மதச்சார்பின்மையும்! பாசிசமும்!!
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டபோதுதான். ஆம்! அப்போதே இந்த நாட்டின் மதச்சார்பின்மையை சிதைத்து பாசிசம் இந்த தேசத்திற்கு சவால்விட ஆரம்பித்துவிட்டது.
இந்திய சுதந்திர போராட்டத்தை இரண்டு விதமாக பிரிக்கலாம். காந்திக்கு முன், காந்திக்கு பின். ஆங்கிலேயர்களை எதிர்த்து பல தலைவர்கள், பல மன்னர்கள் போராடினார்கள். அதெல்லாம் அந்தந்த பகுதியில் மட்டுமே நடந்தது.
அதனால் தான் பூலித்தேவன் போராடும்போது திருவிதாங்கூர் மன்னர் துணைக்கு வரவில்லை. கட்டபொம்மன் போராடும்போது எட்டப்பன் துணைக்கு வரவில்லை. திப்பு சுல்தான் போராடும்போது நவாப்களும், மைசூர் உடையார்களும் துணைக்கு வரவில்லை.
அதேபோல எத்தனையோ தலைவர்கள் போராடினார்கள். அந்த போராட்டங்களெல்லாம் அந்த பகுதியில் சிறு சலசலப்பை உருவாக்கினார்கள். ஏனென்றால் எல்லா பகுதியிலும் சுதந்திர எழுச்சி அப்போது ஏற்படவில்லை.
ஆனால் காந்தி இந்தியா வந்தபிறகுதான் எல்லா மக்களிடமும் ஒரே எழுச்சி ஏற்பட்டது. ஏனென்றால் அவர் முதலில் செய்தது காரியம் இந்தியா முழுமைக்கும் சுற்றி வந்ததுதான். அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்தார், சிந்தித்தார், அவர்களை ஒருங்கிணைத்தார். பல பயணங்கள், பல்வேறு பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள் மூலம் இந்திய மக்களை ஒரே தேசமாக கட்டியெழுப்பினார்.
அவருக்குமுன் இந்தியாவை முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் நிலப்பரப்பில் ஒரே தேசமாக உருவாக்கினார்கள். ஆனால் அவர்களால் மக்களின் மனங்களை ஒருங்கிணைக்க முடியவில்லை.
காந்திதான் இந்திய மக்களை ஒரே தேசமாக ஒருங்கிணைத்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சிறிது காலத்திலேயே துண்டு, துண்டாக சிதறும் என்றுதான் பலர் எண்ணினார்கள். காந்தியிசம்தான் இன்றும் இந்தியாவை காப்பாற்றி வருகிறது. அதற்காகதான் அவர் தனது உயிரை விட நேர்ந்தது.
எதற்காக அவர் கொல்லப்பட்டார். ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் உயர்த்தி பிடித்ததால். அந்த கொள்கைதான் இந்தியாவின் அற்புத கொள்கையாக உலகம் பார்க்கிறது. ஆனால் இன்று மத்திய பாஜக மோடி அரசு அமைந்ததிலிருந்து அதை சிதைக்க முயன்று வருகிறது.
காந்தியை கொன்ற கொட்சேவிற்கு சிலை அமைக்கப்படுகிறது. மீரட், லக்னோ உள்ளிட்ட 3 இடங்களில் கோவில் கட்டப்படுகிறது. நாட்டின் தலைநகரிலேயே சிலை அமைக்க மத்திய அரசிடமே நிலம் கேட்கப்படுகிறது. கோட்சேயின் தடைசெய்யப்பட்ட புத்தகம் மீண்டும் விற்பனைக்கு வருகிறது. அவனை தியாகியாக காட்டும் திரைப்படம் எடுக்கப்படுகிறது என தொடர்ந்து கோட்சேவை தேசியவாதியாக ஆக்குவதற்கு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதே போல மத்திய அரசின் பிரதிநிதிகளே மதச்சார்பின்மைக்கு எதிராக பேசிவருகிறார்கள். மத கலவரத்தை தூண்டுவது, மத வெறுப்பை பரப்புவது, கட்டாய மதமாற்றம், வரலாற்றை திரிப்பது மாட்டுகறிக்கு தடை, மதமாற்ற தடை சட்டம் கொண்டு வருவோம் என்று கூப்பாடு போடுவது, தாஜ்மஹால் முன்பு சிவன் கோவிலாக இருந்தது, 2021 க்குள் இந்தியாவில் சிறுபான்மையினர் இந்துக்களாக மாறவேண்டும் என்று மிரட்டுவது என்பது போன்ற பல அழிவு செயல்களை செய்து வருகிறார்கள்.
இது சாதாரண குடிமகனையும் பாதிக்கிறது. ஒரு பக்கம் இப்படி பேசிக்கொண்டே மறுபக்கம் சத்தமில்லாமல் இந்தியாவின் வளங்களை தனியார் முதலாளிகளுக்கு அள்ளிகொடுப்பது, மக்களுக்கு விரோதமான சட்டங்களை இயற்றுவது என மோடி அரசு சாதாரண மக்களுக்கு எதிராக, விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
இந்த நாட்டில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் விரும்பும் குடிமக்களாகிய நாம் அனைவரும் கைகோர்த்து காந்தியின் மதச்சார்பின்மை கொள்கையை தூக்கி பிடிப்பதின் மூலம் கோட்சேவின் சீடர்களிடமிருந்து நமது தேசத்தை பாதுகாக்க முடியும்.
மதச்சார்பின்மை கொள்கையை நிலைநாட்ட போராடுவோம்!
பாசிசத்தை தோற்கடிப்போம்!!
- வி.களத்தூர் பாரூக்
மதச்சார்பின்மையும்! பாசிசமும்!!
Reviewed by நமதூர் செய்திகள்
on
21:19:00
Rating:
No comments: