பெண்களுக்குக் கூடுதல் மன அழுத்தம் ஏன்?
மன அழுத்தம் என்பது ஆண் - பெண் இருபாலருக்கும் ஏற்படக்கூடிய ஒன்று. ஆனால், இது பெண்களுக்கு அதிகளவில் ஏற்படுகிறது என ஆய்வு தெரிவிக்கிறது. இதுகுறித்து மனநல அறக்கட்டளை ஒன்று ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு சர்வதேச அளவில் 29 ஆயிரத்து 338 பேரிடம் நடத்தப்பட்டது.
தற்போது பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதிக்கத் தொடங்கிவிட்டனர். அலுவலகத்தில் இருபாலருக்கும் ஒரேவிதமான பணிகளே வழங்கப்படுகின்றன. ஆனால், 70 சதவிகிதப் பெண்களுக்கு ஆண்களை விட அதிகளவில் மன அழுத்தம் ஏற்படுகிறது. மனிதவள மேம்பாட்டுத்துறையில் பணிபுரியும் 56 சதவிகித பெண்கள் காரணத்தோடும், 26 சதவிகித பெண்கள் காரணமே இல்லாமலும் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர்.
மேற்பார்வையிடுவது தொடர்பான பணிகளில் 10 சதவிகிதப் பெண்கள் அதிக மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். சேவை மற்றும் உற்பத்தித் துறையில் 8 சதவிகிதப் பெண்களுக்குக் கூடுதல் மன அழுத்தம் ஏற்படுகிறது.
பெண்களைப் போலவே ஆண்களுக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது. ஆனால், பணம், வேலை, உறவு போன்ற காரியங்களில் பெண்கள் அதிகளவில் மன அழுத்தத்துக்கு ஆளாகுகின்றனர். பொதுவாகக் கூட்டுக் குடும்பத்தில் வசிக்கும் பெண்களுக்கு அதிகளவில் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
ஒருசில பெண்கள் மெல்லிய தேகத்துடன், அழகாகவும், நாகரீகமாகவும் இருக்க வேண்டும் என எண்ணுகின்றனர். இதுவும் அவர்களின் மன அழுத்தத்துக்கான ஒருசில காரணங்களாக அமைகின்றன. மன அழுத்தத்தால் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் பீதி அடைகின்றனர். மேலும், பயம், கவலை போன்றவற்றால் நமக்கு மராடைப்பு வந்துவிடுமோ என்ற மன அழுத்தம் அதிகமாகவே காணப்படுகிறது.
நாட்சென் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் மன அழுத்தத்தால் பாதி பெண்கள் சரியாக தூங்குவதில்லை என்பது தெரியவந்துள்ளது. உலகில் மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியாவில் 87% பெண்கள் மன அழுத்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். அமெரிக்காவில் 53% பேர் பாதிக்கப்படுவதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
பெண்களுக்குக் கூடுதல் மன அழுத்தம் ஏன்?
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:47:00
Rating:
No comments: