மோடியின் திட்டம்...நல்ல திட்டம்தான். ஆனால்...?’’ - பொருளாதார நிபுணர் கவலை

ரூ1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடியின் அதிரடியான அறிவிப்பால் நாடு முழுவதும் பலரும் திக்குமுக்காடிப் போயுள்ளனர். காய்கறி முதல் கணினி விற்பனை வரை வர்த்தகம் முடங்கியுள்ளது. வங்கி மற்றும் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்க நீண்ட வரிசையில் தினமும் பலரும்  காத்திருக்கின்றனர். நாடு முழுவதும் ஒரு அசாதாரணமான சூழ்நிலையே நிலவுகிறது. 
மோடி
இந்த நிலையில், கறுப்புப் பணத்தை ஒழிக்க அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு மட்டும் போதுமா? கறுப்புப் பணத்தை ஒழிக்க அரசு எந்தமாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து பொருளாதார நிபுணர் மற்றும் மாநில திட்டக் குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் நாகநாதனிடம் கேட்டோம். விரிவான விளக்கத்தை தந்தார் அவர். 
பெரும் பிரச்னை! 
“ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு சரியான நடவடிக்கை. ஆனால், தவறான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஏனெனில், மக்களுக்கு இது எச்சரிக்கையாகவும், படிப்பிணையாகவும் இருக்கவேண்டுமே தவிர, ஆபத்தாக மாறிவிடக் கூடாது. வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பணத்தை மாற்றிக் கொள்வதில் பெரிய பிரச்னை இல்லை. ஆனால், இதுவரை வங்கிக் கணக்கே வைத்திருக்காதவர்களுக்கு இது பெரும் பிரச்னையாக உள்ளது.  
வங்கிகளில் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் நோயாளிகள், வயதானவர்களுக்கு எந்தவொரு முன்னுரிமையும் தரவில்லை. இதனால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். ஆனால், இப்போது மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிக்கும் வங்கிகளில் தனி வரிசை அமைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. இது அரசாங்கத்தின் அறிவிப்பு தோல்வி அடைந்ததற்கான அர்த்தம். இந்தத் திட்டம் நல்ல திட்டம். ஆனால், இந்தத் திட்டத்தை உரிய முறையில் நிறைவேற்றவில்லை. 
மத்திய அரசு இனிமேல், வங்கிகளுக்கு உடனடியாக ரூ.500 மற்றும் ரூ.100 நோட்டுகளை விநியோகித்து, வயதானவர்களுக்கும், மாற்றுத்திறனாளிக்கும் வழங்கவேண்டும். ரூ.2.5 லட்சத்துக்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்தால், வருமான வரி நடவடிக்கை எடுப்போம் என்று அறிவிப்பு எல்லாம் சரியான நடவடிக்கையே கிடையாது. 5 லட்சமாக இருந்தாலும், 10 லட்சமாக இருந்தாலும் வங்கிகள் பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு வரிகள் விதிக்கக்கூடாது. சட்டத்துக்குப் புறம்பான சொத்துகள்! 
ஏழைகள் நீண்ட நாட்களாகச் சேமித்த பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்யும்போது அதற்கும் வருமான வரி செலுத்தவேண்டிய நிலை ஏற்படக்கூடாது. மீனவர் ஒருவர் சாதாரணமாக ரூ.5 லட்சம் வரையிலான பணத்தை கையில் வைத்திருக்கிறார். இவர்கள் எல்லாம் தினமும் பணப் பரிவர்த்தனையில் ஈடுபடுவார்கள். இது அன்றாட உணவுப் பொருள். சந்தையில் விற்பனை செய்யும் காய்கறி வியாபாரிகளும் பெரிய பணக்காரர்கள் என்று சொல்லிவிட முடியாது. இது மாதிரியான நபர்களுக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும். 
நாட்டின் மிக முக்கிய பிரச்னையை சமாளிக்க ஒரு மணி நேரம் க்யூவில் நிற்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், இப்போது ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பு “The operation was successful, but the patient died” என்பதுபோல் ஆகிவிட்டது. எனினும் நம் நாட்டில் இருக்கும் கறுப்புப் பணத்தை வெளியில் கொண்டுவர அரசாங்கம் சட்டத்துக்கு புறம்பாக வைத்திருக்கும் சொத்துக்கள் மற்றும் கணக்கில் காட்டாத தங்க நகைகளை வெளியே கொண்டுவர வேண்டும். 
நில உச்ச வரம்பு! 
சாதாரண ஏழையிடம் இருக்கும் ரூபாய் நோட்டைப் பிடுங்குவதைப் போல, இந்தியாவில் தங்கம் வைத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும் (கோயில் தங்கம் உட்பட) பயனற்ற தங்கத்தை உயிர்ப்பிக்க வேண்டும். கோவில்களில் இருக்கும் தங்கத்தை எடுத்து கோல்ட் பாண்டாக மாற்ற வேண்டும். அதே மாதிரி, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், பல பேர் டாலரில் முதலீடுகளை மேற்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து விசாரித்து சட்டத்துக்கு புறம்பாக முதலீடு மேற்கொண்டவர்களை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஒருவரது பெயரில் ஐந்துக்கும் மேற்பட்ட சொத்துகள் இருந்தால், இரண்டை மட்டும் விட்டுவிட்டு, மீதி மூன்று சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். நகர்ப்புற நில உச்சவரம்பை மறுபடியும் கொண்டுவர வேண்டும். ஏன் 100 ஏக்கர் நிலத்தில் ஒருவர் மட்டுமே வாழவேண்டிய நிலை இருக்க வேண்டும்? நேரு காலத்தில் நகர்ப்புற நில உச்ச வரம்பு இருந்தது. இப்போது இந்த ஏற்றத்தாழ்வை உருவாக்கிவிட்டு, சாதாரண மக்கள் அவதிப்படுவது சரியாக தெரியவில்லை. கறுப்புப் பணம் மட்டுமில்லை, கறுப்பு சொத்து, கறுப்புத் தங்கம், கறுப்பு நிலம் என எல்லாவற்றையும் ஒழிக்க வேண்டும். குறிப்பாக வெளிநாட்டில் பணத்தைப் பதுக்கியுள்ளவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும்” என்றார். 
சட்டத்துக்குப் புறம்பான மற்றும் கணக்கில் காட்டாத சொத்துகள் அனைத்தையும் வெளியே கொண்டுவர மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் உண்மையில் பெருமளவில் கறுப்புப் பணம் ஒழிக்கப்படும். அதைத் தவிர்த்து, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மட்டும் கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியாது. 
மோடியின் திட்டம்...நல்ல திட்டம்தான். ஆனால்...?’’ - பொருளாதார நிபுணர் கவலை மோடியின் திட்டம்...நல்ல திட்டம்தான். ஆனால்...?’’  - பொருளாதார நிபுணர் கவலை Reviewed by நமதூர் செய்திகள் on 03:49:00 Rating: 5

No comments:

Powered by Blogger.