அருண் ஜெய்ட்லி வீட்டுப் பெண்களுக்கு நிகழ்ந்தாலும் சின்ன விஷயம்தானா?
இந்தியாவில் மனசாட்சி உள்ள மக்களை கலங்க வைத்தது ஓடும் பஸ்ஸில் நிர்பயாவிற்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்.
பாலியல் கொடுமைகளுக்கு எதிரான குரல்கள் வலிமையாக ஒலிக்க அச்சம்பவமே காரணமாக இருந்தது. காங்கிரஸ் ஆட்சியின் கையாலாகததனத்திற்கு எதிராக மக்கள் திரண்டதும் அச்சம்பவத்திற்குப் பிறகுதான். பாஜக அறுவடைக்கும் அதுவும் ஒரு காரணம்.
ஆனால் நிலைமைகளில் இன்னும் மாற்றம் வரவில்லை என்பதும் அயோக்கியர்கள் இன்னும் உலவிக் கொண்டிருக்கிறார்கள் என்பது யதார்த்தம்.
ஆனால் அச்சம்பவம் ஒரு சிறிய சம்பவம். அதை ஊதிப் பெருக்கியதால் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டு இந்தியாவிற்கு வர வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் வராமல் போய்விட்டது என்று அமிர்த்சர் தொகுதியில் தோற்றுப் போன, இரண்டு முக்கிய அமைச்சகங்களை கையில் வைத்துள்ள அருண் ஜெய்ட்லி கூறியுள்ளது கேவலமான ஒன்று.
பாஜககாரர்களின் இரட்டை நாக்கிற்கு இதுவும் ஒரு உதாரணம். ஒரு பெண் ஓடும் பேருந்தில் கொடூரமாக ஒரு வெறி கொண்ட கூட்டத்தினால் சிதைக்கப்பட்டது இந்த பெரிய மனிதனுக்கு சாதாரண விஷயமாம். ஊடகங்கள் ஊதிப் பெருக்கியதால் ஆட்சிக்கு வந்த கட்சியின் தோற்றுப் போன மனிதர் கூறுகிறார்.
பெண்கள் மீதான பாஜக வின் பார்வையைத்தான் ஜெய்ட்லி பிரதிபலிக்கிறார். பெண்ணடிமைத்தனத்தை பின்பற்றுகிற பிற்போக்கு இயக்கத்திடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? நாங்கள் தெய்வமாக பெண்களை மதிக்கிறோம் என்று பம்மாத்து பின்னூட்டங்களை யாரும் இட வேண்டாம்.
பெண்களை உணர்வுள்ள, ரத்தமும் சதையுமான ஆசாபாசம் கொண்ட மனுஷியாக பாஜக என்றும் பார்த்ததில்லை. ஆர்.எஸ்.எஸ் பாரம்பரியம் அது. ஒரு இளம்பெண்ணை வேவு பார்க்கச் சொன்னவரை பிரதமராகவும் வேவு பார்த்தவரை அகில இந்திய தலைவராகவும் கொண்டுள்ள ஒரு கட்சி பெண்களை மதிக்கிறது என்று சொன்னால் சிரிப்புதான் வரும்.
இரண்டு கேள்விகளை நான் அருண் ஜெய்ட்லியிடம் கேட்டாக வேண்டும், எழுதுவதற்கு என் விரல்கள் கூசினாலும் கூட.
உங்கள் வீட்டுப் பெண்களுக்கும் நிர்பயா போன்ற தாக்குதல் நிகழ்ந்தாலும் அதுவும் உங்களைப் பொறுத்தவரை சிறிய சம்பவம்தானா மிஸ்டர் அருண் ஜெய்ட்லி?
பாலியல் கொடுமைகள் சிறிய விஷயமென்றால் பின் என்ன எழவிற்கு உ.பி யில் அகிலேஷ் யாதவும் கர்னாடகத்தில் சித்தராமையாவும் பதவி விலக வேண்டும் என்று உங்கள் கட்சிக்காரர்கள் கலாட்டா செய்தார்கள்? ஷீலா தீட்சித்திற்கு எதிராக நிர்பயா பிரச்சினையில் பாஜக மாணவர் அணி போராடியது? அதெல்லாம் வெறும் ஊரை ஏமாற்றும் மோசடியா?
நன்றி : ஒரு ஊழியனின் குரல்
அருண் ஜெய்ட்லி வீட்டுப் பெண்களுக்கு நிகழ்ந்தாலும் சின்ன விஷயம்தானா?
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:38:00
Rating:
No comments: