ஏழைகளுக்கு தரமான மருத்துவம் : மோடியின் கூற்றும் எதார்த்தமும்!

ஏழைகளுக்கு தரமான மருத்துவம் : மோடியின் கூற்றும் எதார்த்தமும்!

இந்தியாவில் ஏழை எளியவர் அனைவருக்கும் தரமான இலவச மருத்துவ சிகிச்சை கிடைக்க மத்திய அரசு வழி வகை செய்யும் என்று கூறியிருக்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால் அதற்கான சாத்திக் கூறுகள் எதுவும் தெரியவில்லை. மோடியின் இந்த கூற்று ஏமாற்று வேலை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிரதமர் விருப்பம்
மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இன்று (25.5.2017) வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் பேசியதாவது: வெளிநாட்டிலிருந்து நாம் 70 சதவீத மருத்துவ சாதனங்களை இறக்குமதி செய்கிறோம். இதனால் மருத்துவ செலவு அதிகமாகிறது. தேசிய சுகாதாரக் கொள்கை உருவாக்க வேண்டும். இதன் மூலம் மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து சமுக மற்றும் பிரிவு மக்களுக்கு சிறந்த மருத்துவம் அளிக்கப்பட வேண்டும் என அரசு கருதுகிறது. இதன் அடிப்படையில் நாடு முழுதும் எய்ம்ஸ் மற்றும் மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
சுகாதாரத் துறை அமைச்சர்
கடந்த 18.9.2016 தேதியில் மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நடந்த கருத்தரங்கில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், ஜே.பி.நட்டா பேசியதை தற்போது நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. அவர் கூறியதாவது: மக்களுக்கான மருத்துவ வசதிகளை அளிப்பதில், நிதி ஒரு பிரச்னையே அல்ல; ஆனால், சில மாநிலங்கள், இதற்காக அளிக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்துவதில்லை. உதாரணமாக, பல்வேறு திட்டங்களுக்கு அளித்த, 7,500 கோடி ரூபாயை உத்தர பிரதேச மாநிலமும்; 3,500 கோடி ரூபாயை பீஹார் மாநிலம் பயன்படுத்தவில்லை.
நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்பதில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்காக, நாடு முழுவதும் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து சிகிச்சை அளிக்கக்கூடிய வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த, இரண்டு மாதங்களுக்குள் இதற்கான திட்டம்அறிவிக்கப்படும். மக்களுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ஒடிசா, அசாம், மேற்கு வங்கம், ஜம்மு - காஷ்மீரில், 'எய்ம்ஸ்' மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள் துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 187 மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்பட்டு, கூடுதல் வசதிகள் அளிக்கப்பட உள்ளன. இதைத் தவிர, டாக்டர்கள் பற்றாக்குறையை நீக்கும் வகையில், 58 மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வறிக்கைகள்
மோடியின் தலைமையிலான மத்திய அரசு இந்தியாவில் உள்ள மருத்துவ வசதிகளை அதிகப்படுத்துவது குறித்து இப்படி பேசிக்கொண்டிருக்க, எதார்த்தமோ வேறு மாதிரி இருக்கிறது. இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அனுபவம் பெற்ற மருத்துவர் கூறிய தகவல்கள் இதோ : இந்தியா உலகளவில் நவீன தாராளமயக் கொள்கைகளை அதி தீவிரமாக அமல்படுத்தியதன் விளைவாக நாடு வளர்ச்சியடைந்துவிட்டது என்று மார்தட்டிக்கொள்கிறது மோடி அரசு. ஆனால் மக்கள் நலன் – பொது சுகாதாரம் – பொது மருத்துவம் சீரழிந்து வருகிறது என்று பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. உலகளவிலான மனிதவள மேம்பாட்டு குறியீட்டில் பொருளாதார ரீதியாக குறைந்த வளர்ச்சி பெற்றுள்ள நாடுகளை விட நமது நாடு அடிமட்டத்தில் உள்ளது என்பது பலருக்கும் தெரியாத உண்மை.
இந்தியாவில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகள் 5 வயது எட்டும் முன்பே இறக்க நேரிடுகிறது. இது உலகின் 5ல் 1 பகுதியாக உள்ளது. 179 நாடுகளில் நடைபெற்ற ஆய்வில் இந்திய நாட்டில் குழந்தைகளும் தாய்மார்களும் ஆரோக்கியமாகவும் சுகாதாரமகவும் வாழ்ந்திட உகந்த நாடாக இல்லை என ’சேவ் தி சில்ரன்’ எனும் அமைப்பு கூறுகிறது. 2014ல்தான் மோடி அரசு பொறுப்பேற்றது. ஆகவே இதற்கு மோடி அரசை மட்டும் குறை கூறுவதில் அர்த்தமில்லை. நமது நாட்டில் பிறக்கும் 3ல் 1 குழந்தை போதுமான, சத்தான உணவு கிடைக்காமல் மரணத்தை தழுவுகிறது. இது ஆப்ரிக்க நாடுகளைவிட மோசமான நிலைமையாகும். சுத்தமான குடிநீர், முறையான கழிப்பிடம் மேலும் பொது சுகாதார கட்டமைப்பு ஏற்பாடுகள் இல்லாததன் காரணத்தினால் குழந்தைகள் வயிற்றுப்போக்கு, டெங்கு, மலேரியா, நிமோனியா மற்றும் மர்ம காய்ச்சல்களினால் அவதிபட்டு வருகின்றனர்.
தாராளமயக் கொள்கை
ஆனால் மோடி அரசின் தாராளமய கொள்கை இந்த நிலையை மேலும் பின்னுக்குத் தள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. மருந்துத் துறையில் இந்திய நாட்டின் இறையாண்மை மற்றும் மக்கள் நலனை பாதுகாத்து வந்த ஐ.டி.பி.எல்., (Indian Drugs And Pharmaceuticals Limited) ஆர்.டி.பி.எல். (Rajasthan dDrugs & Pharmaceuticals Limited) ஹெச்.ஏ.ல். (Hindustan Antibiotics Limited) மற்றும் பி.சி.பி.எல். (Bengal Chemicals & Pharnmaceuticals Limited) ஆகிய மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மக்களுக்கு மிக மலிவான விலைகளில் தரமான உயிர்காக்கும் மற்றும் அடிப்படையான அத்தியாவசிய மருந்துகளை தனது சொந்த தொழில்நுட்பத்துடன் உற்பத்தி செய்து மருந்து சந்தையிலும், அரசு பொது மருத்துவமனைகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துவந்தது. மேலும் இயற்கை பேரிடர், தொற்று நோய், போர் காலங்களில் என அவசர நிலைகளில் இலவசமாக மருந்துகளை விநியோகித்து வந்தது. ஆனால் மத்திய அரசின் தாராளமய கொள்கைகளினால் இந்த பொதுத் துறை மருந்து நிறுவனங்களை பன்னாட்டுக்கும் இந்திய ஏகபோக மருந்து முதலாளிகளுக்கும் மலிவு விலையில் விற்க முடிவெடுத்துள்ளது என்பது தேச விரோதச் செயல் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. குறிப்பாக சமீபத்தில் மோடி அமைச்சரவை இந்த பொதுத் துறை நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்களை விற்று அதன் பின் இந்த நிறுவனங்களை பன்னாட்டு முதலைகளுக்கு விற்கத் தீர்மானித்திருக்கிறது.
இதில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஊழியர்கள் பாதிக்கபடுவதோடு மட்டுமல்ல கோடிக்கணக்கான இந்திய மக்கள் குறைந்த விலைகளில் மருந்து கிடைக்காமல் அவதிப்படும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது மத்திய அரசு. உதாரணத்திற்கு ஹெச்.ஏ.எல். (HAL) எனும் மருந்து நிறுவனம் கேய்பன் (KAYPEN) எனும் பென்சிலின் மாத்திரையை வெறும் 0.40 காசுகளுக்கு சந்தையில் விற்பனை செய்கிறது. இது குழந்தைகளுக்கு ஏற்படும் இருதய நோய் மற்றும் முதியவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலிக்கான மருந்தாகும். இதை எந்த பன்னாட்டு நிறுவனமும் உற்பத்தி செய்யவில்லை. பாண்டிச்சேரி ஜிப்மர், வேலூர் சி.எம்.சி. மற்றும் அரசு மருத்துவமனைகளில் பிரபல மருத்துவர்களால் பரவலாக பரிந்துரைக்கப்படும் மருந்தாகும். அரசின் பிற்போக்குத்தனமான முடிவினால் இந்த மருந்து தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. மருந்துகளின் விலைகளை குறைக்கிறேன்; ஏழை எளியவர் அனைவருக்கும் தரமான இலவச சிகிச்கை கிடைக்க வழி செய்வேன் என்று மோடி கூறுவது ஏமாற்று வேலை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஏழைகளுக்கு தரமான மருத்துவம் : மோடியின் கூற்றும் எதார்த்தமும்! ஏழைகளுக்கு தரமான மருத்துவம் : மோடியின் கூற்றும் எதார்த்தமும்! Reviewed by நமதூர் செய்திகள் on 23:22:00 Rating: 5

No comments:

Powered by Blogger.