ரஃபேல்: பிரான்சிலும் ஊழல் புகார்!

ரஃபேல்: பிரான்சிலும் ஊழல் புகார்!

ரஃபேல் போர் விமான விவகாரத்தில் இந்தியாவில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரான்ஸ் நாட்டு ஊழல் தடுப்புத் துறையிடமும் ரஃபேல் விவகாரம் பற்றி புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி பிரான்ஸ் நாட்டின் மீடியாபார்ட் இதழில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.
ரஃபேல் விமானம் வாங்கிய விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். ஒருகட்டத்தில் ராகுலின் புகார்களுக்கு ரஃபேல் விமான தயாரிப்பு நிறுவனமான பிரான்சை சேர்ந்த டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் மறுப்பு தெரிவித்தது.
இந்த நிலையில், ரஃபேல் விமான விவகாரத்தில் ஊழல் நடந்திருக்கலாம் என்றும் அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் பிரான்ஸ் அரசிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. கடந்த அக்டோபர் மாத இறுதியில் ஷெர்பா என்ற என்.ஜி.ஓ சார்பில் பிரான்ஸ் அரசின் தேசிய நிதி விவகாரங்கள் தொடர்பான அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் (National Financial Prosecutor’s Office) இந்தப் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் புகாரில், “இந்தியாவுக்கு 36 ரஃபேல் போர் விமானங்களை டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் விற்பது தொடர்பாக 2016-ல் செய்துகொண்ட ஒப்பந்தம்தொடர்பாக புலனாய்வு விசாரணை தேவை. அனில் அம்பானியின் ரிலைன்ஸ் குழுமத்தை இந்த ஒப்பந்தத்தில் சேர்த்தது தொடர்பாகவும் விசாரணை தேவை.
இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் நடைபெற்ற இந்த ரஃபேல் ஒப்பந்தம் அறிவிக்கப்படுவதற்கு 12 நாட்கள் முன்புதான் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. போர் விமானங்கள் தயாரிப்பதில் எவ்வித அனுபவமும் இல்லாத, பதிவு செய்து 12 நாட்களே ஆன அந்த நிறுவனத்தை டஸால்ட் ஏவியேஷன் எவ்வாறு தேர்ந்தெடுத்தது என்பது பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
மேலும் அந்தப் புகாரில், “ தேவையற்ற வகையில் முன்னுரிமைகள் வழங்குதல், செல்வாக்கு செலுத்துதல் போன்ற ஊழலுக்கு சாத்தியமான செயல்பாடுகளும் பண மோசடியும் ரஃபேல் ஒப்பந்தத்தில் நடைபெற்றுள்ளதாகத் தெரிகிறது. எனவே இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் தீவிரமாக விசாரிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளது ஷெர்பா அமைப்பு.
இந்தப் புகார் குறித்து ‘மீடியா பார்ட்’ பிரான்ஸ் பத்திரிகைக்கு ஷெர்பா அமைப்பின் நிறுவனர் வில்லியம் பர்டன் அளித்த பேட்டியில், “ரஃபேல் ஒப்பந்தத்தின் ஒவ்வொரு அம்சமும் இதை தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. ரஃபேல் விவகாரத்தில் மிகவிரைவில் புலனாய்வு விசாரணை தொடங்கப்பட வேண்டும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அதிபராக நிக்கோலஸ் சர்கோசி இருந்தபோது பிரான்ஸ் அரசு பிரேசிலுக்கு நீர் மூழ்கிக் கப்பல்கள் விற்பனை செய்ததில் ஊழல் நடந்ததாக பிரான்ஸ் அரசின் நிதிவிவகார விசாரணைத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. அதுபற்றி விசாரணை நடத்திய விசாரணைத் துறை செனடர் ஒருவருக்கு இரண்டு வருட சிறை தண்டனை விதித்தது குறிப்பிடத் தக்கது. இதே துறையிடம்தான் இப்போது ரஃபேல் பற்றிய புகாரும் சென்றுள்ளது.
ரஃபேல்: பிரான்சிலும் ஊழல் புகார்! ரஃபேல்: பிரான்சிலும் ஊழல் புகார்! Reviewed by நமதூர் செய்திகள் on 23:50:00 Rating: 5

No comments:

Powered by Blogger.