள்ளாச்சியில் 38,824 வாக்குகளும் பெற்றது சாதாரணமானவை அல்ல. பத்தாயிரம் வாக்குகள் பெறுவதற்கே பல கட்சிகள் திண்டாடி வருவதை இன்றும் பார்த்துதான் வருகிறோம். 

தேமுதிக பெற்ற வாக்குகள் திமுகவை விட அதிமுகவை அதிகம் பாதித்தன. மும்முனை போட்டியால் அதிமுகவே இழப்பை சந்தித்தது. 2006, 2009 தேர்தல் முடிவுகளை உற்றுநோக்குபவர்களுக்கு இது நன்கு தெரியும். அதிலும் 2009 நாடாளமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக ஈழப் பிரச்சனையில் துரோகம் இழைத்துவிட்டதாக மிகப்பெரிய அளவில் பிரச்சாரம் நடைபெற்றும் அக்கூட்டணியே பெரும்பான்மை இடத்தில வெற்றிபெற்றது. இதற்கு தேமுதிக தனித்து பெற்ற 10% வாக்குகளே காரணமாகும்.  

தேமுதிக இல்லாமல் வெற்றிபெற முடியாது என்பதை நன்கு உணர்ந்துகொண்ட அதிமுக அந்த கட்சியை கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கு பலரது மூலம் பகீரத முயற்சிகளை செய்தது. அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. முதலில் தயங்கிய விஜயகாந்த் பின்னர் ஒப்புக்கொண்டார். 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று 41 சீட்களை பெற்றது தேமுதிக.  

யாருக்கும் அள்ளிக்கொடுத்திடாத செல்வி. ஜெயலலிதா தேமுதிகவுக்கு 41 சீட்களையும், கேட்ட தொகுதிகளையும் கொடுத்தது பலருக்கு ஆச்சரியம் அளித்தது. அதற்கு தேமுதிக இல்லாமல் வெற்றிபெற முடியாது என்ற அன்று நிலவிய யதார்த்த நிலைதான் காரணம். 41 ல் போட்டியிட்டு 29 இடங்களை வென்று பிரதான எதிர்க்கட்சியாக தேர்வு பெற்றது தேமுதிக. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார். கட்சி துவங்கிய குறுகிய காலத்திற்குள்ளாகவே எதிர்க்கட்சி தலைவர் ஆகியது பெரிய வெற்றி என்றே பலரும் மதிப்பிட்டனர். ஆனால் தேமுதிகவின் இன்றைய அடிசறுக்கிற்கு முதற்காரணம் அதுதான்.   

இரண்டு ஊழல் கழகங்களுக்கும் மாற்றாக தன்னை முன்னுறுத்திய விஜயகாந்த் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தது பலராலும் ரசிக்கப்படவில்லை. அது அந்த தேர்தலிலேயே எதிரொலித்தது. 29 இடங்களில் வென்றாலும் முன்னைவிட அதன் வாக்குவங்கி குறைந்துபோனது. மாற்றை தேடிய இளைஞர்கள் தேமுதிகவைவிட்டு சிறிது சிறிதாக வெளியேற துவங்கிய காலம் அது. அதன் பின்னும் ஒரு நல்ல வாய்ப்பை காலம் அவருக்கு வழங்கியது. எ

திர்க்கட்சி என்கிற மக்கள் கொடுத்த அந்த பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு தேமுதிகவை நன்கு வளர்த்திருக்கலாம். தன்னை சிறந்த செயல்பாட்டாளனாக நிரூபித்திருக்கலாம். இந்த அருமையான ஒரு வாய்ப்பை தவறவிட்டார் விஜயகாந்த். இன்று எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் செய்யும் அரசியலைக்கூட அவர் முன்னெடுக்கவில்லை. அதிமுக அரசுடன் கடுமையான மோதல் போக்கை கையாண்டார். 

அதனால் தேமுதிகவை உடைக்கவும், பலவீனப்படுத்தவும் அதிமுக முயன்று அதில் வெற்றியும் கண்டது. அந்த ஐந்து வருடத்தில் மட்டும் விஜயகாந்த் மீது 28 அவதூறு வழக்குகள் பதிவு செய்து முடக்கியது அதிமுக அரசு. அவரது கட்சினர் மீதும் பல வழக்குகளை தொடுத்தது. இது போதாதென்று விஜயகாந்த் பொதுஇடங்களில் நடந்துகொள்ளும் செயலால் பலரையும் முகம் சுளிக்க வைத்தார். அவர் மீதான ஈர்ப்பு பொதுமக்களிடம் குறைந்துகொண்டே வந்து இன்று பலரின் ஒருவராக உட்கார வைத்துவிட்டது. அதேபோல் கூட்டணிக்காக அவர் பேசும் கடுமையான பேரம் நடுநிலையான பலரையும் தேமுதிகவிற்கு எதிராக சிந்திக்க வைத்துவிட்டது. "கேப்டன் செய்த ஒரே தவறு 2011 ம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்ததுதான்" என்று அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டார். 

அது மறுக்க முடியாத உண்மை. அன்று மட்டும் அதிமுகவுடன் கூட்டணி சேராமல், சிலரது திட்டங்களில் சிக்காமல் 'துணிந்து' தனித்து போட்டியிட்டிருந்தால் இன்று செல்வி. ஜெயலலிதாவின் மறைவினால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை தேமுதிக சரியாக பயன்படுத்தி இருக்க முடியும். அதிமுக கூட்டணிக்காக விஜயகாந்தை உயர்த்தி பிடித்த ஊடகங்கள்கூட அதிமுக ஆட்சியை பிடித்தவுடன் தேமுதிகவை விமர்ச்சிக்க ஆரம்பித்தன. அவரை செல்லாக்காசாக்க துடித்தன. சில அறிவுஜீவிகளும்தான். விஜயகாந்த் தனக்கு பின்னப்படும் சதிகளை அறியாமல் பலரது பேச்சை கேட்டு செய்த தவறையே மீண்டும் மீண்டும் செய்தார். 

2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணில் அவரை சேர்க்க பெரும் முயற்சியை பலர் எடுத்தனர். அவர்மீது நல்ல எண்ணம் கொண்ட சிலர் அதை தடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். தேமுதிகவில் சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர்கள் பெருமளவில் இருப்பதால் பாஜக கூட்டணியில் சேர்ந்தால் அவர்களை இழக்க வேண்டி வரும் என்றுகூட பேசினார்கள். இதெற்கெல்லாம் மசியவில்லை அவர். 

இறுதியில் பாஜக கூட்டணியில் இணைந்தார். தேமுதிகவின் கூட்டணி மூலம் கூட்டணி கட்சிகள் நன்கு பயன்பெற்றன. குமரியில் பாஜகவும், தர்மபுரியில் அன்புமணியும் வெற்றிபெற்றார்கள். ஆனால் 14 இடங்களை கடுமையான பேரம் பேசி வாங்கி போட்டியிட்ட தேமுதிக ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. வாக்கு வங்கியும் வெகுவாக குறைந்தது. அதிலாவது அவர் சுதாரித்திருக்க வேண்டும். மாறாக அவர் சுதாரிக்கவில்லை. 2016 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்று பெரும் பட்டிமன்றமே நடைபெற்றது. திமுகவுடனும், பாஜவுடனும், மக்கள் நலக்கூட்டணியுடனும் என அனைத்து பக்கமும் பேரம் பேசியது தேமுதிக. 

ஒரே நேரத்தில் மாறுபட்ட கொள்கையுடைவர்களுடன் கூட்டணி பேச விஜயகாந்தால் மட்டுமே முடியும் என்கிற அவப்பெயரை கொடுத்தது அது. கூடவே தேமுதிகவின் கொஞ்சநஞ்ச நம்பகத்தன்மையையும் குழிதோண்டி புதைத்து. தன்னை முதல் அமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டதால் ஒரு வழியாக மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்தித்தார் விஜயகாந்த். அத்தேர்தலில் தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி படுகேவலமான இடத்தை பெற்றது. டெபாசிட்கூட பெறமுடியாத தோல்வி அது. தேமுதிக 104 இடங்களில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் மண்ணை கவ்வியது. உளுந்துர்பேட்டையில் போட்டியிட்ட விஜயகாந்த டெபாசிட் பெறமுடியாமல் படுதோல்வி கண்டார். 

தேமுதிகவின் வாக்கு வங்கி 2.4% என அதலபாதாளத்திற்கு சென்றது. "2016 சட்டமன்ற தேர்தலோடு தேமுதிகவின், விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும்" என்று 2011 ல் அதிமுக-தேமுதிக கூட்டணி ஏற்படவும், 2014 ல் பாஜக-தேமுதிக கூட்டணி ஏற்படவும் பெரும் முயற்சி எடுத்த தமிழருவி மணியன் ஒரு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் குறிப்பிட்டார். ஏறக்குறைய அது நடந்து வருவதாகத்தான் கருத வேண்டி இருக்கிறது. தொடர் தோல்விகளால், விஜயகாந்தின் செயல்பாடுகளால், அவரது குடும்பத்தினரின் தலையீடுகளாலும் வெறுப்புற்ற நிர்வாகிகள் பலர் தொடர்ச்சியாக விலகி வருகின்றனர். 

ஆரம்ப காலங்களிலிருந்து விஜயகாந்த் உடன் இருந்தவர்கள்கூட "எங்கள் பேச்சை கேட்க மறுக்கிறார்" என்று குற்றம் சுமத்துகிறார்கள். தேமுதிகவிற்கு இது ஒரு இக்கட்டான சூழல். தொண்டர்களை தக்க வைக்க வேண்டும். இழந்த தனது செல்வாக்கை மீண்டும் பெற வேண்டும். அதற்கான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். அதை நோக்கி செயல்பட வேண்டும். இப்படி எத்தனையோ சவால்கள் அதன் முன் உள்ளன. சமீபத்தில் நடைபெற்ற மூன்று தொகுதி இடைதேர்தல்களில் தொண்டர்களை உற்சாகப்படுத்த தனித்து நிற்கும் முடிவை தேமுதிக எடுத்தது. 

ஆனால் அதுவும் பெரிய அளவில் பயன்தரவில்லை. எதிர்வினையாற்றிவிட்டது. போட்டியிட்ட மூன்று இடங்களிலும் கடுமையான பின்னடைவை சந்தித்தது. மூன்று தொகுதிகளையும் சேர்த்தே 7152 வாக்குகள்தான் பெற்றது. 1.3% வாக்குதான். பாஜக கூட 2.5% வாக்குகளை பெற்றிருக்கிறது. இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சிதான் வெற்றிபெறும் என்றாலும் தனது வாக்கு வங்கியாவது தக்கவைத்திருக்க வேண்டும். இந்த இடைத்தேர்தலில் திமுக தோல்வியடைந்தாலும் 37.8% வாக்குகளை பெற்று தனது வாக்கு வங்கியை நிலைநிறுத்தி இருக்கிறது. 

இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஒரு அறிக்கையில் "வெற்றிகளும், தோல்விகளும் மனித வாழ்வில் எல்லோருக்கும் ஒவ்வொரு காலகட்டத்தில் நடப்பவை" என்று விஜயகாந்த் தெரிவித்திருந்தார். அது முற்றிலும் உண்மை என்றாலும் அரசியலில் வெற்றி தோல்விகளை தாண்டி தனது தொண்டர்களை தக்கவைப்பது முக்கியமானது. 

இதில்தான் தேமுதிக பெரிய அளவில் சறுக்கி இருக்கிறது. சரிந்து வருகிறது. "முடிவுகளை விஜயகாந்த் எடுத்த வரை கட்சி நல்லாயிருந்தது. அவரின் மனைவி, மைத்துனர் எப்போது அதில் தலையிட ஆரம்பம் செய்தனரோ அன்றே கட்சி வழி தவறி செல்ல ஆரம்பித்துவிட்டது" என தேமுதிக தொண்டர்கள் வருத்தத்துடன் குறிப்பிடுகிறார்கள்.  

தேமுதிகவை மீண்டும் வலுப்படுத்த விஜயகாந்த் நினைத்தால் அவர் முதலில் செய்ய வேண்டியது தனது தொண்டர்களின் மனக்குமறல்களுக்கு செவிமடுக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று நிர்வாகிகளை சந்திக்க வேண்டும். மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு போராடும் வகையில் கட்சியை தயார்படுத்த வேண்டும். பணம் இருப்பவர்களே நிர்வாகிகள், வேட்பாளர்கள் என்ற நிலையை மாற்ற வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக தனித்து இயங்கும் வகையில் தனது உடல்நலத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். 

- வி.களத்தூர் எம்.பாரூக்

http://www.onlineoodagam.com/2016/12/blog-post_21.html
தேமுதிக : வளர்ந்ததும் - வீழ்ந்ததும்... - வி.களத்தூர் எம்.பாரூக் தேமுதிக : வளர்ந்ததும் - வீழ்ந்ததும்...  - வி.களத்தூர் எம்.பாரூக் Reviewed by நமதூர் செய்திகள் on 05:39:00 Rating: 5

No comments:

Powered by Blogger.