கலைஞர். கருணாநிதி சொல்வதுபோல பலமுனை போட்டி திமுகவிற்கு சாதகமா? - சனா பாரூக் பதில்கள்
இந்த சட்டமன்ற தேர்தலில் பலமுனைபோட்டி ஏற்பட்டிருக்கிறது. அது திமுகவிற்கு சாதகம்தான் என்று தனது அறிக்கையில் சுட்டுகிறார். பலமுனைப் போட்டியால் அதிமுகவே வெற்றிபெறும் என்று பலரும் கூறும் நிலையில். குறிப்பாக மக்கள் நலக் கூட்டணி திமுகவின் வெற்றி வாக்கை பிரித்து அதிமுகவின் வெற்றிக்கு உதவுவதால் அது அதிமுகவின் பி டீம் என்று திமுகவினரே விமர்சிக்கும் நிலையில் கலைஞர் கருணாநிதியின் இந்த அறிக்கை முக்கியத்தும் வாய்ந்தது.
ஒரு தேர்தலில் பல முனைப்போட்டி ஏற்படும் பட்சத்தில் ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறி மீண்டும் ஆளுங்கட்சியே வெற்றியை சுவைத்த வரலாறுகள் ஏராளம் உண்டு. அதேபோல பலமுனை போட்டியால் எதிர்கட்சிகளும் பயன் அடைந்திருக்கின்றன. அதற்கு உதாரணங்களாகதான் 1989, 1996 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் பலமுனைபோட்டி இருந்தும் எதிர்க்கட்சியான திமுக வெற்றிபெற்றதை உதாரணமாக காட்டுகிறார்.
ஆனால் அப்போது இருந்த நிலைமைக்கும், தற்போதைய நிலைமைக்கும் வேறுபாடுகள் பல உள்ளன. 1989 சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரையில் அதிமுக இரண்டாக பிளவு பட்டன. ஜெயலலிதா தலைமையிலும், ஜானகி தலைமையிலும் என இரண்டாக உடைந்தது. அதனால் அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு பிறகு தேர்தல் நடைபெற்றன. அதிமுகவின் வெற்றி சின்னமான இரட்டை இலை முடக்கப்பட்டது. அதுமாதிரியான சூழ்நிலையில் எதிர்க்கட்சியாக இருந்த திமுக வெற்றிபெற்றது.
1996 சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரையில் அப்போது தமிழகத்தில் பேயாட்டம் ஆடிய அதிமுக ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலை பரவலாக இருந்தது. திமுக, தமாகா, இந்திய கம்யூனிஸ்ட் என வலுவான கூட்டணியை அமைந்தது. சோ, ரஜினி, பத்திரிக்கைகள் என திமுகவை திரைமறைவில் பலரும் ஆதரித்தனர். திமுகவில் இருந்த பல தலைவர்கள் மதிமுகவிற்கு சென்றதால் பல புதிய முகங்களை வேட்பாளர்களாக திமுக நிறுத்தியது. இவைகளை விட அந்த தேர்தல்களில் திமுக மீது பெரிய கசப்புணர்வு எதுவும் இல்லை. இதனால்தான் பலமுனைப்போட்டி இருந்தும் எதிர்க்கட்சியாக இருந்த திமுக வெற்றிபெற்றது.
அப்போது இருந்த சூழ்நிலைகளும், தற்போதைய சூழ்நிலைகளும் வெவ்வேறாக இருக்கின்றன. தற்போது ஆளும்கட்சியான அதிமுகவிற்கு நிகராக திமுகவும் அதிகம் விமர்ச்சிக்கப்படுகிறது. அதிமுகவை விட திமுகவைத்தான் இத்தேர்தலில் வீழ்த்தவேண்டும் என்று மிகப்பெரிய அளவில் திமுக எதிர்ப்பு பிரச்சாரம் பல தரப்பிலும் நிகழ்த்தப்படுகிறது. இவைகள் எல்லாம் திமுக மீண்டும் மக்கள் மனதில் புகுந்துவிடக்கூடாது என்பதற்காகவே நன்கு திட்டமிட்டு செய்யப்படுகிறது.
இவ்வளவையும் மீறி திமுக வெற்றிபெறுவது மிக கடினம். திமுக வெற்றிபெற வேண்டும் என்று கலைஞர் கருணாநிதி கருதினால் தனது வழக்கமான தேர்தல் உத்திகளை மாற்றவேண்டும். தேர்தலில் புதிய இளைஞர்களை களம் இறக்க வேண்டும். குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களை தள்ளி வைக்க வேண்டும். கட்சியில் ஒதுங்கி இருக்கும் திறமை மிகுந்த முன்னணியினரை பிரச்சாரத்திற்கு பயன்படுத்த வேண்டும். முன்பு திமுகவால் நடைபெற்ற தவறுகளுக்கு பிராசித்தம் செய்யும் வகையில் நடந்து கொள்ளவேண்டும். புதிய வாக்காளர்களின் நம்பிக்கையை பெற வேண்டும். திமுகவிற்கு எதிராக உள்ளடி வேலை செய்யும் நபர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக ஆளுங்கட்சியை வீட்டுக்கு அனுப்ப திமுகவால்தான் முடியும் என்ற பிம்பத்தை, நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இவைகள்தான் திமுகவின் வெற்றிக்கு வழிவகுக்கும்.
பலமுனை போட்டி திமுக சாதகம், பாதகம் என்று வெறும் அறிக்கை விடுவதைவிட, திமுக தன்னை முழுமையான சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். மேற்கண்ட முயற்சிகள் ஆட்சிக்கு வரமட்டுமல்ல கட்சியை பலப்படுத்தவும் உதவும். இவைகளை செய்யாமல் திமுக கரைசேர்வது கடினம்தான். அப்படி ஒரு முயற்சியை திமுக எடுத்தால் திமுகவை வீழ்த்துவது யாராலயும் முடியாதது...
- சனா பாரூக் பதில்கள்
கலைஞர். கருணாநிதி சொல்வதுபோல பலமுனை போட்டி திமுகவிற்கு சாதகமா? - சனா பாரூக் பதில்கள்
Reviewed by நமதூர் செய்திகள்
on
21:20:00
Rating:
No comments: