வர்தா புயல் : மீட்புப் பணியில் பொதுமக்கள்


சென்னையை வர்தா புயல் நிலைகுலைய வைத்துவிட்டது. சென்னை முழுவதும் மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்து கிடக்க, போக்குவரத்து, மின் இணைப்பு, தகவல் தொடர்பு என சகலமும் முழுமையாக முடங்கியிருக்கின்றன. இந்நிலையில், பொதுமக்கள் நகரை சீரமைக்கும் பணியில் தன்னார்வத்துடன் களமிறங்கியுள்ளனர்.
மேற்கு மாம்பலம்
மாம்பலம் ஆர்யகவுடா சாலை எங்கும் மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. இவை அப்புறப்படுத்தாமல் சாலையின் குறுக்கே கிடப்பதால் போக்குவரத்து முற்றிலுமாக அந்தப் பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களே மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் தங்களால் இயன்றளவில் மரங்களின் கிளைகளை அகற்றி இரு சக்கர வாகனங்கள் செல்லுமளவுக்கு பாதையை ஏற்படுத்தியுள்ளார்கள். மாம்பலம் பகுதியில் இருந்து அசோக் நகர் செல்லும் போஸ்டல் காலனி பகுதியில் பெரும்பாலான மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. இதனால் இந்தப் பகுதியிடையே போக்குவரத்து முழுமையாக தடைபட்டுள்ளது.
மைலாப்பூர்
மைலாப்பூர் பகுதியில் ஏராளமான மரங்கள் சாலையில் சாய்ந்து கிடக்கின்றன. இதனால் போக்குவரத்து அந்தப் பகுதியில் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்தப் பகுதியில் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் தாமே முன்வந்து மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதேபோல் ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த தொண்டர்களும் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து சீராகி வருகிறது.
ஆழ்வார்பேட்டை
சென்னை ஆழ்வார்போட்டை பகுதியில் கணக்கில்லாத மரங்கள் சாலையில் குறுக்கே சாய்ந்து கிடந்தன. இதனால் போக்குவரத்து மற்றும் மின்தொடர்பும் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், அந்தப் பகுதியில் போலீஸார் மரங்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு பொதுமக்களும் தன்னார்வத்தோடு உதவி செய்தனர்.
நெசப்பாக்கம் to விருகம்பாக்கம்
நெசப்பாக்கத்திலிருந்து விருகம்பாக்கம் சாலையில் ஏராளமான மரங்கள் விழுந்துகிடந்தன. இந்நிலையில் பொதுப்பணித் துறை ஊழியர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு பொதுமக்களும் தொடர்ந்து உதவி செய்து வருகிறார்கள்.
வடபழனி
வடபழனி கமாலா திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட விளம்பரப் பதாகை புயல் காற்றால் சாலையின் குறுக்கே சாய்ந்தது. அதேபோல், வடபழனி பேருந்து நிறுத்தத்தில் பெரிய மரம் ஒன்று சாலையின் குறுக்கே சாய்ந்தது. இந்நிலையில், இன்று மாலை மாநகராட்சி ஊழியர்கள் அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு பொதுமக்களும் உறுதுணையாக நின்று உதவியதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து தற்போது சீரடைந்து வருகிறது.
வெளியூரிலிருந்து வருகை
மரங்களை அகற்ற தன்னார்வத் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் சென்னைக்கு வந்து குவிந்துள்ளனர். இதில் அரசுப் பணியாளர்களும் அடக்கம். இவர்கள் வர்தா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மீட்புப் பணிகளில் தன்னார்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள், இது குறித்து கூறும்போது, “கடந்த வருடம் மழையால் சென்னை பாதிக்கப்பட்டபோது, நாங்கள் சென்னைக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு, மாநகராட்சி மற்றும் சென்னை மக்களின் பாராட்டைப் பெற்றோம். இப்போதும் உதவ முன்வந்துள்ளோம். எங்களால் முடிந்த உதவியை செய்து சென்னை நகரை மீட்போம்” என்று கூறியிருக்கிறார்கள்.
வர்தா புயல் : மீட்புப் பணியில் பொதுமக்கள் வர்தா புயல் : மீட்புப் பணியில் பொதுமக்கள் Reviewed by நமதூர் செய்திகள் on 23:39:00 Rating: 5

No comments:

Powered by Blogger.