எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கு உதவித்தொகை!
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய 985 கோடி ரூபாயை இரண்டு மாதங்களில் வழங்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காததால் உயர்கல்வி கனவு நிறைவேறாமல் பாதிக்கப்படும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் தனியார் சுயநிதி கல்லூரிகளில் சேர்ந்து படிக்க ஏதுவாக மத்திய அரசு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு 2012ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.
இதில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு 1765 கோடி ரூபாயும், பழங்குடியின மாணவர்களுக்கு 31 கோடி ரூபாயும் இதுவரை மத்திய அரசு வழங்காததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் அசோக்குமார் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு விசாரித்தது. அப்போது மத்திய சமூக நீதித்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு அவ்வப்போது நிதி விடுவிக்கப்பட்டு வருவதாகவும், 2016-17 வரை 822 கோடி ரூபாய் மட்டுமே பாக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்திற்காக 4 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கக்கோரி நிதி அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளதாகவும், ஒப்புதல் கிடைத்தவுடன் நிலுவை தொகை விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த தொகையை விடுவிக்க வேண்டுமென மத்திய நிதி அமைச்சகத்துக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், அதில் 2017-18ஆம் ஆண்டு வரையில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை 984 கோடியே 91 லட்சம் ரூபாயை இரண்டு மாதத்தில் வழங்க வேண்டுமென மத்திய சமூக நீதித்துறைக்கு உத்தரவிட்டனர்.
இதில் 2017-18ஆம் ஆண்டுக்கான உதவித்தொகை 162 கோடி ரூபாயை சம்பந்தபட்ட மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கும் உத்தரவிட்டுள்ளனர்.
எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கு உதவித்தொகை!
Reviewed by நமதூர் செய்திகள்
on
22:57:00
Rating:
No comments: