இடஒதுக்கீடு கோட்டா பற்றியது மட்டுமல்ல!
சமீபத்திய தீர்ப்பில் இடஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் கவலையளிக்கின்றன.
ஜாட் சமூகத்தவரை, 9 மாநிலங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் வகுப்பில் சேர்த்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையை ரத்து செய்து, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் மிக எளிதான ஒரு செயலைப் போல அதைச் சாதித்து முடித்துள்ளனர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம் (என்.சி.பி.சி.) எதிர்ப்புத் தெரிவித்த பிறகும், 2014 மக்களவைப் பொதுத் தேர்தல்பற்றிய அறிவிப்புக்கு ஒரு நாள் முன்னதாக மத்திய அரசு இந்த அறிக்கையை வெளியிட்டதால், இது அரசியல் உள்நோக்கத்துடன் வாக்குகளைக் கவருவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ற முடிவுக்கு நீதிபதிகள் வந்துள்ளனர். ஆணையத்தின் எதிர்ப்பை நிராகரித்ததற்கு சட்டபூர்வமான காரணம் எதையும் மத்திய அரசு தன்னிடத்தில் வைத்திருக்கவில்லை. உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட இந்த விவகாரத்தில் அரசின் முடிவுகுறித்து அளித்த தீர்ப்பு தொடர்பாக அதிருப்தி இருக்க முடியாது என்றாலும், சாதி தொடர்பாகவும் இடஒதுக்கீடு தொடர்பாகவும் அப்போது தெரிவிக்கப்பட்ட கருத்துகள் கவலையளிக்கின்றன.
இடஒதுக்கீட்டுக்கு எதிரான கண்ணோட்டம்
சாதி குறித்தும் இடஒதுக்கீடு குறித்தும் நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள், மேல்சாதியினரின் பொதுப் புத்தியில் உறைந்திருக்கும் ‘அரை உண்மை’ கருத்துகளாகவே இருக்கின்றன. தீர்ப்பின் இறுதிப் பகுதிக்கு வரும்போது நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், ரோஹின்டன் எஃப். நாரிமன் இருவருமே, நாங்கள் ஏன் இந்த முடிவுக்கு வந்தோம் என்பதைத் தாங்கள் உறுதியாக நம்பும் இரண்டு விஷயங்களின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர். ‘‘ஒரு சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட நிலையை எளிதாகத் தீர்மானிக்க சாதி வெளிப்படையான, தனித்துவமிக்கக் ஒரு காரணியாக இருக்கக்கூடும்.
ஆனால், அப்படி பிற்படுத்தப்பட்ட தன்மையை நிர்ணயிக்க சாதியை மட்டுமே அடிப்படையாகக் கொள்ளாமல், தொடர்ந்து ஆய்வு செய்து, இடஒதுக்கீடு மிகவும் தேவைப்படும் சமூகங்களை அடையாளம் காண வேண்டும். இதற்கு சாதிக்கும் அப்பாற்பட்ட அம்சங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும்’’ என்று தீர்ப்பின் பத்தி 53-ல் கூறியுள்ளனர்.
இதையடுத்து, 54-வது பத்தியில், ‘‘பிற்படுத்தப்பட்டவர்கள் என்று அறிவிப்பது உணர்வின் அடிப்படையில் இருக்க முடியாது” என்று கூறியுள்ள நீதிபதிகள், அதிர்ச்சி அடையத்தக்க விதத்தில், “அது சமூக, பொருளாதார, கல்வி அடிப்படையிலும் இருக்க முடியாது’’ என்று கூறியுள்ளனர். மூன்றாவது பாலினர் போன்ற புதிய குழுக்களையும் இடஒதுக்கீட்டுச் சலுகைக்குப் பரிசீலிக்க வேண்டும் என்று 53-வது பத்தியில் கூறியிருப்பதையும் இதையும் இணைத்துப் பார்க்கும்போது, இடஒதுக்கீடு என்ற சமூக நீதிக் கோட்பாட்டுக்கு எதிரான வெறுப்புணர்வே தூக்கலாகத் தெரிகிறது.
கண்ணோட்டமும் சமூக ஒப்பந்தமும்
இந்த நாடு, ‘தன்னுடைய வரலாற்றுத் தவறுகளுக்கு’ ஈடுகட்டும் விதத்தில் சில குறிப்பிட்ட சாதிகளுக்கு இடஒதுக்கீட்டை அளித்து அவர்கள் பின்தங்கிய நிலைமையிலிருந்து விடுபட உதவுகிறது. இடஒதுக்கீட்டை இந்த வகையில் நாம் புரிந்துகொண்டால்தான் சில ஆட்சேபங்களுக்கு நம்மால் சரியான பதில்களைக் கூற முடியும். எவ்வளவு காலத்துக்கு இந்த இடஒதுக்கீடு நீடிக்கும்? பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொள்ளாமல் சாதியை அடிப்படையாகக் கொள்வது ஏன்? இவையெல்லாம் முக்கியமான கேள்விகள்.
இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கான நடவடிக்கை என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ளாததால்தான், மேல்சாதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஷூக்களுக்குப் பாலீஷ் போடுவது, ஸ்டெதாஸ்கோப் அல்லது லேப் கோட் அணிந்து தெருக்களைக் கூட்டுவது போன்ற போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
சமூக அடுக்கின் மேல்நிலையில் இருப்பவர்களால் இடஒதுக்கீட்டின் தோற்றுவாய் என்ன, அவசியம் என்ன, அது ஏற்படுத்திவரும் மாற்றங்கள் என்ன என்பதைப் புரிந்துகொள்ளவே முடியாது. நம்முடைய நாட்டின் அனைத்துத் தரப்பினரின் மேம்பாட்டுக்கான சமூக ஒப்பந்தம்தான் இடஒதுக்கீடு. இடஒதுக்கீடு என்பது நாடு சுதந்திரம் அடைவதற்கும் முன்னால் 1935-லேயே இந்திய அரசின் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டது. சாதிய ஒடுக்குமுறைகளுக்கு ஆளானவர்களையும் புறக்கணிக்கப்பட்டவர்களையும் சாதிவாரியாகத் தொகுத்து அரசு வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றவர்கள்தான் பட்டியல் இனத்தவர் என்றும் பழங்குடிகள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
இடஒதுக்கீட்டுக் கொள்கையே காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையில் ஏற்பட்ட புனே ஒப்பந்தத்தின் வெளிப்பாடுதான். பட்டியல் இனத்தவர்களுக்கு நாடாளுமன்றத்திலும் சட்டப் பேரவைகளிலும் போதிய பிரதிநிதித்துவம் கிடைக்க தனித் தொகுதிகள் (இரட்டை வாக்குரிமை) வேண்டும் என்று கோரப்பட்டது. இந்தக் கோரிக்கையைக் கைவிட்டால் பட்டியல் இனத்தவர்கள் மட்டும் போட்டியிடும் வகையில் தனித் தொகுதிகளை ஒதுக்குவோம். எங்களுடைய சக்தி முழுவதையும் திரட்டி தீண்டாமையையும் சாதிப் பாகுபாட்டையும் ஒழிப்போம் என்று காந்தியும் காங்கிரஸும் உறுதியளித்தனர். இட ஒதுக்கீடு என்பது அடிப்படையில் அரசியல் உடன்பாடாகும். இந்தியச் சமூகமானது பெரும்பாலான சாதிகளை அல்லது சமூகங்களை ஒதுக்கிவைத்தே வந்திருக்கிறது என்ற உண்மையையும் ஒப்புக்கொள்வதாகும்.
இந்திய தேசம் என்ற பெயரில் சுதந்திரப் போராட்டம் நடந்ததாலும் புதிய நாட்டில் எல்லோரும் சமமாக நடத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டதாலும் பட்டியல் இனத்தவர் தங்களுடைய முக்கிய கோரிக்கைகளைத் தளர்த்திக்கொண்டனர். தங்களுக்கென்று தனி நாடு கேட்காமல், புது நாட்டில் தாங்களும் சேர்ந்து பணியாற்றச் சம்மதித்தனர். “காந்திஜி எனக்கென்று சொந்த நாடு எதுவுமில்லை” என்று மனம் வெதும்பிக் கூறிய அம்பேத்கருக்கு மறுமொழியாக, மேல்சாதிக்காரர்களால் வழிநடத்தப்பட்ட காங்கிரஸ், ஒதுக்கப்பட்டவர்களுக்கு வழங்க ஒப்புக்கொண்ட உரிமைதான் இடஒதுக்கீடு என்ற ஏற்பாடு.
நல வாழ்வுக்கும் மேலே
இடஒதுக்கீட்டை நல வாழ்வு நடவடிக்கையாகச் சித்தரிக்க முடியாது; ஒப்பிட முடியாதபடிக்கு அதையும் தாண்டியது - அர்த்தமுள்ள முழுக் குடியுரிமையாகும் அது. இந்தக் கொள்கை எந்த அளவுக்கு முழுமையாகச் செயல்படுத்தப்படுகிறதோ அதைப் பொறுத்துதான் இதன் காலமும். இந்தியச் சமூகத்தில் சாதி அடிப்படையில் நிலவும் பாகுபாடு, ஒடுக்குமுறை, ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும் என்றைக்கு முழுமையாக, அர்த்தமுள்ள விதத்தில் மறைந்துபோகிறதோ அந்த நாளிலிருந்து இடஒதுக்கீடு என்ற சமூக நீதி ஏற்பாட்டை விலக்கிக்கொண்டுவிடலாம்.
ஏனென்றால், அப்போது இந்தியாவில் எல்லா சாதியும் சம உரிமைகள் பெற்றவையாகிவிடும். கடந்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட வரலாற்றுத் தவறுகளுக்காக இடஒதுக்கீடு இல்லை, சமகாலத்தில் நிலவும் சாதிய ஒடுக்குமுறைகளுக்காகவும் ஏற்றத்தாழ்வுகளுக்காகவும்தான். இந்த இடத்தில் சாதியை அடிப்படையாகக் கொள்ளாமல் பொருளாதார அளவுகோலை வைப்பது, சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் நிலவும் சாதியப் பாகுபாடுகளைக் கருத்தில் கொள்ளாததால்தான். இடஒதுக்கீடு தொடர்பான இந்த விளக்கத்தை மேல்சாதிக்காரர்கள் தங்களுடைய எதிர்ப்புணர்வால் ஏற்க மறுக்கின்றனர். அத்துடன் வேறு இரண்டு அம்சங்களும் இடஒதுக்கீட்டு ஏற்பாட்டுக்கு எதிராக இருக்கின்றன.
முதலாவதாக, ‘அனைவரையும் சம உரிமையுள்ள குடிமக்களாக்குவோம்’ என்ற வாக்குறுதியை முழுமையாக அமல்படுத்த வேண்டும். அதற்கு, ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு விதமான ஏற்பாடுகளைச் செய்து அவர்களை முன்னேற்ற வேண்டும். இது, ஏற்கெனவே மனமாச்சரியங்களும் ஆட்சேபங்களும் நிரம்பிய சமூகத்தில் மேலும் அதிருப்தியையே உண்டாக்கும். அரசின் நிதியையும் அரிய வாய்ப்புகளையும் சாதி அடிப்படையில் சிலருக்குச் சலுகையாக அள்ளித் தருகின்றனர் என்று மற்றவர்கள் குற்றம்சாட்டவே வழிசெய்யும். தேர்தல் ஆதாயத்துக்காக இப்படிச் சலுகைகளைக் காட்டுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து எழும்.
இரண்டாவதாக, சாதிப் பாகுபாடுகளின் சமூக, பொருளாதாரப் பரிமாணங்களை இணைப்பது கடினமான வேலையாகும். தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடையில் நிலவும் தோற்ற, சட்டரீதியிலான ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் அடையாளம் காண வேண்டும்.
மறு சிந்தனைக்கு
இடஒதுக்கீட்டுக் கொள்கை என்பது இப்போது நிறைய குறைபாடுகளுடன் இருக்கிறது, அது மாற்றியமைக்கத் தீவிர சிந்தனை தேவைப்படுகிறது. சாதி அடிப்படையில் இப்போதும் பாரபட்சமாக நடத்துகின்றனர், ஒடுக்குகின்றனர், தனித்து வைக்கின்றனர் என்ற உண்மையை மூடி மறைக் காமல் புதிய மாற்றங்கள்குறித்துச் சிந்திக்க வேண்டும்.
‘இடஒதுக்கீட்டால் சாதி வேற்றுமைகள் போகவில்லையே, எதற்கு இன்னும் சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு?’ என்ற கேள்விக்குப் பதில் அளிக்கும்போது, ‘இவ்வளவு கொடுத்தும் போதவில்லையே? எனவே, மேலும் தேவைப்படுகிறது’என்பதையே பதிலாக அளிக்க வேண்டும். ராணுவக் கொள்முதலில் லஞ்சமும் ஊழலும் இருக்கிறது என்பதற்காக ராணுவத்தையே கலைத்துவிட முடியாது இல்லையா?
- சதீஷ் தேஷ்பாண்டே, டெல்லி பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர்
© ‘தி இந்து’, தமிழில் சுருக்கமாக: சாரி
இடஒதுக்கீடு கோட்டா பற்றியது மட்டுமல்ல!
Reviewed by நமதூர் செய்திகள்
on
22:50:00
Rating:
No comments: