முஸ்லிம் சமூகத்தின் கல்வி: ஹமீத் அன்சாரி கவலை!

முஸ்லிம் சமூகத்தின் கல்வி: ஹமீத் அன்சாரி கவலை!

டெல்லியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசிய முன்னாள் குடியரசு துணைத்தலைவர் ஹமீத் அன்சாரி, கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது முஸ்லிம் சமூகம் சந்தித்துவரும் பிரச்சினைகளில் முக்கியமானதென்று தெரிவித்தார்.
நேற்று (நவம்பர் 23) டெல்லியில் 12வது ஆண்டு டாக்டர் அஸ்கர் அலி நினைவு கருத்தரங்கு நடைபெற்றது. சீர்திருத்தவாதி, எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர் என்று பன்முக அடையாளம் கொண்ட அஸ்கர் அலியின் சிறப்பைப் பேசும் வகையில் இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது சமூகம் மற்றும் மதச்சார்பின்மைக்கான ஆய்வு மையம். இதில் கலந்துகொண்ட முன்னாள் குடியரசு துணைத்தலைவர் ஹமீத் அன்சாரி, ‘இந்திய முஸ்லிம்கள்: அன்றும் இன்றும்’ என்ற தலைப்பில் பேசினார். அப்போது, முஸ்லிம் சமூகத்தினர் கல்விக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்று கவலை தெரிவித்தார்.
“பல முறை, நாம் சந்தித்துவரும் முக்கியமான பிரச்சினைகள் பற்றிப் பேசியிருக்கிறோம். அடையாளம், பாதுகாப்பைப் போலவே, கல்வியும் நாம் சந்தித்துவரும் பிரச்சினைகளில் மிக முக்கியமானது. இதில், கல்வியை மிக முக்கியமானதாகக் காண்கிறேன். முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மையான மக்கள் கல்வியைப் புறக்கணிக்கின்றனர். குறிப்பிட்ட அளவிலான மக்களே கல்வியைத் தொடர்கின்றனர்” என்று அவர் கூறினார்.
“டெல்லியில் மிகப்பெரும் எண்ணிக்கையில் சீக்கியர்கள் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அகதிகளாக (பாகிஸ்தானில் இருந்து) வந்தவர்கள். அவர்கள் தங்களது வாழ்வை மட்டும் புனரமைத்துக் கொள்ளவில்லை; மதம் சம்பந்தமான நிறுவனங்களையும், கூடவே கல்வி நிறுவனங்களையும் தொடங்கினர். மிகச்சிறிய அளவிலான ஒரு சமூகம் இதனைச் செய்யும்போது, மிகப்பெரும் சமூகமான நாம் ஏன் இதைச் செய்யக்கூடாது?” என்று கேள்வி எழுப்பினார் அன்சாரி.
இந்தியாவில் 19 கோடி முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர் என்றும், சட்டப்பூர்வமான விதிமுறைகளைத் தாண்டி இச்சமூகம் சிறுபான்மையினம் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்நாட்டில் பெரும்பான்மைச் சமூக மக்கள் இடையே தொடர்ந்து கலந்துரையாடுவதன் மூலமாக, இரு தரப்புக்கும் இடையிலிருக்கும் மனக்குழப்பங்களை அகற்ற முடியும். இப்படிப்பட்ட கலந்துரையாடல்களை நடத்துவதனால், நமது மரபுகளையோ, பழக்கவழக்கங்களையோ கட்டுப்படுத்த முடியாது. நான் இன்னொருவரோடு வாதம் செய்யும்போது, எனது வழிதான் ஒரே வழி என்று சொல்லாமல் சமமான அளவில் ஒரு கலந்துரையாடலை மேற்கொள்ளலாம். இது, உலகின் பெரும்பாலான நாடுகளில் நிகழ்ந்துள்ளது. இந்த பார்முலா நம் நாட்டில் செல்லுபடியாகாது என்று நான் நினைக்கவில்லை” என்று அன்சாரி பேசினார்.
இந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் அரசியலமைப்பு நிபுணருமான ஏ.ஜி.நூரானி, தேசியப் பிரச்சினைகளில் முஸ்லிம்கள் பங்கேற்க வேண்டுமென்று அறிவுறுத்தினார். “முஸ்லிம் மக்களிடையே தற்போது ஒரு கிளர்ச்சி உண்டாகியுள்ளது. மதச்சார்பற்ற அடையாளம் மற்றும் அக்கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொள்வதால் மட்டுமே அக்கிளர்ச்சியைக் கட்டுக்குள் வைக்க முடியும்” என்று கூறினார். அதேநேரத்தில், நாட்டில் பாகுபாடு இல்லையென்று மறுப்பது உண்மையை மறுப்பதாகும் என்று அவர் தெரிவித்தார்.
முஸ்லிம் சமூகத்தின் கல்வி: ஹமீத் அன்சாரி கவலை! முஸ்லிம் சமூகத்தின் கல்வி: ஹமீத் அன்சாரி கவலை! Reviewed by நமதூர் செய்திகள் on 00:02:00 Rating: 5

No comments:

Powered by Blogger.