நக்கீரன்
நக்கீரன்
நக்கீரன்

மேற்கத்திய நாடுகளுக்கு இயற்கை நான்கு பருவ காலங்களை உருவாக்கி வைத்துள்ளது. ஆனால் முதலீட்டியம் இன்னொன்றையும் கூடுதலாகச் சேர்த்து இதனை அய்ந்து பருவ காலங்களாக மாற்றியுள்ளது. அந்த அய்ந்தாவது காலம் விடுமுறை காலம் என அழைக்கப்படும் வணிகக்காலம் ஆகும். இந்த 5 காலத்துக்கும் தகுந்தாற்போல் ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டு அங்கு விற்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக ஸ்வீடன் நாட்டின் எச்&எம் நிறுவனம் உலகின் மூன்றாவது பெரிய சில்லறை வணிக ஆடை நிறுவனமாகும். இதன் வணிக உத்தி என்னவெனில் இந்நிறுவனத்தின் ஆடைகள் நெடுநாட்கள் உழைப்பதற்காக உருவாக்கப்படுவதில்லை. மிகக்குறைந்த விலை, அந்தந்த பருவத்துக்கு ஏற்ற வடிவமைப்பு ஆகியவையே இதன் வெற்றியின் கமுக்கம். அதாவது ஆடைகளை வெகு குறைந்த காலத்துக்கு மட்டும் பயன்படுத்திப் பின் எறிந்து விடுவதாகும். இதற்காகவே தற்போது அங்குள்ள சில சில்லறை வணிக நிறுவனங்கள் புதிதாக 26 நாகரிக ‘பருவ காலங்களை’ கண்டறிந்துள்ளனர். ஒவ்வொரு பருவ காலமும் இரண்டு வாரங்களை மட்டுமே கொண்டதாகும். அந்தளவுக்கு நுகர்வு வெறி அங்குத் திணிக்கப்பட்டுள்ளது. இந்நுகர்வு வெறியை ஈடுசெய்யவே ஆசிய நாடுகளிடத்து புதிய புதிய ஆடைத் தயாரிப்பு நிறுவனங்கள் திணிக்கப்படுகின்றன.
இன்னொரு கதை ஹைத்தி என்ற குட்டி நாட்டின் கதை. இந்நாட்டுக்கு அய்க்கிய அமெரிக்காவின் ‘மியாமி அரிசி’ என்னும் பண்ணைகளில் பயிரிடப்பட்ட அரிசி பெருமளவில் மலிவு விலைக்கு இறக்குமதி செய்யப்பட்டது. இதனால் சத்துமிகுந்த ஹைத்தியின் உள்நாட்டு அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டது. அத்தோடு ஹைத்தியில் வேளாண்மைக்குக் கொடுத்து வந்த மானியமும் நிறுத்தப்பட்டது. வேளாண்மை அழிந்து உழவர்கள் நகரத்துக்குத் தொழிற்சாலைகளின் கூலிகளாக இடம் பெயர்ந்தனர். என்ன தொழிற்சாலை தெரியுமா? ஆடை உற்பத்தி தொழிற்சாலை. (தஞ்சை உழவர் குடிகள் திருப்பூருக்குக் குடிப்பெயர்ந்தது நினைவுக்கு வரலாம்). உலக வங்கியும், யுஎஸ்எய்ட் என்ற அமைப்பும் இணைந்தே இச்செயலை செய்தன.
ஹைத்தி மக்களின் உணவு உற்பத்தி திறனானதாக இல்லை. மாறாக இவர்கள் தம்முடைய திறன்களைச் செலுத்தி உலகப் பொருளாதாரத்தில் கலந்துக்கொள்ள வேண்டும் என்றார் மக்களாட்சி நாடுகளுக்குச் சீர்திருத்த உதவி செய்யும் அமைப்பாகத் தன்னைத்தானே கூறிக்கொள்ளும் யுஎஸ்எய்ட் நிறுவன அதிகாரி ஒருவர். இதன் பொருள் இந்நாட்டு மக்கள் தற்சார்பை இழந்து பாதிப் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை அமெரிக்கர்களுக்கு உள்ளாடை தைத்துக் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்பதே.
இவ்விடத்தில்தான் விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி வட்டம், தாமரைக்குளம், பொட்டல்குளம் கிராமங்களுக்கு மிகப் பெரிய சாயத் தொழிற்சாலை வருவதைப் பொருத்திப் பார்க்க வேண்டும். ஏற்கனவே பல தொழிற்சாலைகளால் நமது ஆறுகள் பல வண்ணங்களில் ஓடிக்கொண்டிருக்க இந்நிலத்துக்குப் புதிய வண்ணங்களைச் சேர்க்க வருகிறது இதுபோன்ற தொழிற்சாலைகள். உலகில் நீரை மாசுப்படுத்தும் தொழிற்சாலைகளில் 17-20% ஆடை தயாரிப்புத் தொழிற்சாலைகளே ஆகும் என உலக வங்கியே தெரிவித்துள்ளது. சாயக் கழிவு நீரில் 72 வகையான நச்சு வேதிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதும் அதில் 30 வகை எவ்வகையிலும் நீக்கப்பட முடியாதது என்றும் பஞ்சாப் ஃபேசன் டெக்னாலஜி பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கின்றது.
இதுவரை 3600க்கும் மேற்பட்ட வண்ணங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் சாயமேற்றுதல் பிரிண்டிங் இரண்டுக்கும் சேர்த்து 8000 வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. நாளொன்றுக்கு 8000 கிலோ உற்பத்தி செய்யும் ஒரு நடுத்தர ஆலைக்கு 16 இலட்சம் லிட்டர் நீர் தேவைப்படும். இவற்றில் சாயமேற்றுதலுக்கு 16% நீரும், அச்சிடுவதற்கு 8% நீரும் தேவைப்படுகிறது. என்று நேச்சுரல் சயின்ஸ் இதழ் தெரிவிக்கிறது.
ஏற்கனவே இத்தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலந்த இடங்களில் உயிர்வளி(ஆக்சிஜன்) பற்றாக்குறை ஏற்பட்டு மீன் உள்ளிட்ட உயிரினங்கள் அழிந்துள்ளன. இக்கழிவுநீரில் பெரும் பாக்டீரியா வைரஸ்களால் நோய் பெரும் அபாயமும் உண்டு. இதுதவிர இவ்வாலைகளின் பாய்லர்களிலிருந்து சல்பர்டைஆக்சைடும் காற்றில் உமிழக் காத்திருக்கிறது. பணக்கார நாடுகளின் நுகர்வு பசிக்காக இவ்வளவையும் நம் தலையில் கட்டிவிட்டு நம்மை இரையாக்க வருகின்றன இத்தகைய தொழிற்சாலைகள். இங்கு ஏற்கனவே உற்பத்தியாகும் ஆடைகளே நம் தேவையை விட அதிகமாக இருக்கிறதே இதில் அயல்நாட்டுக்காரர்கள் உள்ளாடை அணிய நாம் ஏன் சாகவேண்டும்?
இப்போது எச்&எம் நிறுவனத்தின் நாடான ஸ்வீடன் நாட்டையே எடுத்துக் கொள்வோம். அந்நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோம் சிட்டி ஆஃப் வாட்டர் என்று அழைக்கப்படுகிறது. காரணம் அங்கு ஒரு சாயக் கழிவு ஆலைகளும் கிடையாது. வளர்ச்சி, அந்நிய செலாவணி என்று உச்சரித்துக் கொண்டிருக்கும் கூட்டம் இதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பருத்தி விளைவிக்கத் தெரிந்த வெளிநாட்டினருக்கு, பின்னாலாடை தொழில்நுட்பம் தெரிந்த வெளிநாட்டினருக்கு, அதற்கான இயந்திரங்களையும் உற்பத்தி செய்யத் தெரிந்த வெளிநாட்டினருக்கு இந்த ஆலையையும் அவர்கள் நாட்டிலேயே அமைத்துக் கொண்டால் நிறைய அந்நிய செலாவணி அவர்களுக்கு மிச்சமாகுமே, பிறகு அவர்கள் ஏன் அதைச் செய்வதில்லை?
சாயநீரை இந்நிலத்தில் கழித்து விட அரசியல் சோரம் போகும் கூட்டம் இங்கிருக்கிறது என்பதே காரணம். இரண்டாயிரம் ரூபாய் நோட்டில் சாயம் போகிறது என்று புகார் தெரிவிக்கப்பட்டதற்குச் சாயம் போகும் நோட்டே நல்ல நோட்டு என்று சொன்ன நாடல்லவா இது. இந்தச் சாயத்தைப் பற்றி ஏன் கவலைப்படப் போகிறது? இனி நமக்குத் தேவை நம் சூழலை மாசு செய்யாத தொழில்களே. நொய்யலும் பவானியும் மாசுப்பட்டபோது பாதிக்கப்பட்டது அதன் அருகமை மாவட்டங்கள் மட்டுமல்ல. அதன் கழிவுகள் இறுதியில் வந்து சேர்ந்த காவிரி படுகை மாவட்டங்களும்தான். தமிழ்நிலம் எங்குப் பாதிக்கப்பட்டாலும் அதன் பாதிப்பு நம் அனைவருக்குமானதே.
ஒரத்துப்பாளையத்தை நினைவில் கொண்டு, விருதுநகர் மட்டுமல்ல எந்த இடத்தில் வந்தாலும் நாம் அனைவருமே விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது! வருகிற 30.11.16, புதனன்று காலை 10.30 மணியளவில் கருத்து கேட்பு கூட்டம்.
நக்கீரன், சூழலியல் எழுத்தாளர். காடோடி இவருடைய சூழலியல் நாவல். திருடப்பட்ட தேசியம், கார்ப்பொரேட் கோடாரி உள்ளிட்ட  நூல்களையும் எழுதியுள்ளார்
.