சாய்ந்த தென்னை மரங்களுக்கு மீண்டும் வாழ்வு கொடுக்க முயற்சி!
தஞ்சை (21 டிச 2018): கஜா புயலால் சாய்ந்த தென்னை மரங்களை கிரேன் மூலம் நிமிர்த்தி மீண்டும் வாழ்வு கொடுக்க டெல்டா விவசாயிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
கோரதாண்டவமாடிச் சென்ற கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்த டெல்டா மாவட்ட விவசாயிகளின் துயரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. பல ஆண்டு கால உழைப்பை பறிகொடுத்து 30 நாட்கள் சோகத்தில் மூழ்கிக் கிடந்த அவர்கள் தற்போது அதிலிருந்து மெல்ல மீண்டு வருகின்றனர்.
வேரோடு சாய்ந்த மரத்தை மீண்டும் அதே இடத்தில் நட்டால் பலன் கிடைக்கும் என்ற வேளாண் நிபுணர்களின் யோசனை விவசாயிகளுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் சிலட்டூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் வேரோடு சாய்ந்த தென்னை மரங்களை, மீண்டும் நட்டு உயிர் கொடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.
இதற்காக கிரேன், பொக்லைன் இயந்திரங்களை வாடகைக்கு எடுத்து ஒரு தென்னை மரத்திற்கு 1000 ரூபாய் வரை செலவு செய்து மறு நடவு செய்து வருகின்றனர்.
தென்னங்கன்று நட்டால் அது பலன் தர 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அதுவரை வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது என்ற கேள்வி அச்சம் தருவதால் வேறு வழியின்றி சாய்ந்த தென்னை மரங்களுக்கு மீண்டும் நடுவதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.
விவசாயிகளின் இந்த முயற்சியில் தென்னை மரங்கள் பிழைத்து கொண்டு பலன் தருமா என்பது 6 மாதங்களுக்கு பின்பே தெரியும்.
சாய்ந்த தென்னை மரங்களுக்கு மீண்டும் வாழ்வு கொடுக்க முயற்சி!
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:13:00
Rating:
No comments: