இன்னும் தெளியாத ‘நீதிதேவன் மயக்கம்’

சிறப்புக் கட்டுரை: இன்னும் தெளியாத ‘நீதிதேவன் மயக்கம்’

ரவிக்குமார்

அறிஞர் அண்ணா எழுதிய அறுபதுக்கும் மேற்பட்ட நாடகங்களில் ‘நீதிதேவன் மயக்கம்’ என்பதும் ஒன்று. 1947இல் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு எழுதப்பட்ட நாடகம். திமுக துவக்கப்படுவதற்கு முன்பு தந்தை பெரியாரின் தலைமையில் அண்ணா செயல்பட்ட காலத்தில் எழுதப்பட்டது.
70 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அது இப்போது சர்ச்சைக்கு ஆளாகியிருக்கிறது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் அதைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்குவதாக முடிவு செய்து அதற்கு எழுந்துள்ள எதிர்ப்பின் காரணமாக மீண்டும் அது பாடத்திட்டத்தில் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராவணனை இரக்கமில்லா அரக்கன் என கம்பர் எழுதிய தீர்ப்பை சீராய்வு செய்ய ஆண்டவன் கட்டளையிட அது தொடர்பான வழக்கு நீதிதேவனின் அறமன்றத்தில் நடக்கிறது. ராவணனே தனது தரப்பை எடுத்துரைக்கிறான். கம்பர் எழுதியது எப்படி தவறு என்பதை மட்டுமல்ல தேவர்கள் எனக் கூறப்படுவோர், அக்கினி போன்ற பகவான்கள், விசுவாமித்திரர் போன்ற ரிஷிகள் எப்படி அநீதியானவர்கள் என்பதைக் காட்டுகிறான். பூலோகத்தில் இரக்கமற்ற முறையில் நடந்துகொள்ளும் நிலவுடமையாளரை, மருத்துவரை நீதிதேவனுக்குக் காட்டுகிறான். பெரிய புராணத்தில் வரும் சிறுதொண்டர் கதையையும், கோட்புலி நாயனார் கதையையும் உதாரணமாகக் காட்டி இரக்கம் என்பதன் விளக்கமென்ன என்று வாதிடுகிறான். அவனது கேள்விகளுக்கு விடை கூறாமல் நீதிதேவன் மயங்கிச் சாய்கிறார், அறமன்றத்தை விட்டு அவசரமாக வெளியேறும் கம்பர் கால் இடறி விழுகிறார். ராவணன் அவரைத் தாங்கிப் பிடித்து வெளியே அழைத்துச் செல்வதாக நாடகம் முடிகிறது.
24 காட்சிகளில் பூலோகம், மேலோகம் என இரண்டு உலகங்களில் மனிதர்கள், தேவர்கள், கடவுள்கள், காப்பியப் பாத்திரங்கள் எனப் பலரும் பங்கேற்பதாக இந்த நாடகம் அமைக்கப்பட்டிருக்கிறது.
அண்ணாவின் ‘கம்பரசம்’ நூலையும், ராமாயணத்தை ஏன் கொளுத்தவேண்டும் என விளக்கி (‘தீ பரவட்டும்’ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ள) அவர் ஆற்றிய உரைகளையும் இந்த நாடகத்தோடு இணைத்து வாசித்தால் மேலும் விரிவான புரிதல் கிடைக்கும்.
ராமாயணம் என்பது இன்றைய சூழலிலேயே இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் ஒன்றாக இருக்கும்போது 70, 80 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்திருக்கும் என்பதைக் கூறத் தேவையில்லை. ராமாயணத்தை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய அப்போது சோமசுந்தர பாரதியார் போன்ற திறமைமிக்கவர்கள் இருந்தனர், ஊர் ஊராக அதற்கு விழாக்கள் எடுக்கப்பட்டன. ராமாயண பக்தி படிப்பறிவற்ற மக்களை மட்டுமல்லாமல் படித்த பண்டிதர்களையும் மூழ்கடித்துக்கொண்டிருந்த நேரத்தில்தான் அண்ணா இந்த நாடகத்தை எழுதினார்.
“ஆண்டவனைப் பாதுகாப்பதற்கு மதம் என்னும் அகழியும், மதத்தைப் பாதுகாப்பதற்கு புராண இதிகாசங்கள் என்னும் வேலியும்” அமைக்கப்பட்டிருப்பதாக உணர்ந்திருந்ததால் வேதாந்திகளுக்கும் சித்தாந்திகளுக்கும் இடையே இருப்பதாகச் சொல்லப்படும் வேறுபாடுகளும், கோயில்களுக்கும் மடங்களுக்கும் இடையே இருப்பதாகச் சொல்லப்பட்ட வித்தியாசங்களும் வெறும் கட்டுக்கதையே என்று அண்ணாவால் விளக்கிக்காட்ட முடிந்தது.
புராணக் கதைகளிலிருந்தே பாத்திரங்களை எடுத்து அந்தப் புராணங்கள் உயர்த்திப் பிடிக்கும் தர்மம் என்பது எப்படி அதர்மமாக உள்ளது என்பதை அற்புதமாக நிறுவுகிறார் அண்ணா. பகுத்தறிவாளர்கள் என்பவர்கள் புராணங்களைப் படிக்காததால் உருவானவர்கள் அல்ல, அவற்றையெல்லாம் படித்துப் புரிந்துகொண்டதால் உருவானவர்கள் என்பதை அண்ணாவின் இந்த நாடகம் காட்டுகிறது.
மனித நீதியா, கடவுளின் நீதியா?
கடவுள்களின் தர்க்கமும் மனிதர்களின் தர்க்கமும் ஒரே கோட்டில் செயல்படுகின்றன என்பதை எடுத்துக்காட்டுவதன் மூலம் கடவுள்களின் நீதி மனிதர்களின் சட்டங்களையே அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது, அது மனிதர்களின் படைப்புதான் என்பதை நிறுவுகிறார் அண்ணா.
கொலைக்கஞ்சா கோட்புலியை நாயனார் எனப் போற்றுகிறீர்கள் என விமர்சிக்கும் ராவணன், “கட்டை விரலைக் காணிக்கையாகப் பெற்ற துரோணர், தாயின் தலையை வெட்டிய தரும சொரூபி பரசுராமன், பெற்றெடுத்த குழந்தையையும் பிரியத்தை அர்ப்பணித்த காதலியையும் கைவிடத் துணிந்த விசுவாமித்திரன் இவர்களெல்லாம் தவசிகள், ரிஷி சிரேஷ்டர்கள், பரமன் அருளைப் பெற்றவர்கள்” என எள்ளி நகையாடுகிறான். அவர்கள்தான் குற்றக் கூண்டில் இருக்க வேண்டியவர்கள் என்கிறான்.
ராமனையும் ராவணனையும் எதிர் எதிர் நிலையில் வைத்து தமிழ் அரசியல் களத்தில் ஏராளமான விவாதங்கள் நடந்துள்ளன. சிவ பக்தனாகவும், பிராமணனாகவும் சுட்டப்படுகிற ராவணனை திராவிடக் குறியீடாகக் கட்டமைப்பதில் உள்ள சிக்கலையும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். இங்கே அந்த விவாதங்களைத் தாண்டி தேவர் = தர்மம்; அரக்கர் = அதர்மம் என்று கட்டமைக்கப்பட்ட சமன்பாட்டைக் குலைத்துப்போடுகிறார் அண்ணா. புராணங்களின் மூலமாக அநீதியே நீதியாக முன்வைக்கப்படுவதன் பின்னால் இருக்கும் வன்முறையை எடுத்துக்காட்டுகிறார். சம்புகன், ஏகலைவன், அரிச்சந்திரன் என அதற்கான சான்றுகளை அடுக்குகிறார். கைகேயியின் செயலை நியாயப்படுத்தும் கம்பன், சூர்ப்பனகையின் காதலை மலினப்படுத்துவதை விமர்சிக்கிறார்.
அறிஞர் அண்ணா எழுதிய நாடகம் என்பதற்காக மட்டுமல்ல, இன்றைய ஆட்சியாளர்கள் வரலாற்றின் இடத்தைப் புராணங்களால் இட்டு நிரப்பிக்கொண்டிருக்கிற நேரத்தில் மாணவர்களிடையே நவீனத்துவ சிந்தனையைக் கிளர்த்துகிற முக்கியமான பிரதி என்ற வகையிலும் இந்த நாடகப் பிரதி பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும்.
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததுமுதல் மிகவும் திட்டமிட்ட முறையில் கல்வி நிறுவனங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. துணைவேந்தர்கள் முதல் செனட் உறுப்பினர்கள் வரை ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களும்கூட அதற்கு விதி விலக்காக இல்லை என்று கூறுகிறார்கள். இந்தப் பின்னணியில்தான் இந்தச் சர்ச்சையை அணுக வேண்டியுள்ளது.
அறிஞர் அண்ணாவின் பெயரும் உருவமும் தமிழ் மக்களிடையே கொண்டு செல்லப்பட்டிருக்கும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இன்றைய தலைமுறையினர் மத்தியில் எடுத்துச் செல்லப்படவில்லை. சனாதனம் என்பது பயங்கரவாதமாகப் பரிணமித்திருக்கிற இன்றைய சூழலில் அதை எதிர்ப்பதற்குத் தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி இந்திய அளவிலும் அண்ணாவின் சிந்தனைகள் பயன்படும். எனவே அவரது படைப்புகளின் நம்பகமான ஆங்கில மொழிபெயர்ப்பைக் கொண்டுவருவதற்குத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணாவின் நாடகங்கள் அனைத்தையும் புதிதாக நிகழ்த்தி அவற்றை யூடியூபில் பரவலாகக் கிடைக்குமாறு செய்ய வேண்டும்.
“எல்லோருக்கும் ஓர் உண்மை தெரிந்ததாக இருந்தாலும் அதை வெளிப்படையாகப் பொதுவெளியில் சொல்லும்போது எல்லாவற்றையும் அதுமாற்றுகிறது. இதுதான் பொது வெளியின் முரண்பாடு” எனச் சிந்தனையாளர் ஸ்லாவோஸ் ஸிஸேக் கூறுவது பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கு மிகவும் பொருந்தக்கூடியதாகும்.
‘கல்வி காவிமயமாக்கப்படுகிறதே’ எனக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தால் போதாது. கடந்த 50 ஆண்டுகளில் கல்வியைப் பகுத்தறிவுமயப்படுத்துவது என்ற நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இன்னும் செய்யப்பட வேண்டிய கடமைகள் முதலானவற்றை மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்டவர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது. அதற்கான வாய்ப்பை அழகப்பா பல்கலைக்கழகம் உருவாக்கித் தந்திருக்கிறது. அதற்காக அதன் துணைவேந்தருக்கு நன்றி சொல்வோம்.

- முனைவர் ரவிக்குமார்
இன்னும் தெளியாத ‘நீதிதேவன் மயக்கம்’ இன்னும் தெளியாத ‘நீதிதேவன் மயக்கம்’ Reviewed by நமதூர் செய்திகள் on 03:02:00 Rating: 5

No comments:

Powered by Blogger.