வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா யாருக்காக?
வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா யாருக்காக?
சமீப காலமாக அதிகரித்துவரும் வகுப்புவாத வன்முறை தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்துவருகிறது.
பாஜக தரப்பில் இம்முறையும் வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா பெரும்பான்மை யினரான இந்துக்களுக்கு எதிரானதுபோல் சித்தரிக்கப்படுகிறது. இதற்குப் பின்னால் உள்ள உண்மை என்னவென் பதைத் தெரிந்துகொண்டால், இதுபற்றி மக்கள் ஒரு முடிவுக்கு வர முடியும்.
முஸ்லிம் மதச் சிறுபான்மையினரை மட்டுமே மைய மாகக் கொண்டு வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா, அதன் எதிர்ப்பாளர்களால் தொடர்ந்து விவாதிக்கப்படு கிறது. இம்மாதிரியான பார்வை தவறானது மட்டுமல்ல, மக்களைத் திசைதிருப்பும் உள்நோக்கம் கொண்டதும்கூட. கலவரங்கள் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது மதக் கலவரங்கள் என்றாலும் இங்கு இனம், சாதி, மொழி போன்றவை அடிப்படையில் சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்களும் நடக்கத்தான் செய்கின்றன.
உண்மையில் இந்தச் சட்டம் மொழி, மதச் சிறுபான்மை யினர், தலித் மக்கள், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பெண்கள் என்று அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கிறது. அப்படியென்றால், எந்த அடிப்படையில் இந்தச் சட்டம் பெரும்பான்மையினருக்கு எதிரானது என்ற கேள்வி எழுவது இயல்பானது.
பெரும்பான்மை என்றால் என்ன?
முதலில் பெரும்பான்மை என்றால் என்ன என்று பார்க்கலாம். எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால், மேற்குறிப்பிட்ட மொழி, மதச் சிறுபான்மையினர், தலித் மக்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மலைவாழ் மக்கள், பெண்கள் ஆகியோர் தோராயமாக 90% பேர். மதத்தின் அடிப்படையில் இந்துக்கள் பெரும்பான்மையினர். அவர்களில் பெண்கள், தலித் மக்கள், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மொழிச் சிறுபான்மையினர் ஆகியோர் ஏறக்குறைய 90% பேர். மொழியின் அடிப்படையில் இந்தி பேசும் மக்கள் பெரும்பான்மையினர். அவர்களிலும் அதே 90% மக்களுக்கு இந்தச் சட்டம் பாதுகாப்பு அளிக்கிறது. எஞ்சியுள்ள 10% பேரில் அனைவருமே வெவ்வேறு சமூகத்தினரிடையே வெறுப்பை விதைப்பதில், கலவரத்தில், திட்டமிட்ட படுகொலையில், பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்வதில் ஈடுபடுபவர்கள் அல்ல. உண்மையில், ‘பெரும்பான்மை' என்ற பிரயோகம் இங்கு எவ்வளவு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை இதிலிருந்து யாரும் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
அடுத்து, முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த சில பத்தாண்டுகளில் மக்கள் வேலை தேடி ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு இடம் பெயர்வது அதிகரித்துவருகிறது. சில அசாதாரணமான, அல்லது அசாதாரணமாகத் திட்டமிட்டு மாற்றப்படுகிற சூழ்நிலைகளில், இடம்பெயர்ந்த மக்கள் தாக்கப்படுவதும் அதிகரித்துவருகிறது. அவர்கள் உயிருக்குப் பயந்து காலம்காலமாக உழைத்துச் சேர்த்த உடைமைகளை விட்டுவிட்டு, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓட வேண்டிய துயரமான சூழலும் உருவாகிறது. எடுத்துக் காட்டாக, தமிழர்கள் கேரளம், கர்நாடகம், மும்பை, அந்த மான் நிகோபார், டெல்லி போன்ற இடங்களில் அதிக அளவில் வாழ்கின்றனர். கர்நாடகத்திலும் மும்பையிலும் தமிழர்களுக்கு எதிராக நடந்த கலவரங்களை நாம் அறிவோம். அதேபோல், உத்தரப் பிரதேசம், பிஹார் மாநில மக்களுக்கு எதிராக மும்பையில் தொடர்ந்து சிவசேனை, எம்.என்.எஸ். போன்ற கட்சிகளால் உருவாக்கப்படும் கலவரங் களும், சமீபத்தில் வட கிழக்கு மாநில மக்களுக்கு எதிராக சமூக விரோதிகளால் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட வதந்திகளும் நமக்குத் தெரியாததல்ல. வேகமாக மாறிவரும் இடப்பெயர்வுச் சூழலில் மொழிச் சிறுபான்மையினரைக் காப்பாற்றவும், அவர்களுக்கு உரிய நியாயமும் இழப்பீடும் கிடைக்க வழிவகை செய்யவும் இது போன்ற சட்டங்களால் மட்டுமே முடியும்.
உத்தரவாதம் எதுவும் இல்லை
வெளியிடங்களில் மட்டுமல்ல, சொந்த மாநிலத்திலும், சொந்த ஊரிலும்கூட சாதியின், இனத்தின் பெயரால் அப்பாவி மக்கள் அல்லல்படுகிறார்கள். நீதிக்கான அவர்களின் குரல்கள், குரல்வளையிலேயே நசுக்கப்படுகின்றன.
மேலும், இதுவரை இந்தியாவில் நடந்துள்ள கலவரங்களில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் மதச் சிறு பான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதிலும் குறிப்பாக, மதத்தின் பெயரால் சுய அரசியல் லாபங்களுக்காக அவர்கள் நூற்றுக் கணக்கில் படுகொலை செய்யப்படுவதும், அவர்களைப் பாதுகாக்க வேண்டிய அரசு இயந்திரமே கலவரங்களை முன்னின்று திட்டமிட்டு நடத்துவதும், நீதிக்கான போராட்டங்களில் அவர்கள் அலைக்கழிக்கப்படுவதும், பாதிக்கப்பட்டவர்கள், குற்றவாளிகளைப் போல நகரத்தின் விளிம்புக்கு வாழத் துரத்தப்படுவதும், சொந்த நாட்டில் அவர்கள் அந்நியர்களைப் போல வகுப்புவாத சக்திகளால் சித்தரிக்கப்படுவதும், இன்னும் எத்தனை நாட்களுக்கு அரங்கேறப்போகிறது? இந்தக் கொடூரத்தை நிகழ்த்துபவர்களையும், அதைக் கைகட்டி வேடிக்கை பார்ப்பவர்களையும் இந்தச் சட்டம் பொறுத்துக்கொள்ளாது என்பதில் என்ன தவறு இருக்க முடியும்?
முக்கியமாக, எல்லா இடங்களிலும் மதச் சிறுபான்மை யினர், குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களாக மட்டுமே இருப்பதில்லை. அவர்கள் இந்துக்களாகவோ கிறித்தவர்களாகவோ முஸ்லிம்களாகவோ சீக்கியர் களாகவோ மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களாகவோ இருக்க வாய்ப்புள்ளது. எடுத்துக்காட்டாக, இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கும் பகுதிகளில் வேறு ஏதாவது ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையினராக இருந்து, அந்த மதத்தைச் சேர்ந்த சமூக விரோத சக்திகள் இந்துக்களுக்கு எதிராகக் கலவரத்தில் ஈடு பட்டால், அவர்கள் மீதும் இந்தச் சட்டம் பாயும். இதற்கு மதவித்தியாசம் எதுவும் கிடையாது.
மொழி, மதம், இனம், சாதி தொடர்பான எந்தக் கலவரத்திலும் பெண்களுக்கே பேரழிவுகள் வந்துசேர் கின்றன. பெண்களை வன்புணர்வு செய்யாமல் எந்தக் கலவரமும் முடிவுக்கு வருவதில்லை. பாதிக்கப்பட்ட பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு நடந்த கொடுமையை வெளியில் சொல்ல முடியாமல், உள்ளுக்குள்ளேயே வெந்து புழுங்குகிறார்கள். ஆனால், இது போன்ற கொடூர மான குற்றங்களைச் செய்த குற்றவாளிகள் கலவரச் சூழலில் வெற்றி வீரர்களாக வெளியில் உலவுகிறார்கள். இந்தக் குரூரத்தைத் தடுக்கும் ஒரு சட்டம் எப்படி பிரச்சினைக்குரியதாக இருக்க முடியும்?
காஷ்மீர் பண்டிட்டுகள், குஜராத், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள், கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள், டெல்லியில் வசிக்கும் சீக்கியர்கள், மும்பையில் வாழும் வட மாநில மக்கள், ஒடிஸாவின் மலைவாழ் மக்கள், வட கிழக்கு மாநிலங்களில் இனக் குழுக்கள் என்று பாதிக்கப்படுபவர் யாராக இருந்தாலும், அவர்களுக்கு உடனடியாக நீதி வழங்கவும், கலவரங்களில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்கவும் இந்தச் சட்டம் ஆவன செய்கிறது. இது போன்ற சட்டங்கள் மட்டுமே கலவரங்களிலிருந்து சாதாரண, அப்பாவி மக்களைப் பாதுகாக்கும். பெரும்பான்மையினர் பெயரால் இந்த மசோதாவைத் தடுக்க நினைப்பவர்கள், உண்மையில் பெரும்பான்மை மக்களின் பாதுகாப்புக்குத்தான் ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தியராக இருக்கும் ஒவ்வொருவரையும் கலவரச் சூழலிலிருந்து பாதுகாப்பது அரசின் கடமை. இதில் பெரும்பான்மை, சிறுபான்மை விவாதங்கள் அபத்த மானவைமட்டுமல்ல, ஆபத்தானவையும்கூட.
- ஜோதிமணி, எழுத்தாளர், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்,
தொடர்புக்கு: jothimani102@gmail.com
http://tamil.thehindu.com
வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா யாருக்காக?
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:22:00
Rating:
No comments: