கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம்: உயர் நீதிமன்றம் விசாரணை!

கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம்: உயர் நீதிமன்றம் விசாரணை!

கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றிய விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு விசாரணை மேற்கொண்டது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காகச் சென்ற 8 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரத்தக் குறைபாடு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து ரத்தம் பெறப்பட்டு, அவருக்குச் செலுத்தப்பட்டது. சில தினங்களில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றார். அவரது ரத்தத்தைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் விசாரணை மேற்கொண்டார்.
சிவகாசியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், அங்குள்ள அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் ரத்த தானம் வழங்கினார். ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டதை அறியாமல், அவர் ரத்த தானம் செய்ததாகக் கூறப்படுகிறது. அவர் வழங்கிய ரத்தம் தான், முறையாகப் பரிசோதிக்கப்படாமல் அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்குச் செலுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த விவகாரத்தில் மெத்தனமாகச் செயல்பட்டதாகக் கூறி, ரத்த வங்கி ஊழியர்கள் மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு அரசு மருத்துவமனையிலேயே ஓட்டுநர் பணி வழங்கப் பரிந்துரை செய்துள்ளதாக, விருதுநகர் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மனோகரன் கூறியிருந்தார்.
சம்பந்தப்பட்ட ரத்த வங்கியில் உள்ள ரத்தத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டு, தீவிர பரிசோதனைக்குப் பின்னரே அவற்றைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்ஐவி ரத்தம் ஏற்றிய விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் என்பவர் இன்று (டிசம்பர் 27) சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அமர்வு முன்பு முறையீடு செய்தார். அப்போது, இந்த வழக்கை நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்தனர் நீதிபதிகள். இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக வரும் ஜனவரி 3ஆம் தேதிக்குள் தமிழக அரசு விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.
முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பான மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்திருந்தது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. போதிய நடவடிக்கைகளை அரசு எடுத்துவருவதாக, இதற்குக் காரணம் கூறியது.
நேற்று (டிசம்பர் 26) மாலை 4 மணி அளவில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். இவருக்குச் சிகிச்சை அளிப்பதற்காக அம்மருத்துவமனையின் மகப்பேறு பிரிவுத் துறை தலைவர் சாந்தி, மருத்துவர்கள் நடராஜன், ரஞ்சித் ஆகியோர் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கருவில் உள்ள குழந்தைக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறது இக்குழு.
https://minnambalam.com/k/2018/12/27/59
கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம்: உயர் நீதிமன்றம் விசாரணை! கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம்: உயர் நீதிமன்றம் விசாரணை! Reviewed by நமதூர் செய்திகள் on 23:46:00 Rating: 5

No comments:

Powered by Blogger.