அபத்தக்கூச்சல், தான்தோன்றித்தனம், நாடகமாடுகிறார் மோடி- சீமான் கடும் தாக்கு


ரூபாய்த்தாள் விவகாரத்தில் பிரதமர் மோடி தான்தோன்றித்தனமாக நடந்துகொள்கிறார்; அபத்தக்கூச்சல் இடுகிறார்; கண்ணீர்சிந்தி நாடகமாடுகிறார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமான அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கை:
கறுப்புப்பணத்தை ஒழிக்கவேண்டும் என்ற பிரதமர் மோடியின் கொள்கையில் நமக்கு எந்த முரண்பாடும் இல்லை ஆனால் அதைச் செயல்படுத்த அவர் எடுத்த நடவடிக்கையில் துளியும் உடன்பாடில்லை. அவரின் அவசரகதியான முடிவால் நாட்டு மக்கள் அத்திவாசியத் தேவைகளுக்குக்கூடப் பணமில்லாது அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள். நாட்டிலுள்ள 130 கோடி மக்களும் இதன்மூலம் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இது எதையுமே அறியமுடியா மாய உலகிலிருக்கும் நமது பிரதமர்,ஊழல் செய்தவர்கள் எல்லாம் வங்கி வாசலிலே நிற்பதாகவும் ஏழைகள் நிம்மதியாக உறங்குவதாகப் பிதற்றியிருக்கிறார். உலகம் முழுவதும் சுற்றிய மோடி, ஒருமுறை இந்தியாவை முழுமையாகச் சுற்றிவரட்டும். எந்த வங்கி வாசலில் ஊழல்வாதிகள் நிற்கிறார்கள்? எந்தத் தானியங்கி இயந்திர மையத்தின் வாசலில் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் கால்கடுக்கக் காத்துக்கிடக்கிறார்கள்? எந்தப் பாமர மக்கள் மகிழ்ச்சியோடு இந்த அறிவிப்பை வரவேற்கிறார்கள்? எனக் காட்டட்டும். ஒட்டுமொத்த நாட்டு மக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வாழ்க்கையை நகர்த்த முடியாது வேதனையின் விளிம்பில் நிற்கும்வேளையில் மோடியின் இது போன்ற அபத்தக்கூச்சல்கள் மக்கள் படும் துயரங்களை எள்ளி நகையாடுவதாக உள்ளது.
நாடு முழுமைக்கும் முதியவர்கள், விவசாயிகள், அன்றாடங்காய்ச்சிகள், மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் எனச் சமூகத்தின் அங்கமாக இருக்கும் பல கோடி மக்களும் மிகுந்த அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 5 நாட்களில் மட்டும் இதுவரை 16 பேர் பலியாகியிருக்கிறார்கள். ஆனால், நமது பிரதமரோ இது எதனையும் சிறிதும் கவனத்திற்கொள்ளாமல் உண்மைக்கு மாறாகப் பேசி கட்டமைக்க முயல்வது மிகுந்த கண்டனத்திற்குரியது .
நேற்றைய உரையில் பிரதமர் மோடி ஊழல் செய்யும் பணக்காரர்களால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்ற வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார். எப்போதும் உயர் அடுக்குப் பாதுகாப்பில் இருந்துகொண்டு, குண்டு துளைக்காத காரிலும், தனி விமானத்திலும் பயணிக்கும் மோடிக்கு யாரிடமிருந்து அச்சுறுத்தல்? கறுப்புப் பணம் விவகாரத்தினால் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என எந்த உளவுத்துறை சொன்னது? பிரதமருக்கே அச்சுறுத்தல் விடுக்கும் அளவுக்குப் பெருமுதலாளிகளின் கை ஓங்கியிருக்கிறதென்றால், நாடு யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பெருமுதலாளிகள் கையிலா? ஆட்சியாளர்கள் கையிலா? சாதாரண ஒரு அரசியல் பிரமுகருக்கு அலைபேசியில் குறுஞ்செய்தியின் மூலம் விடப்படும் அச்சுறுத்தலுக்கே உரியவர்களைக் கைதுசெய்யும் நாட்டில், பிரதமருக்கே அச்சுறுத்தலை விடுபவர்களை இன்னும் ஏன் கைதுசெய்து நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் பிரதமருக்கே இங்கே உயிருக்கு அச்சுறுத்தல் என்றால் தன் உயிருக்கு இந்த நாட்டில் என்ன பாதுகாப்பு இருக்கமுடியும் என்று ஒரு சாதாரணக் குடிமகன் கவலையுற மாட்டானா? அனைத்து அதிகாரத்தையும் கொண்டிருக்கும் நாட்டின் தலைமையச்சரே இதுபோலப் புலம்பலாமா? இதுதானா அகண்ட மார்பு கொண்ட மோடியின் ஆளுமைத்திறனும், நிர்வாகத்திறமையும்?
இரு நாட்களில் மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவார்கள் என அறிவித்துவிட்டு, இப்போது 50 நாட்கள் அவகாசம் கேட்கிறார் ‘வெளிநாடுவாழ் இந்தியப் பிரதமர்’. ஏற்கனவே, ஆட்சிக்கு வந்த 90 நாட்களில் சுவிட்சர்லாந்து வங்கிகளில் இருக்கும் கறுப்புப்பணத்தை மீட்டெடுப்பேன் எனக் கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டாகிவிட்டது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியோ, ‘தானியங்கி இயந்திரங்கள் செயல்பட மூன்று வாரங்கள் ஆகும்’என்கிறார். புதிய 2,000 ரூபாய்த் தாளின் அளவு முன்னம் இருந்த தாள்களின் அளவில் இருந்து மாறுபட்டு உள்ளது. ஆகவே தானியங்கி இயந்திரத்தில் இப்போது வைக்க இயலாது என அறிவிக்கும் மத்திய நிதியமைச்சகம், இதனை முன்கூட்டியே சிந்திக்காதது ஏன்?. இந்த அடிப்படை ஆய்வைக்கூடச் செய்யாமல் புதிய நோட்டை அவசரகதியில் வெளியிட்டதால் இதுவரையிலும் வீணான மனித உழைப்பிற்கும், வணிகத்தேக்கத்திற்கும், இனி வரும் 50 நாட்களில் ஏற்படப் போகும் பாதிப்பிற்கும் பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியும்தான் பொறுப்பேற்க வேண்டும்.
‘தன்னைத் தீவைத்து கொளுத்தினாலும் கறுப்புப்பணத்தை ஒழிக்காது விடமாட்டேன்’ என முழங்கும் மோடி தனது கட்சி யாரிடமிருந்தெல்லாம் தேர்தல் நன்கொடை வாங்கியது என்ற தகவலை வெளிப்படையாகச் சொல்ல மறுப்பதன் பின்னணி என்ன? இன்று இந்தத் திடீர் அறிவிப்பு மூலம் கறுப்புப்பணத்தை ஒழித்துவிடலாம் எனக் கூக்குரலிடுகிறது பாஜக. ஆனால் ஏறக்குறைய இதே திட்டத்தை 2005ஆம் ஆண்டு அப்போதைய காங்கிரசு அரசு கொண்டுவர முற்பட்டபோது, ‘இத்திட்டம் பணக்காரர்களுக்கானது; இதன்மூலம் ஏழைகள்தான் பாதிக்கப்படுவார்கள்’ என்று பாஜகவின் அப்போதைய செய்தித்தொடர்பாளர் மீனாட்சிலெகி குற்றஞ்சாட்டியிருக்கிறார். பாஜகவின் இவ்விரண்டு நிலைப்பாடுகளில் எது உண்மை? சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணம் வைத்திருப்போரின் பட்டியலை காங்கிரசு வெளியிட மறுக்கிறது எனக் குற்றஞ்சாட்டிய பாஜக, இன்றைக்கு அதே பட்டியலை வெளியிட மறுப்பதன் பின்புலம் என்ன?
தனது தான்தோன்றித்தனமான முடிவால் நாடு முழுமைக்கும் மக்களிடம் ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பலையைச் சமாளிக்கவே மேடையில் கண்ணீர் சிந்தி, வீட்டைத்துறந்து தான் வாழ்வதாகக் கூறி நாடகமாடி நடிப்புத் திறமையை வெளிக்காட்டுகிறார் பிரதமர் மோடி. இந்நாடு பல நடிகர்களை அரசியல்வாதிகளாக உருவாக்கியும் பல அரசியல்வாதிகளின் நடிப்பையும் பார்த்துவருகிறது. ஆகவே பிரதமர் மோடி இதை எல்லாம் கைவிட்டுக் கறுப்புப்பணத்தை மீட்பதற்கான ஆக்கப்பூர்வமான வேலையைத் தொடங்கட்டும். ஏனென்றால், இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் பணம் 17 இலட்சம்கோடிதான். ஆனால், அந்நிய வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப்பணம் இதனைவிடப் பலமடங்கு அதிகம் என்கிறது புள்ளிவிவரம். மோடி தனது பேச்சில் குறிப்பிட்டது போலத் தனது இன்னொரு முகத்தை அந்நிய வங்கிகளில் பதுக்கி வைத்திருப்போரின் மீது காட்டட்டும். அப்பாவி உழைக்கும் மக்கள் மீது காட்ட வேண்டாம்.
இந்தத் தாள் மாற்றத்தினால், தனது சரிந்த பிம்பத்தை நிலைநிறுத்தவும், உத்திரப்பிரதேசத் தேர்தலில் அரசியல் இலாபத்தைப் பெறவும்தான் முடியுமே ஒழிய, வேறு எந்தச் சமூகச்சீர்திருத்தத்தையும் தன்னால் சாத்தியப்படுத்த இயலாது எனப் பிரதமருக்கே தெரியும். அது தெரிந்தும் கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியும் என முழங்குவதெல்லாம் ஏமாற்று வேலை.

நாட்டின் பொருளாதாரக்கொள்கையில் எவ்வித மாற்றமும் செய்யாது, ஒட்டுமொத்தமாக அனைத்துத் துறைகளையும் தனியாருக்குத் தாரைவார்க்கும் தனியார்மய, தாராளமய கொள்கையைக் கடைபிடிக்கும் அரசு, தனிப்பட்ட முதலாளிகளிடம் கறுப்புப் பணம் சேர்கிறது என்று பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. தனியார் முதலாளிகள் லாபத்தேவைக்கு வருவார்களா மக்கள் சேவைக்கு வருவார்களா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். ஒரு நாட்டின் உயிர்நாடியான கல்வியை மருத்துவத்தைத் தனிப்பெரும் முதலாளிகளில் கையில் கொடுத்துவிட்டு, மனிதன் வாழ உயிர்நாடியான தண்ணீரை விற்பனைக்குக் கொண்டுவந்துவிட்டு வெறும் ரூபாய் தாளை மாற்றுவதன் மூலம் எதனையும் சாதிக்க முடியாது. தனியார்மயத்தைத் தளர்த்தி, தாராளமயத்தைத் தளர்த்தி, தற்சார்பு பொருளாதாரக் கொள்கையைக் கொண்டு வந்து, மண்ணின் வளம் மக்களுக்கானது என்ற நிலை வரும்பொழுதுதான் இந்நாட்டில் சமநிலைச் சமுதாயம் உருவாகி கருப்புப்பணம் ஒழியும் என்று சீமானின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபத்தக்கூச்சல், தான்தோன்றித்தனம், நாடகமாடுகிறார் மோடி- சீமான் கடும் தாக்கு அபத்தக்கூச்சல், தான்தோன்றித்தனம், நாடகமாடுகிறார் மோடி- சீமான் கடும் தாக்கு Reviewed by நமதூர் செய்திகள் on 03:40:00 Rating: 5

No comments:

Powered by Blogger.