தேர்தல் முடிவுகள்: சிதம்பரம் கோரிக்கை!
வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்கு எண்ணிக்கையையும், வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குசீட்டையும் (விவிபிஏடி) சரிபார்க்க வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் மாநில சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், தெலங்கானாவில் நடைபெற்றத் தேர்தலில், பெரும்பாலான வாக்காளர் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதுபோன்று ராஜஸ்தான் தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட வாக்கு இயந்திரம் ஒன்று சாலையில் கிடந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுபோன்ற சர்ச்சைகளுக்கு தேர்தல் ஆணையம் என்ன விளக்கமளிக்கவுள்ளது என்று கேள்வி எழுப்பிய ப.சிதம்பரம் வாக்குப்பதிவு இயந்திர வாக்கு எண்ணிக்கையை வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குசீட்டுடன் (விவிபிஏடி) ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது ஒரு வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மட்டும் இவ்வாறு சரிபார்க்கப்படுகிறது என்று சுட்டிக்காட்டிய சிதம்பரம், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஏன் இவ்வாறு செய்யக் கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஒரே ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் இதுபோன்று சரிபார்க்கப்படுவது பெயரளவு செயல்பாடுகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், வாக்குசீட்டை ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டால் வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீதான சந்தேகங்கள் நீங்கி அதன் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ள அவர், இந்த நடவடிக்கைகளால் 2 அல்லது 3 மணி நேரம் மட்டுமே தேர்தல் முடிவுகள் தாமதமாகும், அதனால் எந்த ஒரு இழப்பும் ஏற்படாது என்று கூறியுள்ளார்.
நாளை தேர்தல் முடிவுகள் வெளியிடவுள்ள நிலையில் இந்த முக்கிய கோரிக்கையை சிதம்பரம் முன்வைத்துள்ளார்.
https://minnambalam.com/k/2018/12/10/38
தேர்தல் முடிவுகள்: சிதம்பரம் கோரிக்கை!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:49:00
Rating:
No comments: