தண்ணீருக்காக அலையும் காட்டு யானைகள்!

கடந்த சனிக்கிழமை (01.03.17) சேற்றில் சிக்கிய மற்றுமொரு யானையை மீட்டுள்ளது கோவை வனத்துறை.
சென்ற வாரம் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே கிணற்றில் விழுந்த பெண் யானை அனைவரும் வியக்கும் வகையில் மீட்கப்பட்டது. மீண்டும் அப்படியொரு மகத்தான மீட்புப் பணியை அதேபகுதியில் வனத்துறையினர் வெற்றிகரமாக செய்துள்ளனர்.
இங்குள்ள கோவனூர் அருகே குட்டைக்கு நீர் அருந்த வந்த ஒரு யானை கூட்டத்தின் பலவீனமான பெண் யானையொன்று அங்கேயே படுத்துவிட்டது.
தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பருவமழை பொய்த்துப்போனதால் காட்டில் கடும் வறட்சி நிலவுகிறது. தண்ணீருக்காக யானைகள் காட்டைவிட்டு வெளிவராமல் இருக்க வனத்துறையால் ஆங்காங்கே தொட்டிகள் அமைக்கப்பட்டு தண்ணீர் விடப்படுகிறது. ஆனால், காட்டில் பல இடங்களில் புற்கள் காய்ந்து தரை மட்டுமே தெரிகிறது. நாளொன்றுக்கு 250 கிலோவரை சாப்பிடும் ஒரு யானையின் 60 விழுக்காடு உணவு புல்தான். உணவு குறைந்து போனதால் பலவீனமான யானைகள் பல இறந்து போயின. இயற்கையின் சீற்றத்தால் நிகழும் இத்தகு மரணங்கள் வருத்தத்தைத் தந்தாலும் தவிர்க்க இயலாதவை. நமது காட்டில் இப்போது எல்லா யானை கூட்டங்களிலும் கணிசமான அளவு குட்டிகள் காணப்படுவதால் இந்த மரணங்களை பற்றி அச்சப்பட வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது. ஆனாலும் பல்வேறு வகையில் இடரில் சிக்கும் யானைகளை மீட்க வனத்துறை பல கடுமையான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இந்த நிகழ்விலும் யானை சேற்றில் படுத்துக் கிடப்பதாக தகவல் கிடைத்தவுடன் வனச்சரகர் திரு.பழனிராஜா தலைமையில் களப்பணியாளர்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் இறங்கினர். படுத்து கிடந்தாலும் அது காட்டுயானை. கால்களை அசைத்துக்கொண்டே இருந்துள்ளது. அதன் கால்களால் அல்ல வாலால் தாக்கப்பட்டால்கூட ஒரு கடப்பாறையால் தாக்கப்பட்ட விளைவு ஏற்படும். அதுமட்டுமன்றி படுத்துக் கிடந்த யானையின் குட்டியும் மற்றொரு பெண் யானையும் அப்பகுதியிலேயே இருந்ததால் அவற்றால் தாக்கப்படும் ஆபத்தும் இருந்தது. இத்தகு நிலையில்தான் மீட்புப்பணி தொடங்கியது. முதலில் யானையின் தும்பிக்கை தண்ணீரில் மூழ்கிவிடாமல் இருக்கச் செய்துள்ளனர். ஏனெனில் யானையின் சுவாசம் தும்பிக்கை வழியாகத்தான் நடக்கும். தண்ணீரில் மூழ்கினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணிக்கும் ஆபத்து உண்டு. வனத்துறை கால்நடை மருத்துவர் திரு.மனோகரன் களத்துக்கு விரைந்து மீட்பு நடவடிக்கையை வழி நடத்தியுள்ளார். வெயில் தாக்காமல் இருக்க பந்தல் அமைக்கப்பட்டதோடு யானையின்மீது சாக்குப்பைகள் போடப்பட்டு தண்ணீர் ஊற்றப்பட்டுள்ளது. பல லிட்டர் குளுகோஸை செலுத்தியுள்ளனர். பின்னர் வெந்நீரால் ஒத்தடம் கொடுத்திருக்கின்றனர். இதனால் கொஞ்சம் தெம்பான யானையின் அசைவுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனினும் அதனால் எழ முடியவில்லை. எனவே யானை எழுவதற்கு ஏதுவாக கால் பகுதியில் குழி தோண்டி சரிவாக படுக்கச் செய்துள்ளனர். பின்னர் ஜேசிபி இயந்திரம் மூலம் எழவைக்க முயற்சித்தபோது யானை தானாகவே எழ முயன்றுள்ளது. முதலில் தடுமாறினாலும் மெள்ள எழுந்து நடந்துள்ளது. மெதுவாக கொஞ்ச தூரம் சென்ற அந்த பேருயிர் மீட்டவர்களுக்கு நன்றி சொல்வதுபோல் திரும்பிப்பார்த்துவிட்டு காட்டுக்குள் சென்றுள்ளது. பின்னர் தன் கூட்டத்துடன் இணைந்து குட்டிக்குப் பால் கொடுத்ததை வனத்துறையினர் நேரில் பார்த்துள்ளனர். அதிகாலை 4 மணிக்கு விழுந்த யானை மீட்கப்பட்டு மாலை 4 மணிக்கு காட்டுக்கு திரும்பியது. இந்த மகத்தான பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் இயற்கை ஆர்வலர்கள் சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவிப்போம் . குறிப்பாக மீட்புப் பணியை வழி நடத்திய டாக்டர் மனோகர், ஒரு கடைநிலை ஊழியரைப்போல் களப்பணியாற்றிய ரேஞ்சர் பழனிராஜா ஆகியோருக்கு நமது சிறப்பான பாராட்டுகளை உரித்தாக்குவோம். காலையில் நடந்த மீட்புப்பணியின்போது யானையால் தாக்கப்பட்ட வேட்டைத் தடுப்பு காவலர் திரு.அருள்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபின் பெரும் பாதிப்பு ஏதுமில்லையென வீடு திரும்பியது ஆறுதலான செய்தி.
இரண்டு மாதங்களுக்கு முன் தடாகம் பகுதியில் பலவீனத்தால் படுத்துவிட்ட ஒரு கருவுற்ற பெண் யானை மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டப்பின் கன்றை ஈன்றது. சில நாள் கண்காணிப்புக்குப் பிறகு தன் பிள்ளையுடன் அந்தத் தாய் கானகம் திரும்பிய அரிய நிகழ்வு நடந்தது. பிறகு சிறுமுகைப் பகுதியில் சேற்றில் சிக்கிக்கொண்ட யானை, பெரும் போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டது. இத்தகு வெற்றிகரமான மீட்புப்பணிகளில் ஈடுபட்ட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இதுபோன்ற மீட்பு நடவடிக்கைகளுக்கு ஹெலிகாப்டர் உள்ளிட்ட நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதை நாம் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம். ஆனால், இங்கு அடிப்படை வசதிகள்கூட இல்லாமல்தான் நமது களப்பணியாளர்கள் செயலாற்றுகின்றனர். தொடர்ந்து நிகழும் இத்தகு பணிகளின்போது ஏற்படும் உணவு, வாகனம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கான அவசர நிதி துறையிடம் இருப்பதில்லை. இதுபோல் சிக்கலில் இருக்கும் விலங்குகளை மீட்கும்போதும் காட்டைவிட்டு வெளியே வந்த விலங்குகளை திரும்பவும் காட்டுக்குள் அனுப்பும் பணியிலும் தங்கள் உயிரை பணயம் வைத்தே செயலாற்றுகின்றனர். சென்ற வாரம் கிணற்றில் விழுந்த யானையை மீட்கும்போது அந்த காட்டு யானையின் முதுகில் ஏறி அமர்ந்து ஒரு பணியாளர் அதனை கட்டியுள்ளார். இது எவ்வளவு ஆபத்தான செயல் என்பதை அறிவோம். ஆனால், இப்படி களப்பணியாற்றும்போது எதிர்பாராத ஆபத்தில் சிக்கி உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் குடும்பத்திற்கு எவ்வித சிறப்பு நிதியும் வழங்கப் படுவதில்லை. இந்த நிலையிலும் தொடர்ந்து காட்டுயிர்களை காப்பாற்றும் பணியை செய்துவரும் வனத்துறையின் தேவைகளை அரசு கவனிக்குமா?
இம்முறை மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைத்து பணியாளர்களையும் அழைத்து அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தியதோடு தன் சொந்த செலவில் அனைவருக்கும் கைக்கடிகாரம் பரிசளித்த தலைமை வனப்பாதுகாவலர் திரு.அன்வர்தீன் அவர்களின் செயல் பாராட்டுக்குரியது.
கட்டுரையாளர்: ஓசை காளிதாஸ்
ஓசை மக்கள் விழிப்புணர்வு தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் காளிதாசன். இவர், சுற்றுச்சூழல் மற்றும் கானுயிர் மேம்பாட்டுக்காக இயங்கி வருகிறார்.
தண்ணீருக்காக அலையும் காட்டு யானைகள்! தண்ணீருக்காக அலையும் காட்டு யானைகள்! Reviewed by நமதூர் செய்திகள் on 04:14:00 Rating: 5

No comments:

Powered by Blogger.