தலைவிரித்தாடும் காவல்துறை பயங்கரவாதம்: தெலுங்கானா கொடூரம்!

ஹைதராபாத்: விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்லப்பட்ட விசாரணை கைதிகள் 5 பேர் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் நேற்று(07/04/2015) ஒரே நாளில் 25 பேர் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். செம்மரக் கடத்தலில் ஈடுபட்டிருந்ததாகக் கூறி 20 தொழிலாளிகள் ஆந்திர மாநிலம் சித்தூரில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் 12 பேர் தமிழர்கள் என்ற நிலையில், தமிழகத்திலும் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் கவனம் இக்கொடூர சம்பத்திற்கான எதிர்ப்பில் சென்றுகொண்டிருந்த தருணத்தில் தெலுங்கானா மாநிலத்தில் விசாரணை கைதிகள் 5 பேர் காவல்துறையினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட கொடூரம் அதிகக் கவனத்துக்கு வராமல் ஊடகங்களில் மறைந்தன.

தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினரால் கூறப்படும் முஹம்மது விகருத்தீன், முஹம்மது ஹனீஃப், அம்ஜத் அலி, ரியாஸ் கான் மற்றும் இசார் கான் ஆகிய ஐவரும் காவல்துறை அதிகாரிகளைக் கொலை செய்வதற்காக தெஹ்ரீக்கே கல்பே இஸ்லாமி என்ற புரட்சிப்படையினை உருவாக்கி செயல்பட்டு வந்தனர் எனவும் ஹைதராபாத்தில் காவல்துறையினருக்கு எதிராக பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தனர் எனவும் குற்றம்சுமத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் மீதான வழக்கு ஹைதராபாத் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்றைய விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்து வரப்படும் வழியில் காவல்துறையினரின் துப்பாகியைப் பறித்து தப்பிக்க முயன்றதால் தற்காப்பிற்காக சுட்டுக்கொல்லப்பட்டனர் என காவல்துறை அறிவித்துள்ளது.


ஐவருக்கும் கைவிலங்கிடப்பட்ட நிலையில் பாதுகாப்புக்காக ஆயுதம் தாங்கிய 17 காவலர்கள் உடனிருந்தபோது எப்படி காவல்துறையினரின் ஆயுதத்தைப் பறித்திருந்தால்கூட எப்படி தப்பித்திருக்க முடியும் என்ற கேள்வியுடன் நிச்சயமாக இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைதான் என மனித உரிமை கழகத் தலைவர் ஜீவன் குமார் காவல்துறையினர் மீது கடுமையாக குற்றம்சுமத்தியுள்ளார்.

கொல்லப்பட்ட ஐவர் மீதான விசாரணை முடிவுறும் தருவாயில் இருந்ததாகவும் அவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித தெளிவான ஆதாரமும் காவல்துறையினரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாத நிலையில் நிச்சயமாக அவர்கள் விடுதலை செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படுகொலை நடந்துள்ளது காவல்துறையினர் மீது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என அவர்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி வந்த வழக்கறிஞர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.
தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் காவல்துறையினர் தங்களை மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்த இந்த ஐவரும் நீதிமன்றத்தில் முன்னர் மனு செய்துள்ளனர். அதே போன்று அவர்களின் குடும்பத்தினரும் நீதிமன்றத்தில் அவர்களின் உயிர்பாதுகாப்பு தொடர்பாக முந்தைய வழக்கு விசாரணைகளின்போது வழக்கறிஞர்கள் மூலமாக முறையிட்டுள்ளனர். ஆனால் அது தொடர்பாக நீதிமன்றம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர்.

தம் மகன் விடுதலையாவான் என முழு நம்பிக்கையுடன் வழக்கு தீர்ப்புக்காக காத்திருந்த வேளையில் நடந்துள்ள இக்கொடூரக் கொலைமீது நேர்மையான விசாரணை நடத்த வேண்டுமென கொல்லப்பட்டவர்களில் ஒருவரான முஹம்மது விகருத்தீனின் தந்தை முஹம்மது அஹமது கோரிக்கை விடுத்துள்ளார்.

இவர்கள் கொல்லப்பட்டதாக காவல்துறை அறிவித்த செய்தியறிந்து உடனடியாக ஒன்றுகூடிய அவர்களின் குடும்பத்தினர் தம் வழக்கறிஞர்கள் உதவியுடன் பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்து, "நடந்துள்ள கொலை தொடர்பாக சிபிஐ விசாரணைக்குத் தெலுங்கானா அரசு உத்தரவிடும்வரை கொல்லப்பட்டவர்களின் உடலை அடக்குவதில்லை. தேவையெனில் உடலுடன் தர்ணா போராட்டத்திலும் ஈடுபடுவோம். கொலை செய்த காவலர்கள்மீது நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும்வரை, நீதி கிடைக்கும்வரை ஓயமாட்டோம்" என அறிவித்துள்ளனர்.

இதற்கிடையில், கொல்லப்பட்ட ஐவரின் உடல்களைப் பெற்றுச் செல்ல சிறையிலிருந்து அவர்களின் குடும்பத்தினருக்கு நெருக்குதல் கொடுக்கப்படுவதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

படுகொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்கள் சமூக இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைகள் இருக்கையுடன் சேர்த்து சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ள நிலையில் இறந்துகிடக்கும் அவர்களின் புகைப்படம், காவல்துறை கூறுவது அப்பட்டமான பொய்த்தான் என்பதைத் தெளிவிக்கும் முகமாக உள்ளது.

முஸ்லிம்களின் பாதுகாப்பு, உரிமை போன்றவை தொடர்பாக முஸ்லிம் பிரதிநிதிகள் மற்றும் பிரதமர் மோடிக்கிடையே சந்திப்பு நடந்து, முஸ்லிம்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என மோடியால் உத்தரவாதம் தெரிவிக்கப்பட்ட நிலையில் தெலுங்கானாவில் இக்கொடூரச் சம்பவம் நடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
http://inneram.com/news/india/2028-telungana-murder.html
தலைவிரித்தாடும் காவல்துறை பயங்கரவாதம்: தெலுங்கானா கொடூரம்! தலைவிரித்தாடும் காவல்துறை பயங்கரவாதம்: தெலுங்கானா கொடூரம்! Reviewed by நமதூர் செய்திகள் on 03:00:00 Rating: 5

No comments:

Powered by Blogger.