பேரா. அ. மார்க்ஸ் அவர்களை பிராண்டும் ஜெயமோகன்! – முஹம்மது ஃபைஸ்
பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்கள் சில நாட்களுக்கு முன்பு முகநூலில் இப்படி ஒரு குறிப்பை எழுதி இருந்தார்:
“ஜெயமோகனைப் படிப்பவர்கள் இந்த நாட்டின் இஸ்லாமியர்களையும் இதர சிறுபான்மையினரையும் வெறுக்கும் மனநிலைக்கு இட்டுச் செல்லப்படுபவர். ஜெயகாந்தனையோ, பாரதியையோ படிப்பவர்கள் இந்த நாட்டின் எந்த மக்கள் பிரிவினரையும் வெறுப்பரோ…?”
ஜெயமோகன்
ஆண்டுக் கணக்கில் கூட வேண்டாம். ஒரே ஒரு மாதம் தொடர்ந்து ஜெயமோகன் எழுதி வருவதை கவனித்தால் போதும். பளிச்சிடும் இந்த உண்மையை யாரும் தெரிந்து கொள்ளலாம். இதைத்தான் மார்க்ஸ் அவர்கள் எழுதி இருந்தார். இதை வைத்து மார்க்ஸ் அவர்களை பிராண்டி இருக்கிறார் ஜெயமோகன். தனது வழக்கமான அவதூறுகளை அள்ளித் தெளித்திருக்கிறார்.
“மார்க்ஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பேசுபவர். அதற்காக கூலி பெறுபவர்.” – இது எப்போதும் சொல்வதுதான். இன்னொரு ஈனத்தனமான அவதூறை இப்போது முதன் முறையாக சொல்கிறார்:
“இந்து மதம் அழிய வேண்டும் என விழையும் அ. மார்க்ஸ் என்ற கிறிஸ்தவப் பின்னணி கொண்ட சிந்தனையாளர் இஸ்லாமிய மேடையில் முழங்குவது இந்தியாவில் மதநல்லிணக்கத்தை உருவாக்குவதற்காக அல்ல…”
சிந்தையில் புண் வந்த ஒருவரால்தான் இப்படி எழுத முடியும். போகட்டும். இவர் தீவிரவாதிகள் என்று யாரை சொல்கிறார் என்று புரிகிறதா? அல்காய்தாவோ, லஷ்கர் இ தைபாவோ என்று நினைத்து விடாதீர்கள். அதெல்லாம் நாட்டில் பாமரர்கள் நினைப்பது. ஜெயமோகனை பொறுத்த வரையில் ஷாகா என்ற ‘புனித’ பயிற்சி பெற்றவரல்லவா? அதனால் முஸ்லிம்களுக்காக போராடும் எந்தவொரு இயக்கமும் அவரைப் பொறுத்தவரையில் பயங்கரவாத இயக்கமே.
அதனால்தான் இவர் பார்வையில் பாப்புலர் ஃப்ரண்ட், த.மு.மு.க, முஸ்லிம் லீக் போன்றவை தீவிரவாதத்தை விதைக்கும் இயக்கங்களாக தெரிகின்றன. இதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பேராசிரியர் மார்க்ஸ் போன்றவர்கள் தீவிரவாதத்தின் முகவர்களாக தெரிகின்றனர்.
அதனால்தான் சமீபத்தில் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வுடன் மேடையை பகிர்ந்த மனுஷ்ய புத்திரனை கண்டிக்கிறார். ஜவாஹிருல்லாஹ் தீவிரவாதத்தின் முகமாம். அதனால் மனுஷ்ய புத்திரன் இது போன்ற நிகழ்சிகளை தவிர்க்க வேண்டுமாம். உடம்பின் ஒவ்வொரு செல்லிலும் வெறுப்பு சித்தாந்தம் ஊடுருவி இருப்பதால் இப்படித்தான் ஜெயமோகன் எழுத முடியும். இருக்க முடியும்.
விஷயம் இதுதான். முஸ்லிம் இயக்கங்களை தீவிரவாத முத்திரை குத்தி எழுத வேண்டும். இந்துத்துவ ஆதரவை ஜனரஞ்சகப் படுத்த வேண்டும். இந்தத் தீர்மானத்தை சிரமேற்கொண்டு செயல்படுத்தி வருகிறார். அதனால்தான் வெறுப்பை உமிழும் அரவிந்தன் நீலகண்டனையும், ஜடாயுவையும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விதந்தோதுகிறார். முன்னிறுத்துகிறார். இவர்கள் நடத்தும் ‘தமிழ் ஹிந்து’ என்ற ஃபாசிச இணைய தளத்தை பிரபலப்படுத்துகிறார்.
நமக்கு ஆதங்கம் என்னவெனில் இவ்வளவு கீழ்த்தரமாக இரட்டை வேடம் போட்டுக் கொண்டு எப்படி ‘அறம்’ என்றெல்லாம் இலக்கியம் எழுத மனம் வருகிறது என்பதுதான். ஆனால் அதுதான் ஜெயமோகனின் தந்திரம். நரித்தனம். இப்போது மார்க்ஸ் அவர்களின் குறிப்பை அப்படித்தான் திரிக்கிறார். அதாவது இவரின் இலக்கியப் படைப்புகளில் எந்தச் சமூகத்தின் மீதும் காழ்ப்பை காட்டியதில்லையாம். இப்படித்தான் ஊரில் பல பேரை ஏமாற்றி வைத்திருக்கிறார்.
கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நமது ‘தூது’ இணையதளத்தில் ‘இலக்கியம் நமக்கு தூரமா?’ என்ற தலைப்பில் கட்டுரை இடம் பெற்றது. அதில் வரும் ஒரு பகுதி:
“இலக்கியத் தளத்தில் நமது பற்றாக்குறையை நாம் அடிக்கடி உணர்வது இந்துத்துவவாதிகள் அதே தளத்தில் நின்று நம் மீது அவதூறு கூறும் போதுதான். ஜெயமோகனை எடுத்துக் கொள்ளுங்கள். மிகச் சிறந்த எழுத்தாளர். இலக்கியவாதி. மாபெரும் படைப்புகளை படைத்திருக்கிறார். தனது இலக்கிய படைப்புகளில் இந்துத்துவ மாச்சர்யங்களை காட்ட மாட்டார். கம்யூனிஸ்டுகளை உயர்த்துவார். நல்ல முஸ்லிம் கதாபாத்திரங்களை படைப்பார். தலித்கள் பட்ட கொடுமையை நாவலாக வடிப்பார்.
இந்த ஒரு பக்கத்தை பார்த்து பலர் இவரது வலையில் விழுந்து விடுகின்றனர். பொதுவானவர் என்று நம்பி விடுகின்றனர். நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நல்ல உதாரணம். இவர் தனது இந்துத்துவ முகத்தை தனது கட்டுரைகளில் காட்டுவார். இந்துத்துவாவிற்கு எதிரான அனைத்தின் மேலும் விஷக் கருத்துகளை கொட்டுவார். தனது பிரபலத்தை இதற்கு பயன்படுத்திக் கொள்வார். அவரின் அடிப்பொடிகள் அதை அனைத்து மட்டங்களுக்கும் எடுத்து செல்வார்கள்.
முஸ்லிம்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்னையிலும் அவதூறை அள்ளித் தெளித்து கட்டுரைகள் எழுதுவார். விஸ்வரூபம் படமானாலும், ஃபலஸ்தீன பிரச்னையானாலும், கஷ்மீர் விவகாரமென்றாலும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கருத்துகளை புகுத்தி முஸ்லிம்களை வில்லன்களாக சித்தரிப்பார். அதை மிகுந்த தொழில்நுட்பத்தோடு செய்வார். இப்போது நடந்த சார்லி ஹெப்டோ சம்பவத்திலும் அதை செய்தார். ஏன்? பெருமாள் முருகனின் மாதொருபாகன் விஷயத்திலும் இவர் முஸ்லிம்களை விட்டு வைக்கவில்லை.”
இந்தப் பித்தலாட்டத்தின் தொடர்ச்சியாகத்தான் இன்னொன்றை தொடர்ந்து சொல்லி வருகிறார். மார்க்ஸ் அவர்கள் பற்றிய இந்த விமர்சனத்திலும் அதை சொல்கிறார். அது, பல ‘நல்ல’ முஸ்லிம்களிடம் அவருக்குள்ள நட்பை பற்றி. முஸ்லிம்கள் பற்றி இப்படி எழுதுகிறீர்களே என்று கேட்டால், ‘எனக்கு நிறைய முஸ்லிம் நண்பர்கள் உண்டு. ஸதக்கத்துல்லா ஹசனி என் நண்பர்’ என்பார்.
யார் இந்த ஸதக்கத்துல்லா ஹசனி? ஆரம்ப கால விடியல் வாசகர்கள் அறிந்திருப்பார்கள். தினமணியில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தவர். அது ஆர்ப்பாட்டமாக தினமணியில் வெளிவரும். ஆமாம். ‘அப்படி’ப்பட்ட கட்டுரைகள்தான். அப்போது கீழக்கரையில் இயங்கி வந்த NRC என்றழைக்கப்படும் ‘ஊடக ஆய்வுக் குழு’ (News Research Council) இந்தக் கட்டுரைகளுக்கு நல்லதொரு பதிலை கொடுத்து வந்தது. அது அப்போதைய விடியலிலும் வெளிவந்தது.
இந்துத்துவவாதிகள் விரும்பும் இந்தக் கட்டுரைகளால் கவரப்பட்ட ஜெயமோகன் ஸதக்கத்துல்லா ஹசனிக்கு பாராட்டுக் கடிதம் எழுதுகிறார். அன்று முதல் நட்பு தொடர்கிறது. இவரின் முஸ்லிம் நண்பர்களின் நட்பின் பின்னணி இதுதான். ஜவாஹிருல்லாஹ்வும், தெஹ்லான் பாகவியும் தங்கள் கட்சிகளிலிருந்து விலகி பா.ஜ.க.வின் சிறுபான்மை பிரிவில் சேர்ந்தால் அவர்களும் ஜெயமோகனின் முஸ்லிம் நண்பர்கள் பட்டியலில் இடம் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.
மீண்டும் மார்க்ஸ் அவர்களின் குறிப்பிற்கு வருவோம்.
“ஜெயகாந்தனையோ, பாரதியையோ படிப்பவர்கள் இந்த நாட்டின் எந்த மக்கள் பிரிவினரையும் வெறுப்பரோ..?”
இந்த வரிசையில் இன்றும் இலக்கியவாதிகள் இருக்கிறார்கள். எழுதுகிறார்கள். எஸ். ராமகிருஷ்ணனை எடுத்துக் கொள்ளுங்கள். தீவிரமாக எழுதுகிறார். அவரும் இந்தியப் பண்பாட்டைத்தான் எழுதுகிறார். மதங்களை எழுதுகிறார். கலாச்சாரத்தை எழுதுகிறார். புராணங்களை போற்றுகிறார். ஆனால் வெறுப்பை விதைக்கவில்லை. அன்பை விதைக்கிறார். சமூக நல்லிணக்கத்தின் முகமாக நிற்கிறார். முஸ்லிம்களின் மேடைகளில் நின்று அவர்களின் வலிகளை பேசுகிறார். உண்மையான பரிவு காட்டுகிறார். நம் நெஞ்சின் அடித்தளத்திலிருந்து அவருக்கு நாம் நன்றி சொல்கிறோம். சமூக ஒற்றுமையை விரும்பும் இத்தகைய இலக்கிய மனங்கள் வாழ்க. வளர்க.
ஆனால் ஜெயமோகன் சாதாரணமாக பயணம் போனாலும் முஸ்லிம் மன்னர்களால் இடிக்கப்பட்ட கோவில்களை பற்றித்தான் பிரஸ்தாபிப்பார். கஷ்மீர் போனால் ‘கூலிக்கு கல்லெறிகிறார்கள், பாவம் நமது இராணுவம்’ என்பார். அசாம் போனால் ‘பாப்புலர் ஃப்ரண்ட் பயங்கரவாதத்தை வளர்க்கிறது’ என்று சொல்வார். அட ஆப்பிரிக்காவில் உள்ள நமீபியா போனாலும் கையை வைத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார். ‘நல்ல காலம்… இது கிறிஸ்தவ நாடு. முஸ்லிம்கள் இருந்தால் தீவிரவாதம் தலை தூக்கி இருக்கும்’ என்று எழுதினால்தான் அவருக்குத் தூக்கம் வரும்.
ஆமாம்… இன்னும் ஏன் இவர் எஸ். ராமகிருஷ்ணண் அவர்களை தீவிரவாத ஏஜென்ட் என்று முத்திரை குத்தவில்லை? விரைவில் எதிர்பார்க்கிறோம் ஜெயமோகன்.
- See more at: http://www.thoothuonline.com/archives/72468#sthash.vx40n7fu.dpuf
பேரா. அ. மார்க்ஸ் அவர்களை பிராண்டும் ஜெயமோகன்! – முஹம்மது ஃபைஸ்
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:03:00
Rating:
No comments: