நீட் தேர்வு: சி.பி.எஸ்.இ.-க்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!
கேரளாவில் நீட் தேர்வின்போது, தேர்வு மைய அதிகாரிகள் தேர்வெழுத வந்த மாணவியின் உள்ளாடைகள் அகற்ற சொன்னது தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையம் சி.பி.எஸ்.இ. தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. தேர்வின் போது மாணவர்கள் முறைகேடில் ஈடுபடாமல் தடுப்பதற்காக நீட் தேர்வை நடத்திய சி.பி.எஸ்.இ. கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதன்படி, மாணவர்கள் முழுக்கை ஆடைகளை அணியக் கூடாது. தேர்வு அறைக்கு மின்னணு பொருட்களைக் கொண்டுவரக் கூடாது. ஜீன்ஸ் டிசர்ட் போன்ற ஆடைகளை அணியக் கூடாது என்று ஏகப்பட்ட கெடுபிடி கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இதனால், நீட் தேர்வு மைய அதிகாரிகள் மாணவர்களை மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். மாணவிகளின் பின்னிய சடையை கலைந்து பார்ப்பது உள்ளிட்ட பல கொடுமைகள் நடைபெற்றது. முழுக் கை ஆடை அணிந்து வந்த மாணவ மாணவிகள் அதை அரைக் கையாக கத்தரித்துவிட்டு தேர்வு அறைக்குச் சென்றனர். இதனால், மாணவர்கள் கடுமையான மன உளைச்சலுக்குள்ளானார்கள்.
அப்போது, கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூரில் நீட் தேர்வு எழுத வந்த மாணவி ஒருவரை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தபோது, பீப் ஒலி எழுப்பியுள்ளது. அதற்கு அந்த மாணவி உள்ளாடையில் இரும்பு கொக்கி உள்ளது என்று பதில் அளித்துள்ளார். இதையடுத்து தேர்வு மைய அதிகாரிகல் அந்த மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொல்லி இருக்கிறார்கள். இதனால், மாணவி உள்ளாடையை அகற்றி தனது தாயிடம் கொடுத்துவிட்டு தேர்வு எழுதினார். இந்த விவகாரம் செய்தியாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல தரப்பினரும் சி.பி.எஸ்.இ.-க்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், நீட் தேர்வின்போது மாணவியை உள்ளாடையை அகற்றச் சொன்னது தொடர்பாக, சி.பி.எஸ்.இ. தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மே 17ஆம் தேதி தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதற்கு முன்பு, இந்த பிரச்னையில் நீட் தேர்வை நடத்திய அதிகாரிகளே இத்தகைய சோதனையில் ஈடுபட்டதாக சி.பி.எஸ்.இ. தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்படியானால், சி.பி.எஸ்.இ. நிர்வாகம் குறிப்பிட்ட அந்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.
நீட் தேர்வு: சி.பி.எஸ்.இ.-க்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
01:16:00
Rating:
No comments: