விவசாயிகளுக்காக வீதியில் இறங்கத் தயங்குவது ஏன்?

விவசாயிகளுக்காக  வீதியில் இறங்கத் தயங்குவது ஏன்?

ஏப்ரல் 10ஆம் தேதி திங்கட்கிழமையன்று தமிழ் செய்தி தொலைக்காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்த எல்லோருமே ஒரு கணம் பதறிப் போனார்கள். இந்த நாட்டுக்குச் சோறு போடும் விவசாயிகள் டெல்லியில் பிரதமர் அலுவலகம் முன்பு விவசாயிகளைக் காப்பாற்றுங்கள் என்று நிர்வாணமாகப் போராடியதைப் பார்த்து எவரொருவரும் கலங்காமல், பதறாமல் என்ன செய்ய முடியும்? ஒரு பிரச்னைக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் மட்டுமே, நாம் நமது சமூக, அரசியல் நேர்மையை நிலைநாட்டிவிட்ட திருப்தியுடன் அல்லது ஆதங்கத்துடன் இருந்துவிடுகிறோம். இதில், நேரடி அரசியலில் இல்லாமல் வெளியே பார்வையாளர்களாக இருப்பவர்களைக்கூட விட்டுவிடலாம். ஆனால், நேரடி அரசியலில் இருப்பவர்களும் பார்வையாளர்களைப் போல இருந்தால் என்ன செய்வது?
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லி சென்று போராடத் தொடங்கி ஏப்ரல் 12 வரை, முப்பது நாள்கள் ஆகின்றன. விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது அவர்களது குறைந்தபட்ச கோரிக்கை. இந்த முப்பது நாள்களும் ஊடகங்களால் தவிர்க்கவே முடியாத அளவுக்கு விவசாயிகளின் போராட்ட வடிவங்களை வகுத்துள்ளார் அய்யாகண்ணு. இந்தப் போராட்டங்களில் அய்யாகண்ணுவே எதிர்பாராத போராட்டம்தான் அந்த நிர்வாணப் போராட்டம்.
தமிழக விவசாயிகளின் இந்தப் போராட்டம் டெல்லி ஜந்தர் மந்தர் திடல் அதன் வரலாற்றில் கண்டிராத ஒரு மிகப்பெரிய கரும்புள்ளியை சுமந்து நிற்கிறது.
விவசாயிகளின் கூக்குரல்கள் மோடியின் கோட்டையில் எதிரொலித்தாலும் காது கேட்காதது போல நடித்துக்கொண்டு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசும், மாநில அரசும் அச்சப்படுகிறது. இத்தனை நாள் போராட்டத்தை தொடர்ந்து கவனித்து வருபவர்கள் ஒன்றை அறிவார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் டெல்லி சென்று விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துவிட்டார்கள். ஆனாலும், மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராதது ஏன்?
தமிழகத்தின் ஆளும்கட்சி அமைச்சர்கள், எம்.பி-க்கள் டெல்லி சென்று விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டு ஆதரவு தெரிவித்து மத்திய அமைச்சர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்தார்கள். திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். திமுக எம்.பி-க்கள் கனிமொழி, திருச்சி சிவா நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்கள். விவசாயிகள் மத்திய அமைச்சர்களைச் சந்திக்கவும் ஏற்பாடு செய்தார்கள். பாஜக அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச் செயலாளார் வைகோ, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, விசிக தலைவர் திருமாவளவன், தேமுதிக மாநில மகளிரணி தலைவி பிரேமலதா, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தமிழர் வாழ்வுரிமை கட்சி வேல்முருகன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்... இப்படி கிட்டத்தட்ட ஒட்டுமொத்த அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது மகிழ்ச்சியான செய்திதான். ஆனால், இந்த தலைவர்கள் எல்லோரும் டெல்லி சென்று விவசாயிகளைச் சந்தித்துவிட்டு திரும்பிவந்த பின்னர், இந்த சந்திப்பு ஆதரவு எல்லாம் ஒரு சடங்கு, இழவு வீட்டுக்கு போய்தீர வேண்டிய கடமை என்பதாகவே ஐயம்கொள்ள வைத்துள்ளார்கள்.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த இந்த தலைவர்கள் அனைவரும் அதை மக்கள் போராட்டமாக, அவர்களது கட்சியின் போராட்டமாக அறிவித்திருக்க வேண்டும். அதைத் தொடர்ந்து முன்னெடுத்திருக்க வேண்டும். மத்திய அரசை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க நெருக்கடி கொடுத்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததை ஒரு சடங்காக மாற்றிவிட்டார்கள். மாறாக விவசாயிகளுக்காக களத்தில் இறங்கிய மாணவர்களை ஜல்லிக்கட்டு போராட்டம் போல நீளவிடாமல் தடுக்க நினைத்த அரசுகள் மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கியது. பல்வேறு வழிகளில், கைது செய்து பார்த்தது. இருந்தாலும் பிரச்னை ஓயவில்லை. சில கல்லூரிகளை மூடி போராட்டத்தையும் சத்தமில்லாமல் ஒடுக்கிவிட்டது. மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்காமல் மவுனமாக இருந்தது தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள். இந்த பலவீனத்தை தெரிந்துகொண்டதாலேயே என்னவோ மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழக விவசாயிகளின் எஞ்சிய கோமணங்களையும் அவிழ்த்து, நிர்வாணமாக்கி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.
உண்மையில், தமிழக அரசியல் கட்சி தலைவர்களுக்கு விவசாயிகளின் பிரச்னையில் அக்கறை இருக்குமானால், அரசியல் லாப நட்ட கணக்குகளைப் பார்க்காமல், இதை அவர்களுடைய கட்சியின் போராட்டமாக, ஒட்டுமொத்த தமிழகத்தின் போராட்டமாக அறிவிக்க வேண்டும். அப்படி நமது தமிழக தலைவர்கள் அறிவிப்பார்களாயின் இந்த கோடையில் விவசாயிகளின் வாழ்வில் வசந்தம் வீசும்.
மூன்று வேளை உண்ணும் உணவு அனைவருக்கும் தடையில்லாமல் கிடைக்க வேண்டுமென்றால் உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்காக உடனடியாக வீதியில் இறங்க வேண்டிய தருணமிது.
- எ.பாலாஜி
விவசாயிகளுக்காக வீதியில் இறங்கத் தயங்குவது ஏன்? விவசாயிகளுக்காக வீதியில் இறங்கத் தயங்குவது ஏன்? Reviewed by நமதூர் செய்திகள் on 00:17:00 Rating: 5

No comments:

Powered by Blogger.