இளைஞர்கள் நடத்தும் இயற்கை உணவகம்!

இளைஞர்கள் நடத்தும் இயற்கை உணவகம்!

சேலத்தில் இளைஞர்கள் நடத்தும் இயற்கை உணவகம் பாரம்பரியத்தைக் காக்கும் வகையிலும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலும் தொடங்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் நடத்தும் இந்த இயற்கை உணவகம் அப்பகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மரங்களை அழித்ததால் மண்வளத்தை இழந்துள்ளோம். இயற்கையான உணவுகளை மறந்ததால் உடல்நலத்தை துறந்தோம் என்ற விழிப்புணர்வு சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. அதற்கு வலு சேர்க்கும் விதமாக இந்த உணவகம் திகழ்கிறது.
சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு அருகில் உழவன் உணவகம் உள்ளது. இதில் காலை உணவாக அருகம்புல் ஜூஸ், உளுந்தம்கஞ்சி, இஞ்சி டீ, ராகிகூழ், கம்மங்கூழ், பழைய சோறு கஞ்சி, பழஞ்சோறு பானம், சிறுதானிய பயிறு வகைகள், பழத்துண்டுகள் உணவாக கிடைக்கிறது. மதிய உணவாக வெஜிடபுள் சாதம், தயிர்சாதம், கீரை சாதம், லெமன் சாதம் ஆகியவை மக்களுக்கு ஏற்ற வகையில் குறைந்த விலையில் விற்பனை செய்துவருகின்றனர். ரூ.10 முதல் ரூ.20 என்ற விலைக்குள் இவை அனைத்தும் கிடைப்பதால் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
இது குறித்து உணவகத்தை நடத்தும் செல்வா, விக்னேஷ் ஆகியோர் கூறும்போது, நாங்கள் உடற்பயிற்சி பயிற்றுநராக இருக்கிறோம். காலை,மாலை நேரங்களில் மட்டும்தான் வேலை இருக்கும். மற்ற நேரங்களில் எங்களுக்கும், பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக அமையும் வகையில் இந்த இயற்கையான உணவகத்தை ஆரம்பித்தோம். இயற்கை உணவகம் என்பதால் கலாச்சாரம் மாறாமல் பழமையை கையாளும் விதமாக, மண்பானை, மண்சட்டி, மண் குடுவை, மண்கலசம், மண் மொந்தை போன்றவற்றை மட்டுமே பயன்படுத்துகிறோம். பச்சை மிளகாய், சின்ன வெங்காயத்துடன் பழைய சோறு கஞ்சி மற்றும் பழஞ்சோறு பானம் ஆகியவற்றை மண் குடுவையில் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கிறோம். பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. காலை முதல் மாலை வரை சுக்கு காபி முதல் ராகி கூழ் மற்றும் சிறு தானியங்கள் வரை அனைத்தும் உணவகத்தில் கிடைக்கின்றன.
எளிய மக்களும் வந்து சாப்பிடும் அளவிற்கு உருவாக்கப்பட்ட இந்த இயற்கை உணவகம் பொதுமக்கள் பசியாற ஏற்ற இடமாக இருக்கிறது. நாங்கள் லாபத்தை பார்த்து இந்த உணவகத்தை தொடங்கவில்லை. உடலுக்கேற்ற உடற்பயிற்சி செய்யாதவர்களுக்கு இந்த இயற்கை உணவகம் உடல் பலத்தை தரவேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கியுள்ளோம் எனத் தெரிவித்தனர்.
இளைஞர்கள் நடத்தும் இயற்கை உணவகம்! இளைஞர்கள் நடத்தும் இயற்கை உணவகம்! Reviewed by நமதூர் செய்திகள் on 04:34:00 Rating: 5

No comments:

Powered by Blogger.