நீட் தேர்வு : தமிழகத்தின் நிலை?
நாடு முழுவதும் நேற்று நீட் எனப்படும் தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும், சுமார் 11.35 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதியுள்ளனர். தமிழகத்தில் நீட் தேர்வை எழுத 90 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் பலர் தேர்வு எழுத வரவில்லை.
இந்நிலையில், தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் ஆகிய 8 நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வில் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். முறைகேடுகளை தவிர்க்க நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
ஆனால், பல்வேறு கட்டுப்பாடுகளால் மாணவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். இதனால் சில மாணவர்கள் தேர்வு எழுதாமல் வீட்டுக்கு திரும்பினர். நீட் தேர்வுக்கு காலை 9.30 மணிக்குள் தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும் என்றாலும், 8 மணிக்கே வர வேண்டும் என்று சில தேர்வு மையங்கள் வலியுறுத்தியுள்ளன. சேலத்தில் தேர்வு மையத்துக்கு தாமதமாக வந்த மாணவர்களை தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கவில்லை. இதனால், பெற்றோர்களும் மாணவர்களும் தேர்வறைக்குள் அனுமதிக்குமாறு சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், முழுக் கை சட்டையுடன் தேர்வு அறைக்குள் அனுமதி மறுக்கப்பட்டதால், மாணவர்களின் பெற்றோர் சட்டையின் முழுக் கையை அரைக் கையாக கத்தரித்து தேர்வு அறைக்குள் அனுப்பிவைத்தனர்.
கேரளா மாநிலம், கண்ணனூரில் உள்ளாடைகளை அகற்றிய பின்னரே மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதனால் மாணவிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
கட்டுப்பாடுகளையும் பரிசோதனைகளையும் கடந்து தேர்வு அறைக்குள் சென்ற மாணவர்களுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. நீட் நுழைவுத் தேர்வு வினாக்கள் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்திருந்தன. தேர்வில் 180 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண் வழங்கப்படும்.
தாவரவியல், விலங்கியல் பிரிவுகளில் எளிதாக இருந்த கேள்விகள், இயற்பியல் மற்றும் வேதியலில் மட்டும் கடினமாக இருந்தன.
பிளஸ்-1 வகுப்பில் இயற்பியல் பிரிவில் இருந்து 24 கேள்விகளும், வேதியியல் பிரிவில் இருந்து 21 கேள்விகளும், உயிரியல் பிரிவில் இருந்து 44 கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன. பிளஸ்-2 வகுப்பில் இயற்பியல் பிரிவில் இருந்து 21 கேள்விகளும், வேதியியல் பிரிவில் இருந்து 24 கேள்விகளும், உயிரியல் பிரிவில் இருந்து 46 கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன.
நீட் தேர்வு முடிவு ஜூன் மாதம் 8ஆம் தேதி வெளியிடப்படும். இத்தேர்வு முடிவை www.cbse.neet.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். மேலும் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் (ரேங்க்) வெளியாகும். தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மத்திய அரசு 15% இடங்களுக்கும், மாநில அரசுகளின் மருத்துவ கல்வி இயக்ககங்கள் 85 %இடங்களுக்கும் கவுன்சலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 65,000 எம்.பி.பி.எஸ். இடங்களும், 25,000 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன.
நீட் தேர்வால் தற்போது தமிழக மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. நீட் தேர்வை வைத்து லாபம் பார்க்க ஆங்காங்கே நீட் தேர்வு பயிற்சி மையங்கள் முளைத்துள்ளன. ஆனால், அந்த பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்க பொருளாதார வசதி தேவை. ஏழை மாணவர்களால் பயிற்சி மையத்தில் சேரமுடியவில்லை. இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டத்தை கொண்டு வந்த பின் நீட் தேர்வை நடத்த வேண்டும்.
தமிழகத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத் திட்டத்தை மாற்றாதவரை நீட் தேர்விலும், ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்விலும் தமிழக மாணவர்கள் வெற்றிபெறுவது கடினம் என்பதால், அதிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க தமிழக சட்டசபையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, அது குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கவில்லை.
இதனால் கிராமப்புற மாணவர்களின் மருத்துவராகும் கனவு சிதைந்தாக தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வு : தமிழகத்தின் நிலை?
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:57:00
Rating:
No comments: