விவசாயிகளை வஞ்சிக்கும் மோடி!

விவசாயிகளை வஞ்சிக்கும் மோடி!

வறட்சி நிவாரணம், தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளுக்கு இழப்பீடு, பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில், தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், இரண்டாவது கட்டமாக 20வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று (ஆகஸ்ட்-4) நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் பேய் போன்ற முகமூடிகளை அணிந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மனம் தளராமல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போராட்டக்குழுவின் தலைவர் அய்யாக்கண்ணுவிடம் பேசினோம்,'தமிழகத்தில் ஒரு கோடி ஏக்கர் பரப்பளவில் விவசாயம் பாழாய் போனதற்கு, மத்திய அரசிடம் 21,708 கோடி நிதியை கேட்ட தமிழக முதல்வர், பிறகு அத்துடன் முடித்துவிட்டார். ஏனென்று தெரியவில்லை மீண்டும் அவர் மத்திய அரசிடம் இதுகுறித்து வலியுறுத்தவில்லை.
டெல்லி வந்திருந்த முதல்வரை நாங்கள் சந்தித்து இதுகுறித்து கேட்டோம், அவர் பயந்துபோய் பேசினார், 'மாநில அரசு விவசாய கடன்களை தள்ளுபடி செய்யமுடியாது, மத்திய அரசுதான் தள்ளுபடி செய்யவேண்டும்' என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். மத்திய அரசிடம் அவர் அதிகமாகப் பயந்துபோகிறார், இப்படிப் போனால் தமிழக விவசாயிகளை எப்படிக் காப்பாற்ற முடியும்.
விவசாயிகள் காப்பீட்டுத் திட்டத்தில், தமிழக விவசாயிகள் ரூ.800 வரை கோடி பிரிமியம் தொகை செலுத்தியுள்ளோம், மத்திய அரசு, மாநில அரசுகள் ரூ.900 கோடி வரை செலுத்தியுள்ளது. மொத்தம் ரூ1700 கோடி ரூபாய் காப்பீட்டு தொகையில், விவசாயிகளுக்குக் கொடுப்பது எவ்வளவு தெரியுமா?வெறும் ரூ 21 கோடி. இது பகல் கொள்ளையாக உள்ளது, இதைக் கேட்டால் நாங்கள் தீவிரவாதி.
எங்களுடைய போராட்டத்திற்கு, தமிழக எம்.பி-க்கள், புதுச்சேரி முதல்வர் மற்றும் அமைச்சர்கள், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநில எம்.பி.க்கள் நேரில் சந்தித்து ஆதரவளித்துவிட்டு செல்கின்றனர். ஆனால் அருகிலுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் பாஜக பிரமுகர்கள், எங்களைக் கண்டுகொள்ளவேயில்லை, விவசாயிகளை நாயைவிடக் கேவலமாக பார்க்கிறார்கள். நாங்கள் இங்கேயே போராடி செத்துமடிவோம், எங்கள் விவசாயிகளின் ஆவி டெல்லியில் உள்ளவர்களை சும்மா விடாது' என்று தெரிவித்துள்ளார்.
விவசாயிகளை வஞ்சிக்கும் மோடி! விவசாயிகளை வஞ்சிக்கும் மோடி! Reviewed by நமதூர் செய்திகள் on 04:43:00 Rating: 5

No comments:

Powered by Blogger.