பஞ்சமி நிலங்கள் பறிக்கப்பட்ட கதை!
“இவர்கள் சரியான உணவின்றியும், தொழுநோயாலும் மற்ற கொடிய நோய்களாலும் திண்ணப்பட்டும், பன்றிகளை போல் வேட்டையாடப்பட்டும், கல்வியின்றி, ஆதரவின்றி வாழ்கின்றனர். இவர்களை பிரிட்டிஷ் அரசு அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்து விட்டது, ஆனாலும் அவர்கள் சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டே வாழ்கிறார்கள்.”
- ஜேம்ஸ் ஹென்ரி அப்பெர்லே ட்ரெமென்கீர், மாவட்ட ஆட்சியர், செங்கல்பட்டு,1891.
ஆங்கிலேய அரசின் காலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியராக இருந்த ஜேம்ஸ் ட்ரெமென்கீர் “தலித்துகள் பற்றிய குறிப்புகள்” என்ற பெயரில் தலித் மக்கள் குறித்த அறிக்கை ஒன்றை தயாரித்து ஆங்கிலேய அரசிடம் 1891ஆம் ஆண்டு தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் தலித்துகளுக்கு நிலம் வழங்குவதன் மூலம் அவர்கள் வாழ்வை மேம்படுத்த இயலும் என்ற கருத்தை பதிவு செய்திருந்தார்.
இந்த அறிக்கை ஆங்கிலேய நாடாளுமன்றத்தில் 1892, மே 16ஆம் தேதி விவாதத்துக்கு வந்தது. அப்போது ஆங்கிலேய அரசும், மெட்ராஸ் மாகாண அரசும் தலித் மக்களை மேம்படுத்த தேவையானவற்றை செய்ய தயக்கம் காட்டியது.
பிறகு ஆங்கிலேய அரசு 1892ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் நில உரிமை சட்டத்தை உருவாக்கியது. இதன்மூலம் மெட்ராஸ் மாகாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்களான பள்ளர்கள், பறையர்களுக்கு நிலம் ஒதுக்க வழிவகை செய்யப்பட்டது. இந்நிலங்கள் பஞ்சமி நிலங்கள் என அழைக்கப்பட்டது. இதன்மூலம் பல தலித் மக்கள் பயன் பெற்றனர். முக்கியமாக செங்கல்பட்டு மாவட்ட தலித் மக்கள் பெரியளவில் பயன் பெற்றனர். மாவட்ட ஆட்சியர் ஜேம்ஸின் அறிக்கை மூலம் இத்தகைய சட்டம் கொண்டுவரப்பட்டது. ஜேம்ஸுக்கு முன்பிருந்த அதிகாரிகளும் தலித் மக்கள் மேம்பாட்டுக்காக முயற்சித்தனர், ஆனாலும் ஜேம்ஸின் முயற்சியே விளைவுகளை ஏற்படுத்தியது. ஜேம்ஸுக்கு முன்னால் செங்கல்பட்டு துணை ஆட்சியராக இருந்த சி.எம்.முல்லாய் தலித் மக்கள் சந்திக்கும் இடர்களை பதிவு செய்தார். ஆனால், மற்ற அதிகரிகளின் ஒத்துழைப்பு அவருக்கு கிடைக்கவில்லை. பள்ளர்களும் பறையர்களும் மிராசுதார்களால் அடிமையாக பயன்படுத்தப்பட்டனர். நிலம் வைத்திருந்த மக்கள் மிராசுகள் என அழைக்கப்பட்டனர்.
திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்த பிராமணர்களும், வெள்ளாளர்களும் மிராசு சமுதாயத்தை சார்ந்தவர்களாகவே இருந்தனர். வட மாவட்டங்களில் இருந்த வன்னியர்களும், மற்ற சாதி இந்துக்களும் மிராசு அல்லாத மக்களாக இருந்தனர். மிராசுகள் நிலங்களை அபகரித்து கொண்டனர். அரசின் கொள்கைகளால் இத்தகைய முறைகேடுகள் நடந்திருக்கிறது, எனவே அரசு திருத்தங்களைச் செய்ய வேண்டும் என ஜேம்ஸ் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டினார். மிராசுகள் நிலங்களை வைத்திருந்தனர், பயிர்க்காரர்கள் போன்ற பிற இந்து சமுதாயத்தினரை மிராசுகள் எதிர்க்கவில்லை. எனவே தலித் மக்கள் மட்டும் நிலம் இல்லாமல் ஆக்கப்பட்டனர். அவர்களால் சுயமாக விவசாயம் செய்ய முடியாமலே இருந்தது.
நிலங்கள் மீதான மிராசுகளின் அதிகாரத்தை ஆங்கிலேய அரசு குறைத்து, விவசாயம் செய்ய தயாராக இருப்பவர்களுக்கு வழங்க முடிவு செய்தது. ஆனாலும் தலித் மக்கள் நிலமின்றியே வாழ்ந்தார்கள்.
ஜேம்ஸுக்கு முன் கிறித்தவ மிஷனரிக்கள் தலித் மக்களின் உயர்வுக்காக பல செயல்களை செய்தன. வில்லியம் கௌடி மற்றும் ஆடம் ஆண்ட்ரூ என்ற இரு மிஷனரிகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் நில உரிமைக்காக உழைத்தனர்.
பிரிட்டிஷ் அரசு அடிமைத்தனத்தை சட்டவிரோதமானது என அறிவித்து 1843ஆம் ஆண்டு சட்டம் இயற்றியது. நிலங்களில் வேலை செய்யும் தலித் மக்கள் தீண்டத்தகாதோர் எனவும் பண்ணையாட்கள் எனவும் அழைக்கப்பட்டனர். இவர்களை மிராசுகள் விலைக்கு விற்றும், அடமானம் செய்தும், வாடகைக்கு விட்டும் அடிமைகள் போல் நடத்தினர்.
செங்கல்பட்டு ஆட்சியர் தலித் மக்களின் மோசமான வாழ்வை பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்தார். ஆனால், அதை வருவாய்த்துறை நிராகரித்தது. ஏனெனில் ஆங்கிலேயர்களின் குறிக்கோள் சீர்திருத்தம் அல்ல, வருவாய் மட்டுமே.
தலித் மக்களுக்கு சிறு,குறு நிலங்கள் வழங்குவதன் மூலமும், கல்வி, வீட்டு வசதி, சுயவேலை, ஒற்றுமை, சுய மரியாதை, ஒழுக்கத்தின் மூலமும் அவர்கள் வாழ்வை மேம்படுத்த முடியும் என ஜேம்ஸ் குறிப்பிட்டிருந்தார். 1881ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கீட்டில் 4.5 மில்லியன் பறையர்கள் இருந்தனர். 1891ஆம் ஆண்டு 9 மில்லியன் பறையர்கள் இருந்தனர்.
1892ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு மெட்ராஸ் மாகணத்தில் இருக்கும் தலித் மக்களுக்கு 12 லட்சம் ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. தமிழ்நாட்டின் வட மாவட்டங்களிலேயே தலித் மக்கள் அதிகமிருந்தனர்.
கல்வியின் மூலம் தலித் மக்கள் உயர்வு அடைந்தாலும் 18ஆம் நூற்றாண்டு முதல் அவர்களுக்கு நிலத்துக்கான போராட்டம் தொடங்கிவிட்டது. அரசு தலித்களுக்கு நிலம் ஒதுக்குவதற்கு முன்னரே ராணுவத்திலும், ரயில்வேயிலும் பணியாற்றிய தலித்கள் நிலங்கள் வாங்க தொடங்கினர். மிஷனரிகள் போராடுவதற்கு முன்னரே தலித் மக்கள் சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போர் தொடுத்துவிட்டனர். 1817ஆம் ஆண்டு பரமக்குடியில் இந்து ஆதிக்கத்துக்கு எதிராக தலித் மக்கள் ஒத்துழையாமை போராட்டத்தை கையாண்டனர்.
எனினும் பிரிட்டிஷ் அரசின் உத்தரவால் அதிகாரபூர்வமாக தலித் மக்கள் நில உரிமை பெற்றனர். இந்த உரிமை தவறாக பயன்படுத்தப்படக் கூடாது என்பதற்காக சில விதிமுறைகளையும் அரசு உருவாக்கியது. நிலம் வழங்கப்பட்ட 10 ஆண்டுகளுக்கு நிலத்தை விற்க முடியாது, பின்னர் தலித் அல்லாத மக்களுக்கு நிலத்தை விற்க முடியாது, முறைகேடுகள் ஏதும் இருப்பின் அரசு அந்த நிலத்தை கைப்பற்றி கொள்ளும் என விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. ஆனாலும் அந்த 12 லட்சம் ஏக்கர் நிலங்களில் பெரும்பங்கு தலித் அல்லாத மக்கள் கையில் சேர்ந்துவிட்டன. ஒரு கூடை ராகிக்கும், சோளத்துக்கும் நிலங்கள் ஏமாற்றப்பட்டு வாங்கப்பட்டன.
