பேருந்து பயணம் (ஒரு நிமிடக் கதை) - உமர் முக்தார்
பேருந்து நிலையத்திற்குள் பேருந்து நுழைந்ததும் பயணிகள் பேருந்தை நோக்கி ஓடினார்கள். சரவணனும் ஓடினான். பேருந்தின் ஜன்னல் வழியாக தனது பேக்கை தூக்கி போட்டு இடம் பிடித்து விட்டான். பேருந்து முழுவதும் மக்கள் நிரம்பி வழிந்தார்கள். நகரத்திலிருந்து அந்த ஊருக்கு செல்ல அந்த பேருந்து மட்டும்தான் உண்டு. அதனால் மக்களுக்கு வேறு வழியில்லை. எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் அதில்தான் செல்ல வேண்டும்.
ஒரு வழியாக பிடித்த சீட்டில் சரவணன் உட்கார்ந்தவுடன் வியர்வையை துடைத்துக் கொண்டான். அசதியாக இருந்ததால் சாய்ந்து படுத்தான். மனதிற்கு இதமான இளையராஜா பாட்டு ஒலித்துக்கொண்டிருந்தது. சொல்லவா வேண்டும். சரவணன் கண் அயர்ந்தான்.
சிறிது நேரத்திலேயே பின் பக்கத்திலிருந்து யோரோ கூப்பிடுவது போல் இருந்து. திரும்பி பார்த்தான். ஒரு வயதான பெரியவர். "நிக்கமுடியல தம்பி, உட்கார இடம் தரியா?" என்று கேட்டார். "இல்ல பெரியவரே, எனக்கு இன்னிக்கு வேல ரொம்ப அதிகம். ரொம்ப அசதியா இருக்கு. என்னால நிக்கல்லாம் முடியாது. நீங்க முன்னாடியே வந்து சீட் பிடிக்க வேண்டியதுதானே" என்று சொல்லி முகத்தை திருப்பிக்கொண்டான்.
பெரியவர் முகம் சுருங்கியது. அந்த கூட்ட நெரிசலில் ஒரு கம்பியை பிடித்துக்கொண்டு ஒரு ஓரமாக நின்றுகொண்டார். பேருந்து கொஞ்ச தூரம் சென்றதும் நின்றது. பயணிகள் சிலர் இறங்கினார்கள். ஒரு சீட் கிடைத்தது பெரியவருக்கு. அதில் உட்கார்ந்துகொண்டார்.
பேருந்தில் ஓரளவு கூட்டம் குறைந்தது. இருந்தாலும் சீட் முழுவதுமாக நிரம்பி இருந்தது. பத்து நிமிடங்கள் சென்றிருக்கும் பேருந்து நிறுத்தம் வந்ததும் பேருந்து நின்றது. சிலர் இறங்குவதும், ஏறுவதுமாக இருந்தனர். ஏறியவர்களில் பெண்களே அதிகம். ஒரு பெண்மணி கைக்குழந்தையுடன் நின்றுகொண்டிருந்தார். அவருக்கு உட்கார சீட் கிடைக்கவில்லை.
கொஞ்ச நேரம் நின்று கொண்டே வந்தார். அந்த பெண்மணி நின்று கொண்டே வருவதை கண்ட பெரியவர் தனது சீட்டை கொடுத்து "இங்கே உட்காருமா, இன்னும் கொஞ்ச தூரந்தான் இருக்கு நான் இறங்க" என்று சொல்லி எழுந்து நின்று கொண்டார்.
இதை பார்த்த சரவணன், தான் செய்த தவறை உணர்ந்தான். அந்த பெரியவரிடம் சென்று மன்னிப்பு கேட்டு தனது சீட்டில் உட்கார சொன்னான்.
- உமர் முக்தார்
பேருந்து பயணம் (ஒரு நிமிடக் கதை) - உமர் முக்தார்
Reviewed by நமதூர் செய்திகள்
on
08:25:00
Rating:
No comments: