பணமதிப்பழிப்பால் மாபெரும் இழப்பு!

பணமதிப்பழிப்பால் மாபெரும் இழப்பு!

பணமதிப்பழிப்பு மற்றும் ஜிஎஸ்டி ஆகிய நடவடிக்கைகளால் இந்தியப் பொருளாதாரத்தில் ரூ.4.8 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மேற்குவங்க மாநில நிதியமைச்சர் கடுமையாகச் சாடியுள்ளார்.
டெல்லியில் நவம்பர் 23ஆம் தேதி சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களிடையே பேசிய மேற்குவங்க மாநில நிதியமைச்சரான அமித் மித்ரா, “சரக்கு மற்றும் சேவை வரி தவறான முறையில் அமல்படுத்தப்பட்டதால் 2017 ஜூலையிலிருந்து எங்களது மாநிலத்தின் வருவாய் ரூ.78,929 கோடி குறைந்துள்ளது. இத்தொகை மத்திய அரசால் இழப்பீட்டுச் சட்டத்தின் கீழ் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசானது தனது மார் தட்டிக்கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு பெருமை பேசிக்கொள்கிறது. ஆனால் அந்நடவடிக்கைகளால் சிறு தொழில்கள் பாதிக்கப்படுவதைப் பார்ப்பதில்லை.
பணமதிப்பழிப்பு நடவடிக்கையைப் பொறுத்தவரையில், அது விவசாயிகளையும், முறைசாரா துறையினரையும் பொருளாதார ரீதியாகக் கடுமையாகப் பாதித்துவிட்டது. ஜப்பான், சுவிட்சர்லாந்து போன்ற வளர்ந்த நாடுகள் கூடத் தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் இந்தியாவை விடக் கூடுதலான பணப்புழக்கத்தைக் கொண்டுள்ளன. பணமதிப்பழிப்பாலும் ஜிஎஸ்டியாலும் இந்தியப் பொருளாதாரத்தில் ரூ.4.8 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2015-16ஆம் ஆண்டிலிருந்தே இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்துவிட்டது. அது மீண்டும் அதிகரிக்கக் குறைந்தது நான்கு ஆண்டுகளாவது ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.
2015-16ஆம் நிதியாண்டில் 8.2 சதவிகித மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைக் கொண்டிருந்த இந்தியா, 2017-18ஆம் ஆண்டில் வெறும் 6.7 சதவிகித வளர்ச்சியை மட்டுமே எட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பணமதிப்பழிப்பால் மாபெரும் இழப்பு! பணமதிப்பழிப்பால் மாபெரும் இழப்பு! Reviewed by நமதூர் செய்திகள் on 23:56:00 Rating: 5

No comments:

Powered by Blogger.