ஐந்து மாநில தேர்தல் முடிவு பாஜகவுக்கு அடிக்கப்பட்ட சாவுமணியா?

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, தான் ஆட்சி செய்து கொண்டிருந்த மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களை இழந்துள்ளது. அந்த மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றி இருக்கின்றது. மற்ற இரண்டு மாநிலங்களான தெலுங்கானா, மிசோரம் ஆகியவற்றில் மாநிலக் கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளன. இந்த வெற்றி மதச்சார்பற்ற அணிகளுக்குக் கிடைத்த வெற்றியாகவும், பிஜேபியின் மதவாத, வளர்ச்சியற்ற, பாசிச ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலை காரணமாக கிடைத்த வெற்றியாகவும் பார்க்கப்படுகின்றது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட காங்கிரஸின் வெற்றியை அதே மக்களைக் கொண்டாடும் மனநிலைக்கு பிஜேபி தள்ளியுள்ளது. 
modi and rahulவடமாநிலங்களைப் பொருத்தவரை சாதிவெறியும், மதவெறியும், பிற்போக்குத்தனமுமே தேர்தலைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக விளங்கி வந்தன‌. வழக்கம் போல இந்தத் தேர்தலிலும் பிஜேபி அதே அஸ்திரங்களைத்தான் மக்கள் மீது வீசியது. இருந்தாலும் அதை மக்கள் வீழ்த்தியிருக்கின்றார்கள் என்பது வடமாநில மக்கள் எந்த வளர்ச்சியும் அற்ற பிஜேபியின் வெற்று வாய்ச்சவடால் ஆட்சியால் பெரும் அயர்ச்சி அடைந்திருக்கின்றார்கள் என்பதையே காட்டுகின்றது. ஆனால் இந்த வெற்றியை முற்போக்கு சக்திகள் அனைத்தும் கொண்டாடுவது நமக்கு வருத்தத்தைத் தருகின்றது. ‘பேயிக்கு பிசாசே பரவாயில்லை’ என்ற மனநிலைக்கு அவர்கள் வந்துவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
 
 காங்கிரசின் பத்தாண்டு கால ஆட்சி, அதைத் தொடர்ந்து பிஜேபியின் ஐந்தாண்டு கால ஆட்சி என மொத்தம் பதினைந்து ஆண்டுகால ஆட்சியில் லட்சக்கணக்கான விவசாயிகளையும், தொழிலாளர்களையும் வறுமையாலும், பட்டினியாலும், கடன் தொல்லையாலும் சாகடித்திருக்கின்றார்கள். ஆனால் நாட்டில் உள்ள பெருமுதலாளிகளும், தரகு முதலாளிகளும் இந்த பதினைந்து ஆண்டுகளில் தங்களின் சொத்து மதிப்பை ஆயிரக்கணக்கான மடங்கு உயர்த்தி உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடித்திருக்கின்றார்கள்.
 
 ஆனால் மக்கள் யாரால் தங்களின் வாழ்க்கை தொடர்ந்து சூறையாடப்படுகின்றதோ, யார் தங்களின் வாழ்க்கையைத் தொடர்ந்து கேள்விக்குள்ளக்குகிறார்களோ, தொடர்ந்து அவர்களையே தேர்ந்தெடுக்க நிர்பந்திக்கப்படுகின்றார்கள். காங்கிரசுக்கு மாற்றாக மதவெறி பாசிச பாஜக தன்னை அரசியல் களத்தில் தக்க வைத்துக் கொண்டது போல, ஏன் கம்யூனிஸ்ட் கட்சிகளால் தங்களை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என்பது தொடர்ந்து பெரும் கேள்வியாகவே உள்ளது. தாங்கள் வலுவாக இருந்த மேற்கு வங்காளம், திரிபுரா போன்றவற்றையும் கடந்த ஆண்டுகளில் பறிகொடுத்ததுதான் அதன் வளர்ச்சியாக இருக்கின்றது. இவ்வளவு பெரிய கடுமையான நெருக்கடியைப் பயன்படுத்திக்கூட கம்யூனிஸ்ட் கட்சிகளால் தங்களை ஒரு மாற்று சக்தியாக இந்திய அரசியலில் வளர்த்தெடுத்துக் கொள்ள முடியவில்லை என்பது துயரமான நிலையே ஆகும்.
 
 தங்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மோடி வந்தால் தீர்வு கிடைத்துவிடும் என்று மோடிக்கு பெரும்பான்மையாக ஓட்டளித்த மக்கள், இப்போது தங்கள் பிரச்சினைகள் அனைத்தும் ராகுல் காந்தி வந்தால் தீர்ந்துவிடும் என நம்பத் தொடங்கியுள்ளார்கள். நிச்சயமாக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபி மண்ணைக் கவ்வும் என்பதும், காங்கிரஸ் வெற்றி பெறும் என்பதும் இப்போதே உணரத்தக்கதாக உள்ளது. அதற்கு ஏற்றாற்போல கருத்துக்களை உற்பத்தி செய்யும் வேலையை அறிவுஜீவிகள் இப்போதே ஆரம்பித்திருக்கின்றார்கள். ஆனால் இவர்கள் மறந்தும் கூட கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆதரவாக மக்களின் மனநிலையை மாற்ற ஒருபோதும் முயற்சிக்காதவர்கள். முதலாளித்துவ அறிவுஜீவிகள் மட்டுமல்லாமல், தங்களை பாட்டாளிவர்க்க அறிவிஜீவிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட அதே திசையில்தான் தங்களின் சிந்தனையையும், செயல்பாடுகளையும் அமைத்துக் கொள்கின்றார்கள்.
 
 கம்யூனிஸ்ட் கட்சிகளைவிட காங்கிரஸ் போன்ற முதலாளித்துவக் கட்சிகளின் வளர்ச்சிக்காக தங்களின் அறிவை விற்பதில் அவர்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றார்கள். தப்பித் தவறி கூட கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு தனிப்பெரும் அரசியல் சக்தியாக வளர்த்தெடுக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் காங்கிரசுக்கு முற்போக்கு முகத்தையும், முதலாளித்துவ எதிர்ப்பு முகத்தையும் ஏற்படுத்த முயற்சிக்கின்றார்கள். காங்கிரசு, தேர்தலில் ஓட்டு கிடைக்கும் என்றால் அது பிஜேபியைவிட அதிகமாகவே பார்ப்பனியத்தை கையில் எடுக்கும் கட்சி என்பதற்கும், கார்ப்ரேட்டுகளின் கைக்கூலி என்பதற்கும் நம்மிடம் டன் கணக்கில் ஆதாரங்கள் இருக்கின்றன. இந்தத் தேர்தலில் கூட மத்தியப் பிரதேசத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும் கோசாலைகள் அமைக்கப்படும் என்றும், மாநிலம் முழுவதும் சமஸ்கிருதப் பள்ளிக்கூடங்கள் நிறுவப்படும் என்றும், ஆன்மீகத்துக்கு தனித்துறை அமைக்கப்படும் என்றும் வாக்குறுதிகள் அளித்திருந்தது. இதுதான் காங்கிரசின் உண்மையான மதச்சார்பற்ற முகம்.
 
 பிஜேபிக்கு எந்த வகையிலும் காங்கிரசு ஒரு மாற்றே கிடையாது. ஆனால் காங்கிரசு கட்சி போன்றே ஓட்டுக்காக பார்ப்பனியத்துடன் அப்பட்டமாக சமரசம் செய்து கொள்ளும் பித்தலாட்டக் கும்பல்கள் மக்களை நம்ப வைக்க இந்த வெற்றியை மதச்சார்பற்ற அணிகளுக்குக் கிடைத்த வெற்றியாக திரிக்க முயன்று கொண்டு இருக்கின்றார்கள். ஜி.எஸ்.டி ஆக இருக்கட்டும், ஆதார் ஆக‌ இருக்கட்டும், பழங்குடியின மக்களுக்கு எதிரான பசுமை வேட்டையாக இருக்கட்டும், முதலாளிகளுக்கு மக்களின் வரிப்பணத்தை மானியமாக வாரி வாரி வழங்குவதாக இருக்கட்டும், நாட்டு மக்களுக்கே தெரியாமல் அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் இறையாண்மையை அமெரிக்காவுக்கு அடகு வைத்ததாக இருக்கட்டும், கூடங்குளம் அணு உலையை தமிழ்நாட்டின் மீது திணித்ததாக இருக்கட்டும், ஒரு கேடு கெட்ட பாசிச கட்சியாகவேதான் கடந்த காலங்களில் காங்கிரசு இருந்துள்ளது. அதன் வெற்றி என்பது மீண்டும் வர இருக்கும் ஒரு கெட்ட காலத்திற்கு கட்டியம் கூறுவதாகவே இருக்கும்.
 
 இன்று மோடியை பணக்காரர்களுக்காக வேலை செய்பவர் என்று சொல்லும் ராகுல்காந்தி, முந்தைய காலங்களில் காங்கிரசு கட்சி அதையேதான் செய்து கொண்டு இருந்தது என்பதை இந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் நிச்சயம் மறந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் துணிந்து பேசிக் கொண்டு இருக்கின்றார். பணமதிப்பிழப்பு, விவசாயப் பொருட்களின் விலை வீழ்ச்சி, வேலைவாய்ப்பின்மை, தலைவிரித்தாடிய வங்கி மோசடிகள், பசுவை வைத்து நாடு முழுவதும் காவி பயங்கரவாதிகள் நடத்திய தீவிரவாதத் தாக்குதல்கள் போன்றவை மோடியின் மீதும், பிஜேபி மீதும் ஏற்படுத்தி இருந்த கடுமையான வெறுப்பை காங்கிரசு அறுவடை செய்திருக்கின்றது என்பதுதான் உண்மை. தெலுங்கானாவில் ஆட்சியைப் பிடித்திருக்கும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியும், மிசோராமில் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கும் மிசோரம் தேசிய முன்னணியும் கூட கடைந்தெடுத்த பிற்போக்குக் கட்சிகள் தான்.
 
 நாடு திரும்பத் திரும்ப பிற்போக்குவாதக் கும்பல்களிடமும், கார்ப்ரேட்டுகளின் கைக்கூலிகளிடமே ஒப்படைக்கப்படுவது பெரும் கேடாக இந்திய மக்களைத் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றது. இரண்டு மாபெரும் பாசிச சக்திகளான காங்கிரசும், பாஜகவும் மட்டுமே இந்த மக்களுக்கு இருக்கும் வாய்ப்புகளாக இந்திய ஆளும் வர்க்கத்தால் உருவாக்கப்பட்டிருக்கின்றது. நாடு முழுவதற்கும் முற்போக்கு அரசியலுக்கான களம் எப்போதுமே காலியாக உள்ளது. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகள் அப்படியான ஒரு மாற்று சக்தியாக இந்திய அரசியலில் இன்னும் தம்மை தக்க வைத்துக் கொள்ள முடியமால் திணறி வருகின்றன‌. இதற்கு என்ன காரணம் என்பதை அந்தக் கட்சிகள் பரிசீலிக்க வேண்டும். தகுதியற்றவர்கள், செயல்பாடற்றவர்கள், முதலாளித்துவக் கட்சிகளுக்கு புரோக்கர் வேலை பார்ப்பவர்கள் போன்றவர்களை அந்தக் கட்சி தயவு தாட்சணியமற்று வெளியேற்ற வேண்டும். நேற்றுவந்த ராகுல்காந்தி போன்றவர்களை எல்லாம் ஒரு அரசியல் சக்தியாக மதித்து மக்கள் வாக்களிப்பார்கள் என்பது கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பெரிய அவமானம் ஆகும். ராஜஸ்தானில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதைக் கொண்டாடுவதை விட, போட்டியிட்ட மற்ற தொகுதிகளில் ஏன் தோற்றோம் என்பதை தீவிரமாக கட்சி சுயபரிசீலினை செய்ய வேண்டும். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்பவன்தான் உண்மையான கம்யூனிஸ்ட். அதே தவறை திரும்பத் திரும்ப எந்த பிரக்ஞையும் இல்லாமல் பல வருடங்கள் தொடர்ந்து செய்பவன் நிச்சயம் கம்யூனிஸ்டாக இருக்க முடியாது.
 
 ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளில் இருந்து பிற்போக்குக் கட்சிகள் நிச்சயம் இந்நேரம் பாடம் கற்றுக் கொண்டிருக்கும். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி? அவர்கள் இன்னமும் பிஜேபி தோற்றுவிட்டதைத்தான் பெருமையாக சொல்லிக் கொண்டு இருக்கின்றார்களே தவிர, இந்த ஐந்து மாநிலத் தேர்தலில் தங்கள் நிலை என்னானது என்பதை சுயவிமர்சனம் செய்துகொண்டது போலவே தெரியவில்லை. காங்கிரசின் வெற்றியை கம்யூனிஸ்ட் கட்சி கொண்டாடிக் கொண்டு இருக்கின்றது. தோழர்களின் இந்த மகிழ்ச்சிக்கும் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று நாம் நம்புவோம்.
 
- செ.கார்கி
ஐந்து மாநில தேர்தல் முடிவு பாஜகவுக்கு அடிக்கப்பட்ட சாவுமணியா? ஐந்து மாநில தேர்தல் முடிவு பாஜகவுக்கு அடிக்கப்பட்ட சாவுமணியா? Reviewed by நமதூர் செய்திகள் on 00:17:00 Rating: 5

No comments:

Powered by Blogger.