மாமன் மகள் படக்கதையான மோடியின் அமைச்சரவை
நடிகர் சத்யராஜ் நடித்த மாமன்மகள் படத்தில்...சத்யராஜுக்கு மாமாவாக வரும் கவுண்டமணி கேட்பார் ..
மாப்ள ஓரு கையில எத்தன பேர அடிப்பே... 20..30 என்பார் சத்யராஜ், கவுண்ட மணி : இரண்டுகையில ... சத்யராஜ் 100 ,150 என்பார். கவுண்டமணி அப்போது சொல்வார் மாப்ள நீ அரசியல்வாதியாக முழுதகுதி இருக்கு என்பார். இப்படித்தான் இருக்கிறது இந்திய அரசியல் ... அதிலும் குறிப்பாக தற்போதைய மோடி அரசு..
கிரமினல்கள் நிறைந்த அமைச்சரவை..
அரசியல் என்பது கிரிமினல்களின் கூடாரமாகிவிடும் என முன்னாள் மத்திய உள்துறைச் செயலாளர் நரேந்திர நாத் வோரா தலைமையிலான கமிட்டியின் அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது. ஆள்பலம், பணபலம் மட்டுமின்றி, நில பேரங்கள், சாராய வியாபாரம், தாதுப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் இன்ன பிறவற்றின் விற்பனையில் ஈடுபட்டு வரும் மாஃபியா கும்பல்களாலும் நமது தேர்தல் நடைமுறைகள் செயல் படுத்தப்படுகின்றன. “பாஜகவின் வேட்பாளரோ அல்லது தே.ஜ.கூட்டணியின் வேட்பாளரோ, யாராக இருந்தாலும் சரி... எவரையும் நான் விடப்போவதில்லை...
குற்றம் சாட்டப்பட்டவர்களில் யார் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் எனப் பார்த்து விடுவோம். அரசியலைச் சுத்தப்படுத்த முடியாது என்று யார் சொன்னது? அதனைச் செய்திடுவதற்குத்தான் நான் வந்திருக்கிறேன்”. ஏப்ரல் மாதம் தேர்தல் பிரச்சாரத்தின் போது உத்திரப் பிரதேசத்தின் ஹர்டாய் நகரில் மோடி பேசிய பேச்சின் ஒரு பகுதியே இது.
ஆனால், பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் கிட்டத்தட்ட 33 சதவிகிதத்தினர் கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்கள். 20 சதவிகிதத்தினர் மிகவும் மோசமான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள். காங்கிரசின் பங்கு முறையே 18 மற்றும் 7 சதவிகிதம் மட்டுமே. பா.ஜ.கவுடன் ஒப்பிடுகையில், காங்கிரஸ் கொஞ்சம் பரவாயில்லை போலத் தோன்றக்கூடும். மோடி பிரதமராகப் பதவியேற்ற பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் எல்லாம் அவரவரது வழக்குகளில் இருந்து விரைவில் விடுபட்டு வர வேண்டும் எனக் கறாராகக் கூறியிருக்கிறாராம்.
இதுதான் மோடி பாணியிலான சுத்திகரிப்பு போலும்!பாஜகவில் குற்றப் பின்னணி கொண்ட எம்.பிக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்பது ஒருபுறம். மறுபுறம் வேடிக்கை என்னவெனில், அதில் ஒரு பகுதியினர் மோடி அரசில் அமைச்சர்களாக ஆக்கப்பட்டிருப்பதே. மோடியின் அமைச்சரவையில் இருக்கும் 45 அமைச்சர்களில் 13 பேர் கிரிமினல் வழக்குகளுக்கு உள்ளானவர்கள். அதில் சிலர் மோசமான குற்றச்சாட்டிற்கு ஆளானவர்கள். ஆனால், மோடிக்கு இதுவெல்லாம் புதிதல்ல. அவர் குஜராத்தின் முதல்வராக இருந்த போது, ஜூன் 2013ல் சட்ட விரோதமாக சுண்ணாம்புத்தாது தொழிலில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவரது அரசில் அமைச்சராக இருந்த பாபு பொக்கிரியா மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். ஆனால் அதற்குப் பின்னரும் கூட, ஓராண்டுக் காலம் வரை அவர் மோடியின் அமைச்சரவையில் நீடிக்க அனுமதிக்கப்பட்டார். ஆக மொத்தத்தில், இதுதான் மோடி ஸ்டைல் வெளிப்படைத்தன்மை, நல்ல நிர்வாகம், அரசியலைச் சுத்தப்படுத்தும் ஆவேசம்.
குற்றப்பின்னணி கொண்ட அமைச்சர்கள் நீக்கப்பட வேண்டும் என்று தொடுக்கப்பட்ட பொது நல வழக்கில், அண்மையில் (ஆகஸ்ட் 27) உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. குற்றப் பின்னணி கொண்டவர்களை அமைச்சரவையில் இருந்து நீக்குவதற்கு தங்களுக்கு அதிகாரம் இல்லை என்றபோதும், அவர்களைத் தவிர்ப்பது அரசியலுக்கு ஆரோக்கியமானது என பிரதமருக்கும், மாநில முதல்வர்களுக்கும் நீதிபதிகள் அறிவுரை வழங்கியிருக்கின்றனர். இதுதொடர்பாக கிரிமினல் வழக்குகள் உள்ள அமைச்சர்கள் குறித்த சில விவரங்களையும் நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையிலிருந்து நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த அறிவுரையை ஏற்றுக்கொண்டு மோடி அரசு செயல்படுமா என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம். மோடி இப்போது தானே பதவிக்கு வந்திருக்கிறார். சற்று பொறுத்திருந்து பார்க்கலாம்! இது மோடியின் ஆதரவாளர்கள் மற்றும் அவரது ஆதரவு ஊடகங்கள் கூறும் சால்ஜாப்புக்கள்.
தொகுப்பு : செல்வன்
நன்றி : இன்றைய வானம்
மாமன் மகள் படக்கதையான மோடியின் அமைச்சரவை
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:15:00
Rating:
No comments: