பொறுப்பற்றத்தனம்!



"500, 1000 நோட்கள்  செல்லாது என அறிவிக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் சில சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். எனினும் உங்கள் தியாகம் வீண்போகாது. இன்னும் 50 நாட்களில் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்" பொதுமக்களின் கொந்தளிப்பான மனநிலையை குறைப்பதற்காக பிரதமர் மோடியால் சொல்லப்பட்ட வார்த்தைகள்தான் இவை.

ஆனால் கள நிலவரத்தையும், வரக்கூடிய செய்திகளையும் பார்க்கும்போது 50 நாட்கள் மிகவும் குறைந்த நாட்களாகும். குறைந்த 250 நாட்களாவது ஆகும் என்பது தெளிவாக தெரிகிறது. பணமற்ற பொருளாதாரத்தை நோக்கி நாடு முன்னேறி செல்வதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் பேசி வருகிறார். இனி வங்கியின் மூலமே பணபரிமாற்றங்களை செய்யவேண்டும் என்கிறார். பணம் கையிருப்பு இல்லாமல் பொதுமக்கள் கடும் சிரத்தை எதிர்கொண்டுவருகிறபோது ரிசர்வ் வங்கி தான்தோன்றித்தனமாக இவ்வாறு பதில் அளிக்கிறது "ரொக்கம் இல்லாவிட்டால் என்ன பண அட்டைகள் அல்லது இணைய வழி வங்கி சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்" என்று. பிரதமரும், ரிசர்வ் வங்கியும் நமது நாட்டின் நிலைமை அறிந்துதான் பேசுகிறார்களா என்பது புரியவில்லை. 

இந்த நாட்டில் வாழக்கூடிய பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு வங்கி கணக்கு இல்லை. வெறும் 2 கோடி பேர்தான் கிரெடிட் கார்டு வைத்துள்ளார்கள். 57 பேர் மட்டுமே டெபிட் கார்டு பயன்படுத்துகிறார்கள். இணையவழி வங்கி சேவையை பயன்படுத்துபவர்கள் குறைந்த நபர்கள்தான்.

இந்தியா கிராமங்களால் சூழப்பட்டது. சுமார் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன. இதில் பெரும்பகுதி கிராமங்களில் வங்கிகள் இல்லை. இந்த நிலையில் கல்வியில், பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பவர்கள், வங்கி பரிவர்த்தனையின்கீழ் வராதவர்கள் என்ன செய்வார்கள். 

வி.களத்தூரை எடுத்துக்கொள்வோம். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என்ற ஒரே ஒரு வங்கி மட்டுமே இருக்கிறது. சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் வங்கி இல்லாத காரணத்தால் இந்த வங்கியையே பயன்படுத்தி வருகின்றனர்.

பிரதமர் மோடி அறிவித்த 500, 1000 ரூபாய் நோட்கள் செல்லாது என்று அறிவிப்பிற்கு பிறகு வி.களத்தூர் உட்பட எல்லா ஊர் மக்களும் இந்த வங்கியை முற்றுகையிட துவங்கிவிட்டனர். இந்த ஒரு மாதத்தில் பெரும்பகுதி நாட்களில் 'பணம் இல்லை' என்ற அட்டைதான் வங்கி வாசலில் காணக்கிடக்கிறது. ATM ல் பணம் எடுக்கலாம் என்றால் நவம்பர் 08 லிலுருந்து ஒரு ATM இயந்திரம் கூட செயல்படவில்லை. இத்தனைக்கும் நான்கு ATM இயந்திரங்கள் இருக்கின்றன. அதனால் ஒரு பயனும் அல்ல.

AXIS வங்கி மொபைல் ATM மூலம் ஒருநாள் மட்டும் பணம் வழங்கினார்கள். குறைந்த பணம் எடுத்து வந்ததால் ஒருமணி நேரத்தில் முடிந்துவிட்டது. மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு வங்கியிலும், ATM இயந்திரங்களில் பணம் எடுக்க இயலவில்லை எனும்போது மக்களால் தங்கள் அடிப்படை தேவைகளை எப்படி பூர்த்திசெய்துகொள்ள முடியும். 

இந்த நிலைகளை வெறுப்புடன் கண்டு வந்த வி.களத்தூர் மக்கள் வங்கியின் முன் நவம்பர் 30 அன்று காலை சாலை மறியல் போராட்டத்தினை தன்னியல்பாக நடத்தினார்கள். இரண்டு மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர். கலந்து கொண்டவர்கள் மத்திய அரசிற்கு எதிராகவும், வங்கி நிர்வாகத்திற்கு எதிராகவும் கோசம் எழுப்பினார்கள்.

பெரும்பாலான ஊடகங்கள் மறியல் செய்திகளை பதிவு செய்தன. வங்கி மேலதிகாரிகள் பணத்தோடு வந்து முடிந்த அளவு பலருக்கும் பிரித்து கொடுத்து சூழ்நிலையை சமாளித்தனர். இதோடு பிரச்சனை முடிந்தது என நினைக்க இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி சந்திரகுமார், அய்யம்பெருமாள் உள்ளிட்ட சிலரை காவல்துறையினர் கைது செய்தது வியப்பை தருகிறது. அதுவும் அய்யம்பெருமாள் என்பவரை இரவு 11.30 மணிக்கு அவர் வீட்டுக்கே சென்று கைது செய்திருக்கின்றனர். சனி, ஞாயிறு நீதிமன்ற விடுமுறை தினமாக பார்த்து கைது செய்திருப்பது நன்கு திட்டமிட்டதாக தெரிகிறது. வேறு ஏதோ தனிப்பட்ட பிரச்சனைகளை மனதில் வைத்து காவல்துறை செயல்படுவதாக எண்ணத்தோன்றுகிறது.

ஒரு பக்கம் மத்திய அரசு மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளில் விளையாடுகிறது என்றால் காவல்துறையும் அதனோடு இணைந்துக்கொண்டு தங்கள் பங்கிற்கு மக்களின் பிரச்சனைகளுக்காக முன்னின்று செயல்படுபவர்களை ஒடுக்குவதை எப்படி புரிந்துகொள்வது. இது பொறுப்பற்றத்தனம் அல்லாமல் வேறென்ன.

"அரசியல் சாசனச் சட்டம் 360 வது பிரிவை அமல்படுத்தாமலேயே நெருக்கடி நிலையை மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா குற்றஞ்சாட்டுகிறார்.

மேற்குறிப்பிட்ட சம்பவங்களை பார்க்கும்போது அவர் சொன்னது முற்றிலும் சரி என்றே நம்பத்தோன்றுகிறது.

- வி.களத்தூர் எம்.பாரூக்
பொறுப்பற்றத்தனம்! பொறுப்பற்றத்தனம்! Reviewed by நமதூர் செய்திகள் on 23:08:00 Rating: 5

No comments:

Powered by Blogger.