போலீசாரிடம் லஞ்சம் வாங்கினாரா ராஜ்நாத்சிங் மகன்?
டெல்லி: உத்தர பிரதேச மாநில இடைத்தேர்தலில் போட்டியிட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மகனுக்கு டிக்கெட் அளிக்க பாஜக மறுத்துவிட்ட நிலையில் இதுகுறித்து ஆர்எஸ்எஸ் மற்றும் பிற தலைவர்களிடம் புலம்பிவருகிறார் ராஜ்நாத்சிங். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அரசியலைவிட்டே விலக தயார் என்றும் அவர் கூறினார். உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள 13 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட தனது மகன் பங்கஜ்சிங்கிற்கு வாய்ப்பு கேட்டார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங். ஆனால் நேற்று வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் பங்கஜ்சிங் பெயர் இடம்பெறவில்லை. பாஜக தலைவராக இருந்த ராஜ்நாத்சிங், பிரதமருக்கு அடுத்த அதிகாரம் படைத்த மத்திய உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்துவருகிறார். அவரின் மகனுக்கு டிக்கெட் மறுக்கப்பட்டதற்கு முறைகேடு புகார்தான் காரணம் என்ற தகவல் வெளியானது. அதாவது, மத்திய அமைச்சராக தனது தந்தை பதவி வகிப்பதை பயன்படுத்திக்கொண்டு பங்கஜ்சிங், போலீசாரிடம் லஞ்சம் பெற்றதாக சில ஊடகங்களில் செய்திகள் கசிந்தன. இந்நிலையில் தனக்கு எதிராக சதி நடப்பதாக ராஜ்நாத்சிங் குற்றம்சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் இதுகுறித்து கூறிய ராஜ்நாத்சிங், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவி விலகவும் தயார் என்றார். மேலும் பாஜக மூத்த தலைவர்களிடமும், ஆர்எஸ்எஸ் தலைவர்களிடமும் ராஜ்நாத்சிங் புகார் அளித்துள்ளார். அதில், அமைச்சரவையிலுள்ள ஒரு நபர்தான் இதுபோன்ற வதந்திகளை பரப்பிவருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில் ராஜ்நாத்சிங் மகன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. பிரதமர் அலுவலகத்துக்கு பங்கஜ்சிங் குறித்த எந்த குற்றச்சாட்டும் வரவில்லை என்றும், எனவே இதுபோன்ற வதந்திகளை பரப்பி, அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சதி நடப்பதாகவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசாரிடம் லஞ்சம் வாங்கினாரா ராஜ்நாத்சிங் மகன்?
Reviewed by நமதூர் செய்திகள்
on
02:33:00
Rating:
No comments: