விவசாயிகளை வாட்டி வதைக்கும் வறட்சி!
கர்நாடகாவின் பிரதான நதியாகத் திகழும் துங்கபத்ராவை நம்பித்தான் அம்மாநிலத்தின் பல்வேறு நகரங்கள் உள்ளன. தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்கவல்ல அந்நதி, தற்போது வறண்டு காணப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் ஆழ்துளையிட்டு பெறப்படும் தண்ணீரை ஐந்து நாள்களுக்கு ஒருமுறை கடாக் நகராட்சி மக்களுக்கு விநியோகித்து வருகிறது. “நகராட்சியிலிருந்து எங்களுக்குத் தண்ணீர் வந்து இன்றோடு 35 நாள்கள் ஆகின்றன. தனியாரிடமிருந்து தண்ணீர் வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு ரூ.2,000 வரையில் செலவாகிறது”என்கிறார் வறண்ட முகத்துடன் பிரேதர் என்ற கடாக் பகுதிவாசி.
பர்வதம்மாள் என்ற பெண் கூறும்போது, “டேங்குகளில் கொண்டு வரப்படும் தண்ணீர் உகந்ததாக இல்லை. துவரம் பருப்பை வேக வைப்பதற்கு அது மிகவும் கடினமாக உள்ளது. அரசு தரப்பிலிருந்து 22 தண்ணீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, 20 லிட்டர் தண்ணீர் ரூ.2-க்கு விற்பனை செய்யப்படுகிறது; எனினும் கூட்ட நெரிசலில் தண்ணீர் வாங்குவதில் பெரும் சிரமம் உள்ளது”என்கிறார்.
தொடர்ந்து நான்காவது ஆண்டாக வடக்கு கர்நாடகா கடும் வறட்சியால் காய்ந்து கிடக்கும் நிலையில், நீராதாரம் வழங்க முடியாமல் அரசு தரப்பு செய்வதறியாது திகைத்து நிற்கிறது. குறிப்பாக ஹூப்ளி உள்ளிட்ட பெரு நகரங்களில்கூட ஒன்பது நாள்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் கொண்டு வரப்படுகிறது.
கடந்த மூன்று முதல் நான்கு வருடங்களாக கர்நாடகாவில் வழக்கமாகப் பொழியும் மழையைவிடக் குறைவான மழையே பொழிந்ததால் மாநிலம் முழுவதும் கடும் வறட்சி நிலவி வருகிறது. வட கிழக்கு மாநிலங்களான பிடார், கல்புர்கி ஆகிய மாவட்டங்களைத் தவிர, கொப்பல், பெல்காம், பீஜப்பூர் உள்ளிட்ட மற்ற 28 மாவட்டங்களில் சராசரி மழையைவிடக் குறைவான மழையே காணப்பட்டது. மேலும், 160 தாலுகாக்கள் வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இப்பிரச்னை குறித்துப் பேசும் மேம்பாட்டு ஆணையாளர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளரான விஜய பாஸ்கர் கூறுகையில், “சூழ்நிலையைத் தினசரி கண்காணித்து வருகிறோம். விவசாயிகள் துயர் துடைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடும் வறட்சியால் விவசாயம் மேற்கொள்ள முடியாத விவசாயிகளை, ஆடு வளர்த்தல் உள்ளிட்டப் பண்ணைத் தொழிலில் ஈடுபட ஊக்குவித்து உரிய ஆதரவும் உதவியும் அரசு வழங்கி வருகிறது. மேலும் ‘கிரிஷி மற்றும் பாசு பாக்யா’ ஆகிய திட்டங்கள் மூலமாக ஒருங்கிணைந்த விவசாயத் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும், ’அன்ன யோஜனா’ மற்றும் ‘க்ஷீரா பாக்யா’ போன்ற திட்டங்கள் விவசாயிகளுக்கு உதவிக்கரமாக இருக்கின்றன”என்கிறார்.
கடாக் மாவட்டத்தின் முல்குந்த் பகுதியைச் சேர்ந்த தியாவப்பா பேட்டாகெரி என்ற சிறு விவசாயி கூறும்போது, “காரிஃப் பருவத்தில் நாங்கள் பயிரிட்டிருந்த 1.5 ஏக்கர் அளவிலான சோளம் அனைத்தும் பட்டுப்போனதால், எங்களது குடும்பத்தைக் காப்பாற்ற நாங்கள் வைத்திருக்கும் இரண்டு மாடுகள் மூலமாகக் கிடைக்கும் பாலை விற்பனை செய்து சமாளித்து வருகிறோம். 100 நாள் வேலைத் திட்டத்தில் கிடைக்கும் ஊதியமும் போதுமானதாக இல்லை. எனவே பாலை நம்பியே காலத்தைக் கழிக்கிறோம்”என்கிறார் கவலைபடிந்த முகத்துடன்.
இதேபோலவே, சிகட்டி தாலுகாவிலுள்ள மகடி பகுதியிலும் மற்றொரு பிரச்னை தலையெடுத்துள்ளது.
இப்பகுதி முழுவதற்கும் நீராதாரமாகத் திகழும் மகடி ஏரி வறண்டு பல காலங்களாகி விட்டன. இந்த ஏரியைத் தூர்வாரும் பணியும் நடந்துகொண்டே இருக்கிறது. இந்த ஏரியின் நீர்மட்ட அளவு முன்பு 250 அடி வரையில் இருந்தது; தற்போது அது 600 அடியாகக் குறைந்துவிட்டது. எனவே நீராதாரமின்றித் தவிக்கும் அப்பகுதி விவசாயிகள் வேறு வழியின்றி தங்களது கால்நடைகளை விற்கத் தொடங்கிவிட்டனர். மேலும், காப்பீட்டுக்குத் தகுதியான விவசாயிகளும் பண்ணையாளர்களும் இன்னும் காப்பீட்டுத் தொகை வந்தபாடில்லை என்கிறார்கள்.
“வறட்சி காரணமாக இப்பகுதி இளைஞர்கள் பெங்களூரு, மங்களூரு, ஹுப்பலி, கூர்க் உள்ளிட்ட பெரு நகரங்களை நாடிச் செல்கின்றனர்” என்கிறார் செப்பி டண்டா பகுதியைச் சேர்ந்த தர்மப்பா லமனி என்ற விவசாயி.
பருவமழைக் காலத்தில் விவசாயத்தை முடிக்கும் இளைஞர்கள் கோவாவை நோக்கிப் பயணித்து, அங்கு கடற்கரையோரக் கடைகளில் சமையல் உதவியாளர்களாகவும், பிற கடைகளில் உதவியாளர்களாகவும் கூலிக்கு வேலை பார்க்கின்றனர். ஒரு சிலர் தாங்களாகவே கடைகள் அமைத்து துணி உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்கின்றனர்.
இந்த ஆண்டில் சுற்றுலா சீசன் தொடங்கிவிட்ட நிலையில், வழக்கத்தைவிடக் கூடுதலான அளவில் இப்பகுதி இளைஞர்கள் கோவாவை நோக்கி படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். ”பணமதிப்பழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து கோவாவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. வழக்கமாக ஒவ்வொரு சீசனிலும் ரூ.60,000 வரையில் எங்களுக்கு வருமானம் கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டில் 15,000 ரூபாயுடன் திரும்பியுள்ளோம்” என்கிறார் முத்துராஜ் நாயக் என்ற டாட்டூ கலைஞர்.
தொகுப்பு: விஷ்வநாத் குல்கர்னி
நன்றி: பிசினஸ் லைன்
தமிழில்: செந்தில் குமரன்
விவசாயிகளை வாட்டி வதைக்கும் வறட்சி!
Reviewed by நமதூர் செய்திகள்
on
22:14:00
Rating:
No comments: