எதிர்ப்பு போராட்டத்தின் சின்னமாக விளங்கும் காலித் மிஷ்அல்!

எதிர்ப்பு போராட்டத்தின் சின்னமாக விளங்கும் காலித் மிஷ்அல்!
மொசாத் சிறப்பு பயிற்சி அளித்து அனுப்பும் கொலைக்கார குழுக்களிடமிருந்து தப்பித்து ஃபலஸ்தீனுக்கு வெளியே எதிர்ப்பு போராட்டத்தின் மிகச்சிறந்த சின்னமாக ஹமாஸின் அரசியல் விவகார தலைவர் காலித் மிஷ்அல் திகழ்கிறார்.
காலிதின் வார்த்தைகளில் நிராசையின் அடையாளம் எதுவும் தென்படவில்லை. குழந்தைகளை பாஸ்பரஸ் குண்டுவீசி கொலைச் செய்யும் ஒரு தேசம் எவ்வளவுதான் ஜெயித்தாலும் தோல்வியை தழுவும் என்று காலித் திடமாக நம்புகிறார்.
மொசாத் நடத்திய ஒரு கொலை முயற்சியில் இருந்து காலித் மிஷ்அல் அல்லாஹ்வின் உதவியால் மயிரிழையில் தப்பிப் பிழைத்ததை தொடர்ந்து உலக அளவில் புகழ்பெற்றார்.
அச்சம்பவம் பின்வருமாறு:
”காலித் மிஷ்அல், ஹமாஸின் பிராந்திய தலைவராக ஜோர்தானில் அவ்வளவாக உலகுக்கு அறியப்படாமல் இருந்த போது, ‘இவர் தான் ஹமாஸ் இயக்கத்துக்கு முக்கியமான கமேண்டிங் தலைவர்களில் ஒருவர்’ என்று எப்படியோ யூகித்து… இஸ்ரேலின் உளவு கொலை நிறுவனமான மொசாட் ஏஜெண்டுகள் இருவர் ‘கனடா சிட்டிசன்ஸ்’ என்ற ஆவணங்களுடன் விசா வாங்கி, கனடா பாஸ்போர்ட்டுகளோடு ஜோர்டான் வந்தனர்.
ஜோர்தானில் காலித் மிஷ்அல், மக்களுடன் நடந்து கொண்டு இருக்கும் போது… அவரின் உடலில் ஓட்ட வைக்கப்பட்ட ஒரு அதி நவீன கருவியின் மூலம் இவருக்கு ஃபெண்டானில் என்ற கொடிய விஷம் பாய்ச்சப்பட்டது. 25 September 1997 அன்று ஜோர்டானில் நடந்த மொசாத்தின் இந்த கொலை பாதக செயலில், விஷம் தாக்கி உடனடியாக கோமாவுக்கு சென்று, இறப்பின் விளிம்பில் ஜோர்டான் மருத்துவமனையில் கிடந்தார் காலித் மிஷ்அல்…
காலிதின் உடலில் விஷத்தை பாய்ச்சிய மொசாத் ஏஜண்டுகளை மிஷ்அலின் மெய்க்காப்பாளர்கள் விரட்டிப்பிடித்தனர். அவர்களை ஜோர்டான் போலீஸ் கைதுச் செய்து சிறையில் அடைத்தது. அப்போது பாராட்டப்படும் படி ஜோர்டான் அரசு மிகப்பிரம்மாதமாக செயல்பட்டது..! அவர்கள் இஸ்ரேல் காரர்கள் என்று உலகுக்கு நிரூபித்தது. அவர்கள் மூலம் அந்த விஷத்துக்கு ஆண்டி டோட் (விஷ முறிவு மருந்து) இஸ்ரேலிடம் மட்டுமே உள்ளதாகவும் விசாரணையில் அறிந்தது. அனைத்தையும் இஸ்ரேல் மறுத்தது. அப்பட்டமாக தம்மை நிரபராதி என்று பொய் என்று கூறியது.
ஆனால்….. “உடனே, இஸ்ரேல் அந்த ஆண்டி டோட்டினை தரவில்லை எனில், ஜோர்டான்-இஸ்ரேல் அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வரும் என்றும் ஏஜெண்டுகள் தூக்கில் இடப்படுவார்கள் என்றும் தூதரக உறவு முடிவுக்கு வரும்” என்றும் மிரட்டலாக ஜோர்டான் மன்னர் ஹுஸைன் அதிரடியாக அறிவித்தார். எனவே, அமெரிக்க அதிபர் கிளிண்டன் இப்பிரச்சினையில் உள்ளே நுழைந்தார்.
இந்த கொலை முயற்சியை மிக வன்மையாக கண்டித்தார். உடனடியாக ஆண்டி டோட் ஜோர்டான் செல்ல வேண்டும் என்று இஸ்ரேலுக்கு உத்தரவு இட்டார். மொசாதின் தலைவர் மூலமாகவே… அவர் கையாலேயே… அந்த ஆண்டி டோட் ப்ளைட்டில் ஜோர்டான் வந்து சேர்ந்தது. பிழைத்தார் காலித் மிஷால். அல்ஹம்துலில்லாஹ்.
இந்நிலையில், ஜோர்டான் மன்னர் ஹுசைன், தன் மண்ணில் நடந்த கொலை முயற்சியில் ஈடுபட்ட அந்த இரு இஸ்ரேல் ஏஜெண்டுகள் இஸ்ரேலுக்கு தண்டனை இன்றி வேண்டும் என்றால்… ஹமாஸ் இயக்கத்தின் தானை தலைவரான ஷேக் அஹ்மத் யாஸீனை விடுதலைச் செய்யவேண்டும் என்று நிபந்தனை போட்டது.
(சிறு வயதில் இருந்தே நடக்க முடியாமல் வீல் சேரில் வாழும் அவரை இஸ்ரேல் ஆயுள் தண்டனை தந்து தம் சிறையில் வைத்து இருந்தது) அந்த மொசாத் ஏஜெண்டுகள் இஸ்ரேலுக்கு முக்கியம்… அவர்கள் வாய் திறந்தால்… பல உண்மைகள் வெளியேவரும் என்பதால் வேறு வழி இன்றி… நிபந்தனையை ஏற்று, ஷேக் யாஸீனை விடுதலை செய்தது இஸ்ரேல். ”
அல்லாஹ்வின் உதவியால் இஸ்ரேலின் கொலை முயற்சியில் இருந்து தப்பிய காலித் மிஷ்அல் இன்று இஸ்ரேலுக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்திற்கு தலைமை தாங்குபவர்களில் முக்கியமானவராக திகழ்கிறார்.நெதன்யாகுவிடமிருக்கும் நவீன தொழில்நுட்பம் எதுவும் கையில் இல்லாமலேயே எதிர்ப்பின் சின்னமாக விளங்குகிறார் காலித்.
1967-ஆம் ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமிப்பைத்தொடர்ந்து ஃபலஸ்தீனில் இருந்து குடும்பத்துடன் வெளியேறியபோது காலிதிற்கு வயது 11 ஆகும். கார்ட்டூன் சித்திரங்களுக்கும், மேற்கத்திய ஊடகங்களின் வக்கிரமான வர்ணணைகளுக்கும் பொருந்தாதவர் காலித் மிஷ்அல்.மேற்கத்திய பாணியில் அவர் உடை அணிந்திருப்பார்.வெட்டி குறைக்கப்பட்ட தாடி.அரபு மற்றும் ஆங்கிலத்தில் மிகச்சிறப்பாக பேசுவார். ஆகையால்தான் காலிதை அவமதிக்க கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் இஸ்ரேல் பயன்படுத்த தவறுவதில்லை.
எகிப்தில் அல் ஸீஸியும், அவரது கும்பலும் இஸ்ரேலுக்கு உதவிச் செய்துவருகின்றனர். “துணிச்சல் இருந்தால் காஸ்ஸாவுக்கு செல்லுங்கள்” என்று எகிப்தின் ஒரு பிரமுகர் காலித் மிஷ்அலுக்கு சவால் விடுத்தார்..’இவர் வளைகுடா நாடுகளின் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி ஹமாஸ், இஸ்ரேலுக்கு எதிராக நடத்தும் தாக்குதல்களை ஆதரிக்கிறார்’ என்று அண்மையில் நெதன்யாகு குற்றம் சாட்டினார்.
காஸ்ஸாவில் உள்ள இரண்டு டி.வி சானல்களை ஹாக் செய்த மொசாத், அண்மையில் தான் தங்கியிருந்த ஹோட்டலின் சமையல்காரர்களை காலித் மிஷ்அல் பாராட்டுவது போன்றதொரு காட்சியை ஒளிபரப்பியது.இது செயற்கையாக உருவாக்கப்பட்ட
காட்சியாகும்.
ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவரான அப்துல் அஸீஸ் ரன்தீஸியை இஸ்ரேல் ராக்கெட் ஏவி கொலைச் செய்ததைத் தொடர்ந்து காலித் மிஷ்அல் ஹமாஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 15-வது வயதில் இஃவானுல் முஸ்லிமீனில் உறுப்பினரான காலித் இப்போது மரணத்தின் நிழலில் தான் உள்ளார்.
ரஷ்யாவில் இருந்து இஸ்ரேலில் குடியேறிய இனவெறியின் சின்னமாக விளங்கும் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் லிபர்மான், ஜூலை 21-ஆம் தேதி மீண்டும் காலிதை கொலைச் செய்வோம் என்று மிரட்டல் விடுத்திருந்தார். “நாங்கள் ஒருபோதும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு சட்ட அந்தஸ்தை வழங்கமாட்டோம்.அதாவது, எவ்வளவு காலம் எடுத்தாலும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு சட்ட அந்தஸ்தை வழங்கமாட்டோம். இஞ்ச் இஞ்சாக நாங்கள் ஜெருசலத்தை மீட்போம்” – காலித் மிஷ்அல் கூறுகிறார்.குவைத், சிரியா என பயணித்த காலித் தற்போது கத்தரில் தங்கியுள்ளார்.
ஹமாஸுடன் பேசுவதற்கு தயங்கும் இஸ்ரேலின் கொள்கை தற்கொலைக்கு ஒப்பானது என்று கருதும் அமெரிக்க ராஜதந்திரகளும் உள்ளனர். ஸ்ப்னிவ் ப்ரெஷன்ஸ்கி, ஸ்கோக்ரோஃப்ட், பாதுகாப்பு செயலாளர் சக் ஹாகல், பாதுகாப்பு உளவுத்துறை தலைவர் லெஃப்டினண்ட் ஜெனரல் மைக்கேல் ஃப்ளின் உள்ளிட்டோர் ஹமாஸுடன் பேசவேண்டும் என்ற கோரிக்கையை எழுப்புவர்களாவர். இத்தகைய கொள்கை மாற்றத்திற்கு காரணம் காலித் மிஷ்அல் ஆவார்.
சொந்த சகோதரர்கள் உலகின் 4-வது ராணுவ பலம் கொண்ட இஸ்ரேலுடன் துணிவுடன் போராடும்போது, அதே எதிர்ப்பு போராட்டத்தின் இன்னொரு பாணியை கடைப்பிடிக்கிறார் காலித் மிஷ்அல். அல்லாஹ், காலித் மிஷ்அலுக்கு நீண்ட ஆயுளை வழங்கி தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கவும், அதன் மூலம் ஃபலஸ்தீன் விடுதலையை காணும் பாக்கியத்தையும் அவருக்கு அளிப்பானாக!
Khalid Mishal
(குறிப்பு:காலித் மிஷ்அல் குறித்து விரிவாக அறிந்திட சகோதரர் ரியாஸ் அஹ்மத் எழுதிய இலக்கியச் சோலை வெளியீடான ‘காலித் மிஷ்அல் ஹமாஸ் இயக்க முன்னோடி’ என்ற நூலை பார்க்கவும்)
அ.செய்யது அலி

எதிர்ப்பு போராட்டத்தின் சின்னமாக விளங்கும் காலித் மிஷ்அல்! எதிர்ப்பு போராட்டத்தின் சின்னமாக விளங்கும் காலித் மிஷ்அல்! Reviewed by நமதூர் செய்திகள் on 05:43:00 Rating: 5

No comments:

Powered by Blogger.