சுதந்திரத்துக்குப் பின்னும் விவசாய நிலங்கள் குறித்து தமிழக அரசு ஆவணம் செய்யவில்லை. ஆனால் கேரள, மேற்கு வங்க அரசுகள் நில ஆவணங்கள் செய்தன. காங்கிரஸும் சில நடவடிக்கைகள் எடுத்தும் எந்த பயனும் இல்லை. கடைசியில் தலித் மக்கள் நிலமற்று தான் இருந்தார்கள்.
பிராமணர்கள் சென்னை போன்ற பெருநகரங்களும் நகர்ந்து விட்டனர். எனவே, நிலங்களுக்கான அதிகாரம் பிற இந்து சாதிகள் கைக்கு போய் சேர்ந்தது. எனவே பணியாட்களாக இருந்த தலித் மக்களுக்கு எந்த உரிமையும் கிடைக்கவில்லை.
திராவிட கட்சிகளான திமுக, அதிமுக-வும் பல வருடங்களாக தமிழகத்தை ஆண்டன. ஆனாலும் நில உரிமை சீர்திருத்தங்களில் பெரியளவில் எந்த செயலும் செய்யவில்லை. ஏனெனில் நில உரிமைதாரர்களின் ஓட்டு வங்கியை நம்பியே இந்த கட்சிகள் இருந்தன.
சில அரசு உத்தரவுகள் நில உரிமை குறித்து போடப்பட்டிருந்தாலும் அவை எந்தவித சீர்திருத்தங்களையும் செய்யவில்லை. பணம் படைத்தவர்களிடமும், உயர்சாதி மக்களிடமுமே நிலங்கள் இருந்தன. தலித் அல்லாத மக்கள் 3.5 லட்சம் பஞ்சமி நிலங்களை வைத்துள்ளதாக கூறப்பட்டது, ஆனால், இதற்கு ஆதாரம் ஏதும் இல்லை.
தலித் மக்களுக்கு நிலம் போய் சேராமல் இருக்க பல காரணங்கள் இருந்தன. நிலம் குறித்த ஆவணங்களை கர்ணம்கள்தான் வைத்திருந்தனர். இவர்கள் நிலங்களை ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு வழங்கி வந்தனர். இவர்கள் நிலம் படைத்த மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர். வருவாய் துறை அதிகாரிகளும் இவர்களின் ஆவணங்களை நம்பியே செயல்பட வேண்டியிருந்தது. முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் இந்த கர்ணம்கள் முறையை ஒழித்து வருவாய்த்துறையின் கீழ் செயல்படும் கிராம நிர்வாக அலுவலர்களை நியமித்தார்.
அதிகாரத்தில் இது மாற்றத்தை ஏற்படுத்தினாலும் நில உரிமையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
1979ஆம் ஆண்டு முதன்முறையாக தமிழக அரசு மாநிலம் முழுவதும் நில அளவையில் ஈடுபட்டு பதிவு செய்தது. இது 1979, ஜூன் 1ஆம் தேதி தொடங்கி 1987, ஏப்ரல் 30ஆம் தேதி முடிந்தது. ஆனாலும் இதனால் மாற்றம் எதுவும் இல்லை. இந்த அளவை தலித் மக்களுக்கு நல்லது செய்யாத போதிலும், அதிக தீங்கு விளைவித்தது. பஞ்சமி நிலங்கள் என அழைக்கப்பட்ட இந்த நிலங்கள் பட்டா, புறம்போக்கு என்ற வார்த்தைகளால் மாற்றப்பட்டன.
அரசிடம் நிலம் குறித்த ஆவணங்கள் இல்லாததால் நம்பத்தகுந்த தகவல்கள் ஏதும் இல்லை. தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நிலங்களாக 1,16,392.40 ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 16,018.09 ஏக்கர் நிலங்கள் தலித் மக்கள் அல்லாதவர்களிடம் உள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் 2006ஆம் ஆண்டு 1,26,113 ஏக்கர் பஞ்சமி நிலங்கள் இருப்பதாகவும் அதில் 10,619 ஏக்கர் நிலங்கள் தலித் அல்லாதவர்களிடம் இருப்பதாகவும் தெரிகிறது. 1990-களில் அருள்தாஸ் என்றவர் கொடுத்த தகவல் உரிமை சட்டத்தின் மனுவுக்கு வந்த பதிலில் தமிழகத்தில் 1,04,494.38 ஏக்கர் பஞ்சமி நிலங்கள் இருப்பதாக தெரிவித்திருந்தனர். அதில் 74,893 ஏக்கர் நிலம் மட்டுமே தலித்களிடம் இருந்தது.
