மொழி இனம் கடந்து இந்தியராக எல்லோரும் சகோதரர்கள்? இப்படி நீங்கள் சொன்னது கடைசியாக எப்பொழுது? இந்த வார்த்தைகளில் ஏதேனும் அர்த்தமிருக்கிறதா? மொழி இனம் கடந்து நம் மாநிலத்திற்கு வெளியில் இருக்கிற மொத்த இந்தியர்களும் நம்மை சகோதரர்களாக ஏற்றுக் கொள்கிறார்களா? அல்லது நாம் ஏற்றுக்கொள்கிறோமா? சகிப்புத்தன்மையின் சுவடுகளை தொலைத்துக் கொண்டிருக்கும் தலைமுறை நாம். எல்லோரும் தாமாகவே பிறர் இருக்க வேண்டுமென விரும்புவது எப்படி சாத்தியமாகும்?
நல்லது இது சகிப்புத்தன்மை குறித்த பதிவல்ல. கானகன் நாவலுக்காக யுவபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்ட போது முதலில் அது பொய்யான தகவலாக மட்டுமே இருக்கக்கூடுமென நினைத்தேன். துரதிருஷ்டவசமாக அது நிஜம். பத்து வருடங்கள் தொடர்ந்து எழுதியதற்குப் பின்னால் கிடைத்திருக்கும் விருது என்பதால் மனதளவில் எனக்கு எந்த சங்கடங்களும் இல்லை. மேலும் இது எனது முதல் புத்தகமும் இல்லை. ஆனாலும் இந்த விருதை மறுத்துவிடுவதற்கான மனநிலையில் தான் திரிபுரா செல்கிற வரையில் இருந்தேன். முக்கியமாக சமகால அரசியல் சூழல். யோசித்துப் பார்க்கையில் மறுப்பதால் என்ன நடந்துவிடும்? அது எதிர்ப்புதான். ஆனால் தேசம் முழுக்க வெவ்வேறு பகுதிகளிலிருந்து வரும் எழுத்தாளர்களிடம் நம் பிரச்சனையை கொண்டு சென்று சேர்க்க இந்த விழா மேடையை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியுமென்கிற நினைப்பு வந்தபோது மனதளவில் நானும் அதற்கு என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டுவிட்டேன்.
தமிழ்நாட்டிற்கு வெளியில் சமகால இந்திய இலக்கியம் பெரும் வளர்ச்சி கண்டிருக்கிறதென்கிற நம் நினைப்பெல்லாம் எத்தனை முட்டாள்த்தனம் என்பது அகர்தலா சென்று இறங்கிய போதுதான் தெரிந்தது. கொல்கத்தாவிலிருந்து அகர்தலா செல்லும் விமானத்தில் எனக்கு அருகில் அமர்ந்திருந்தது பஞ்சாபி மொழிக்காக விருது வாங்கும் இளைஞன். நான் புத்தகம் படிப்பதைப் பார்த்துவிட்டு பெங்காலியா என ஹிந்தியில் கேட்டான். நான் தமிழ் என பதில் சொல்ல ஹிந்தி தெரியாதா என கேட்டார். தமிழ் மட்டுமே தெரியுமென அரை குறை ஆங்கிலத்தில் சொல்ல அதன் பிறகு உரையாடல் தொடரவில்லை. அந்த நான்கு நாட்கள் எப்படி இருக்கப் போகிறதென்பதை அந்த நிமிடமே புரிந்து கொள்ள முடிந்தது.
24 மொழிகளுக்கான விருது விழா… 23 பேர் ஒரு குழுவாகவும் இந்தி பேசத் தெரியாதென்பதால் ஒருவன் தனித்துவிடப்படுவதும் என்ன மாதிரியான பிம்பத்தை உருவாக்கும் உங்களுக்குள்? வழக்கமாக இலக்கிய நிகழ்வுகளை உற்சாகமாக கழிக்க விரும்புகிறவன் நான். இலக்கிய வெளிக்கு அப்பால் மராத்தி பஞ்சாபி மலையாளி தெலுங்கு கன்னடமென இந்தியாவின் பெருவாரியான மாநிலங்களில் எனக்கு நண்பர்களுண்டு. அனேக மாநிலங்களுக்கு நான் பயணப்பட்டவன் தான் ஆனாலும் எனக்கு இந்தி பேச வராது. சில வார்த்தைகள் தெரியும் அவ்வளவு தான். இவ்வளவு காலம் ஊர் சுற்றுகையில் எனக்கு இந்தி தெரியாதது ஒரு பிரச்சனையாய் இருந்திருக்கவில்லை. ஆனால் இந்தியை தேசிய அடையாளமாக பிடித்து வைத்துக் கொண்டிருக்கும் ஒரு இலக்கிய கூட்டத்தில் மாட்டிக்கொண்ட போது அந்தச் சூழல் முற்றிலும் அருவருப்பானதொன்றாக மாற்றிவிட்டது. நான் முன்பே அனுப்பி இருந்த உரைக்கு பதிலாக வேறு ஒரு உரையை மேடையில் பேசவே நான் தயாராய் இருந்தேன். ஜல்லிக்கட்டு துவங்கி கூடங்குளம் மீனவர் பிரச்சனையென எல்லாவற்றையும் பதிவு செய்ய வேண்டுமென விரும்பினேன்…
ஆனால் அந்த சூழல் குழப்பமானதாக இருந்தது. அங்கு சிலர் ஆங்கிலத்தில் உரையாடக் கூடியவர்களாய் இருந்தும் கூட எங்களுக்குள் உரையாடல் நிகழ்ந்திருக்கவில்லை. விதிவிலக்காக ரகு கர்னாடும் (ஆங்கில நாவலுக்காக பரிசு பெற்றவர்) ஹரியும் (கன்னடத்திற்கு விருது பெற்றவர்) கொஞ்சம் பேசினார்கள். இருவரும் பெங்களூர்க்காரர்கள் என்பதால் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது.
அகரவரிசைப்படி தமிழ் கடைசிக்கு முன்பு வருவதால் உரை நிகழ்த்தும் போது நேர பிரச்சனை குறுக்கிட்டது. 24 பேர் இரண்டு மணி நேரத்தில் பேசி முடிப்பது எப்படி சாத்தியம்? நான் இருப்பதிலும் பாதியை சுருக்கு மிகக் குறைவாகவே பேசினேன். ஆனாலும் அது அங்கிருந்த பலரையும் வெகுவாக கவர்ந்தது. ரகுவும் ஹரியும் அதன் பிறகு தான் தேடி வந்து பேசினார்கள். அங்கிருந்து வேறு சிலரும் கூட… ஆனால் எனக்கு நெருடலான அனேக விஷயங்கள் அங்கும் உண்டு. சாகித்ய அகதெமி தலைவர் முழுக்க இந்தியில் மட்டுமே சொற்பொழிவாற்றுகிறார். விருது கொடுக்கையில் எல்லோரிடமும் நெருங்கி வந்து தட்டிக் கொடுத்து பாராட்டுகிறவர் தமிழை விடவும் அதிகம் ஒதுக்கப்பட்ட சந்தாலி மொழி எழுத்தாளருக்கு விருது கொடுக்கையில் ஒழுங்காக கை கொடுத்து கூட பாராட்டவில்லை ( பெரும்பாலும் பழங்குடி மக்கள் இவர்கள்) நுட்பமாக இப்படி கவனித்து எழுதினால் இன்னும் அனேக விஷயங்களுண்டு. இந்தி நம் தேசிய மொழி என்று எங்கும் சொல்லப்பட்டதில்லை. பின் ஏன் அவர்கள் இதை தனிப்பெரும் அடையாளமாக பார்க்கிறார்கள். சமஸ்கிருத மொழிக்காக விருதை அறிவிப்பதற்கு முன்னால் சமஸ்கிருதம் தேவ பாஷை என மறைமுகமாக உணர்த்துவதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்? விருதாளர்கள் எல்லோரும் ஒரே விடுதியில் தான் தங்கியிருந்தோம், சாப்பிடும் போது ஒரே இடத்தில் தான் ஆனால் நட்பு உருவாவதற்கான எந்த முகாந்திரங்களும் இல்லை. நாமே சென்று பேசலாம் என்றாலும் ஹாய் சொன்னால் அவர்கள் நமஸ்தே என்பார்கள். என்ன கருமமடா இது என இலக்கிய நட்பு பாராட்டுதலை விட்டுவிட்டாகிவிட்டது.
மேடையில் சிலர் தங்களின் கவிதைகளை ஆங்கிலத்தில் வாசித்தபோதுதான் இத்தனை காலம் நான் தமிழ்க் கவிஞர்களை திட்டியது எத்தனை முட்டாள்தனம் என்பது புரிந்தது. இங்கு புதிதாக எழுத வரும் ஒரு கவிஞன் கூட இவர்களை விட நூறு மடங்கு தேவலாம். அவ்வளவு சுமாரானவை.
ஊருக்கு கிளம்புவதற்கு முந்தைய நாள் இரவு விடுதியில் விருது வென்றவர்கள் கூடிப் பேசலாமென முடிவெடுத்து எல்லொரும் மறந்த பின்னர் ஹரி வந்து அழைத்தார். பலரும் விருது வென்ற போதும் சரி இந்த அமர்விலும் சரி கடவுளுக்கு நன்றி டீச்சருக்கு நன்றி அம்மாவுக்கு நன்றி என்கிற அளவில் தான் தங்களை வைத்திருக்கிறார்கள். நேபாள மொழிக்காக விருது வாங்கின இளைஞர் இந்திய பெருந் தேசியம் தங்களை எவ்வாறு ஒதுக்குகிறது என்று சொன்னதுதான் தாமதம் இந்தி மொழிக்காக விருது வாங்கின நண்பர் எழுந்து ஒரு முக்கால் மணி நேரம் இந்தியா சகிப்புத்தன்மையான நாடு என்பதை பல இந்திப் படங்களில் வந்த பிரபல வசனங்களால் நிரப்பினார்.
அங்கிருந்த பெரும்பாலானவர்களும் உறுதியாய் நம்புவது ஒற்றை தேசியத்தை, இந்தி என்னும் மொழியைப் பற்றி இந்தியர்களாய் திரள்வது என்கிற நோக்கம். நோக்கம் நல்லதுதான் அது எங்கனம் சாத்தியம்? ஒரு வழியாக நள்ளிரவு ஒரு மணிக்குப் பக்கமாக என்னையும் சில வார்த்தைகள் பேச சொன்ன போது எனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்திலும் தமிழிலும் பேச ரகுவும் ஹரியும் அதை ஹிந்தியில் மொழிபெயர்த்தார்கள். நான் ஏன் எந்த மொழியையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தனித்து இருக்கிறேன், ஆயிரம் வருடம் ஐநூறு வருடம் தொன்மம் இருக்கிற மொழியென நீங்கள் பெருமிதம் கொள்ளும் போது பல்லாயிரம் வருட தொன்மமும் வரலாறும் உள்ள மொழியைச் சேர்ந்த நான் ஏன் பெருமிதம் கொள்ளக் கூடாதென நிதானமாக பேசியதோடு தேசிய ஊடகங்கள் மட்டுமல்லாது எழுத்தாளர்களும் தமிழ்நாட்டை விலக்கிப் பார்ப்பது ஏன்? என சற்று கோவமாகவே என் கேள்விகளை வைத்தேன்? ஏனேனில் இந்தி மொழிக்காக விருது வாங்கிய நண்பர். ‘கருணாநிதியை ஒருமுறை சந்திக்க வேண்டும், அவர் தான் தமிழர்களை கெடுத்தவர்’ என்று சொன்ன ஸ்டேட்மெண்ட் எனக்கு உச்சபட்ச எரிச்சல். நான் எந்த அரசியல் இயக்கத்தையும் சேராதவன் என்றாலும் பாரம்பர்யம் மிக்க ஒரு அரசியல் தலைவரை என் மொழியின் முன்னோடியை அவதூறு செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாதுதான். ஜல்லிக்கட்டு ஏன் எங்களுக்கு அவசியம்? கூடங்குளம் என் எங்களுக்கு வேண்டாம்? மீனவர் பிரச்சனையை எப்போது தேசிய பிரச்சனையாக பார்ப்பீர்கள் என என்னவெல்லாம் பேச நினைத்தேனோ எல்லாவற்றையும் பேசி முடித்தபிறகு முன்னைவிடவும் அவர்கள் என்னை ஒதுக்கிவிட்டனர். அதுகுறித்து இனி வருத்தப்படவும் ஒன்றுமில்லை. 2016 யுவபுரஸ்கார் விருதாளர்களுக்கான வாட்ஸக் குரூப்பில் நான் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
என் உரையில் பணீஸ்வர்நாத் ரேணுவையும், ரிஷிகேஷ் பாண்டாவையும், பைரப்பாவையும், அன்னபாவ் சாத்தேவையும், ஏன் கொங்கனி நாவல் பஞ்சாபி நாவல்களைக் கூட உதாரணம் காட்டி தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இந்திய இலக்கியம் ஒவ்வொன்றும் என் எழுத்திற்கு வலுசேர்த்தவை தான் என்று பெருமையோடு சொன்னதோடு விருது வாங்கின மேடையில் என் விருதை மலையாள எழுத்தாளன் பஷீருக்கு சமர்ப்பித்துவிட்டு வந்தேன். ஆனால் என் வருத்தமெல்லாம் அவர்களில் ஒருவருக்கு கூட என் மொழியின் சமகால எழுத்தோ ஏன் திருவள்ளுவர் பாரதியைக் கூட தெரியவில்லை.
நான் ஏன் இவர்களுக்காக இனி இந்தி கற்றுக் கொள்ள வேண்டும்? அல்லது உரையாட வேண்டும்?
கானகன் நாவலுக்காக யுவ புரஸ்கார் விருது பெற்ற லக்ஷ்மி சரவணக்குமார் விருது நிகழ்ச்சி நிகழ்ச்சி குறித்து எழுதியது
.