பணமதிப்பழிப்பு: பாதிக்கப்பட்டது ஏழைகள்தான்!

பணமதிப்பழிப்பு: பாதிக்கப்பட்டது ஏழைகள்தான்!

பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டது ஏழைகள்தான் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாம் கட்ட சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 20ஆம் தேதி நடக்க இருக்கிறது. இங்கு பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சத்தீஸ்கரில் நேற்று முன்தினம் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மோடி, பணமதிப்பழிப்பு நடவடிக்கை குறித்து பதிலளிக்கையில், “பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு முன் பணம் மெத்தைக்கு அடியிலும், கப்போர்டு, சாக்குகளிலும் இருந்தது. ஆனால், பணமதிப்பழிப்புக்கு பின் அனைத்தும் அரசாங்கத்துக்கு வந்துவிட்டது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலம், பலோடா பஜார் பகுதியில் நேற்று (நவம்பர் 13) பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, "பணமதிப்பழிப்புக்குப் பின் மெத்தையில் பதுக்கி வைத்த பணம் வெளியே வந்ததாக மோடி சொல்கிறார். அவர் சொன்னது சரிதான். ஆனால், அவர் யாரிடம் இருந்து பணத்தை கொண்டுவந்தார் என்பதைச் சொல்லவில்லை. கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கவே பிரதமர் மோடி உதவினார்” என்று குற்றம்சாட்டினார்.
மேலும், "பணமதிப்பழிப்புக்குப் பிறகு ரூபாய் நோட்டுகளை மாற்ற ஏழை மக்கள்தான் வரிசையில் நின்றனர். எந்த பணக்காரராவது பணத்தை மாற்றுவதற்கு வரிசையில் நின்றனரா? எந்த வரிசையிலாவது சூட்-பூட் போட்டவரை பார்த்தோமா?” எனக் கேள்வியெழுப்பிய ராகுல், ஏழை மக்களின் பணத்தை மோடி பறித்துக்கொண்டார். பணக்காரர்களுக்குத்தான் அவர் நன்மை செய்தார் என்றும் விமர்சித்தார்.
சத்தீஸ்கர் பாஜக ஆட்சியை விமர்சித்துப் பேசிய ராகுல் காந்தி, "சத்தீஸ்கர் வளமிக்க மாநிலம். ஆனால், பாஜகவின் தவறான ஆட்சியால் மாநிலத்தின் கனவுகள் அனைத்தும் உடைந்துவிட்டன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒரு சில நிறுவனங்களுக்கு வேலை பார்ப்பதைவிட மாநிலத்தின் விவசாயம், கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் கவனம் செலுத்தப்படும்" என நம்பிக்கை தெரிவித்தார்.
பணமதிப்பழிப்பு: பாதிக்கப்பட்டது ஏழைகள்தான்! பணமதிப்பழிப்பு: பாதிக்கப்பட்டது ஏழைகள்தான்! Reviewed by நமதூர் செய்திகள் on 03:11:00 Rating: 5

No comments:

Powered by Blogger.