1994ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் அருகே உள்ள கரணை என்ற கிராமத்தில் பஞ்சமி நிலங்களை மீட்பதற்காக போராட்டங்கள் எழுந்தது. இந்தப் போராட்டத்தின் மூலமே பஞ்சமி நிலங்கள் முறைகேடுகள் குறித்து மாநில அளவிளான விழிப்பு உணர்வு எழுந்தது. இந்தப் போராட்டத்தில் சில தலித் இளைஞர்களும் பங்கேற்று போராடினர். இப்போராட்டம் இறுதியில் போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு தலித் இளைஞர்கள் உயிரிழந்தனர். திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் சுமார் 700 ஏக்கர் பஞ்சமி நிலங்கள் இருக்கின்றன, இதில் வெறும் கால் பங்கு நிலங்கள் தான் தலித்கள் கையில் உள்ளது. போராட்டங்கள் மூலம் இதுவரை 30 ஏக்கர் நிலங்கள் மட்டுமே மீட்கப்பட்டிருக்கிறது.
இந்த நில உரிமை மீட்பு போராட்டங்களில் நீதிமன்றங்களின் பங்கு அளவற்றது. நீதிமன்றங்களும் அவற்றின் தீர்ப்புகளும் பெரியளவில் இந்த பிரச்னையில் உதவியிருக்கின்றன.
அதிகரித்து வந்த விழிப்பு உணர்வினாலும், நீதிமன்றங்களின் தீர்ப்புகளாலும் அரசு சில குழுக்கள் அமைத்து பஞ்சமி நிலங்களின் பிரச்னையைத் தீர்க்க முடிவு செய்தது. சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து பஞ்சமி நிலங்களையும் உரியவர்களிடம் சேர்க்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டது.
அதிமுக அரசு 2015, அக்டோபர் 8ஆம் தேதி மூன்று பேர் கொண்ட குழு அமைத்து இப்பிரச்னையை தீர்க்க வழிகளை கண்டுபிடிக்குமாறு உத்தரவிட்டது. ஆனால், இந்த குழு பயனளிக்கும் வகையில் எதுவும் செய்யவில்லை என்பதே தலித் மக்களிடையே இருக்கும் கருத்து. நிலங்கள் குறித்த பதிவுகள் அரசுகள் இல்லாததால் மக்களிடம் அந்த குழு நிலம் குறித்து தகவல் கேட்டதாக மக்கள் கூறுகின்றனர்.
தேசிய அளவிலும் மாநில அளவிலும் பஞ்சமி நிலங்களை மீட்க சமீப காலங்களில்தான் அமைப்புகள் உருவாகியிருக்கின்றன. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு அமைப்பு, அனைத்திந்திய கிசான் சபா, அனைத்திந்திய விவசாய பணியாளர்கள் சங்கம் ஆகியன இத்தகைய செயல்களின் பின்னணியில் உள்ளன.
தமிழகத்தில் திராவிட கட்சிகளும், மற்ற கட்சிகளும் பஞ்சமி நிலங்கள் மீட்பு பிரச்னை மீது சுத்தமாக கவனம் செலுத்துவதே கிடையாது. நிலங்கள் படைத்த உயர்சாதி மக்களின் ஓட்டுகள் கிடைக்காதென அஞ்சி இப்பிரச்னை மீது கவனம் செலுத்த மறுக்கின்றனர். பன்னாட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மட்டுமன்றி அரசு கட்டடங்களும் பஞ்சமி நிலங்களில் கட்டப்பட்டுள்ளன. சென்னையில் பல கோடி ரூபாய்கள் மதிப்புள்ள பஞ்சமி நிலங்களில் இன்று முக்கிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. மதுரை மாவட்டம் மேலூர் தாலுக்காவில் உள்ள 700 ஏக்கர் பஞ்சமி நிலங்கள் கிரானைட் குவாரி அதிபர்களிடம் இருப்பதை அம்மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயம் கண்டுபிடித்தார்.
அரசும் பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்தது வேதனையான தகவல். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள ஒரு கிராமத்தில் உள்ள பள்ளி பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. பெரம்பலூரில் ஒரு குளமும், திருவண்ணாமலையில் ஒரு பேருந்து நிறுத்தமும் பஞ்சமி நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகளும் பஞ்சமி நிலங்களில் உள்ளன. எனவே அரசும் இந்த செயலில் ஈடுபட்டிருப்பது வேதனையளிக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அதானி குழுவுக்கு கமுதி அருகே சூரிய மின்சக்தி ஆலை அமைக்க 4,000 ஏக்கர் நிலத்தை வழங்கியதற்காக 2016ஆம் ஆண்டு தாசில்தார் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த 4000 ஏக்கர் நிலத்தில் பெரியளவு பஞ்சமி நிலங்கள் அடங்கும். 1901ஆம் ஆண்டு தமிழகத்தில் 67 சதவிகித தலித்களிடம் நிலமே இல்லை என கண்டறியப்பட்டது. 100 வருடங்களுக்கு பிறகும் அதே நிலை நீடிக்கிறது. தலித் மக்களுக்கான இந்த உரிமைகள் பறிக்கப்படுவதால் அவர்கள் சமுதாயத்திலும், பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றம் அடைய முடியவில்லை.
ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை இந்திய அரசு விவசாய நில அளவை மேற்கொள்ளும். 2010-2011 ஆண்டுக்கான முடிவுகள் 2014ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதில் தமிழக தலித்கள் மற்ற மாநில தலித்களை காட்டிலும் குறைந்த அளவிலான நிலங்களே வைத்திருந்தனர். 2005-06இல் 8,84,000 தலித்களிடம் 5,03,000 ஹெக்டேர் விவசாய நிலம் இருந்தது. 2010-2011இல் 8,73,000 தலித்களிடம் 4,92,000 ஹெக்டேர்கள் நிலங்கள் இருந்தன. ஐந்து வருடங்களிலேயே தலித்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டுவிட்டன. இதற்கு திராவிட அரசுகளே காரணம். அரசுகள் முறையாக செயலாற்றி இருந்தால் இத்தகைய தீங்குகள் ஏற்பட்டிருக்காது. தலித் மக்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டு அவர்கள் 100 நாள் வேலைகள் போன்ற வலைகளில் சிக்கி கொள்கிறார்கள். திராவிட அரசுகளும் மக்களுக்கு இலவசங்களை வழங்கி அவர்களை பிற்படுத்தியே வைத்திருந்தது.
எங்களிடம் நிலம் இல்லை, ஏனென்றால் அவற்றை மற்றவர்கள் அபகரித்துவிட்டனர்” என்ற அம்பேத்கரின் வார்த்தை சரியாகத்தான் உள்ளது. ஆங்கிலேய அரசின் செங்கல்பட்டு ஆட்சியர் ஜேம்ஸின் குறிப்புகளில் அவர், “சிறிதளவு நிலமும், அதில் ஒரு குடிலும், படிக்கவும் எழுதவும் வாய்ப்புகளுடனும், சுயமான வேலையுடனும், சுய மரியாதையாலும் பறையர்களின் எதிர்காலம் பெரியளவில் மாறும்” என எழுதியிருந்தார். இது 1891ஆம் ஆண்டு நடந்தது. அந்த வருடத்தில் அம்பேத்கர் பிறந்தார். அதன்பிறகு சிறிதளவே தலித் மக்கள் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
பெட்டி செய்தி:
ஜேம்ஸ் ஹென்ரி அப்பெர்லே ட்ரெமென்கீர் 1891ஆம் ஆண்டில் செங்கல்பட்டு மாவட்டத்தின் ஆட்சியராக பணியாற்றினார். செங்கல்பட்டு மாவட்டத்தின் பறையர்களின் வாழ்வு குறித்து அறிக்கை தயாரித்தவர். இந்த அறிக்கையே பிரிட்டிஷ் அரசு 1010/1892 உத்தரவை பிறப்பிக்க காரணமாய் இருந்தது. இந்த உத்தரவு தலித் மக்கள் நில உரிமை பெற வழிவகை செய்தது.
ஜேம்ஸ் 1853, அக்டோபர் 30ஆம் தேதி பூனேவில் மேஜர் சார்லஸ் வில்லியம் ட்ரெமென்கீருக்கு மூன்றாவது மகனாக பிறந்தார். அவரின் தந்தை பொதுப்பணி துறையில் பணிபுரிந்தவர். லேன்சிங் கல்லூரி மற்றும் செல்டென்காம் கல்லூரியில் ஜேம்ஸ் பயின்றார். அமெரிக்க பெண்ணான ஜெஸ்ஸீ ரித்தல்லாக் வான் அவுக்கென் என்பவரை நியூ யார்க்கில் 1887, அக்டோபர் 18ஆம் தேதி ஜேம்ஸ் மணந்தார்.
1873ஆம் ஆண்டு இந்திய சிவில் சர்வீஸில் இணைந்தார். 1875ஆம் ஆண்டு பயிற்சியை முடித்தார். மெட்ராஸ் மாகாணத்தில் 1878இல் பணியமர்த்தப்பட்டார். பிரிட்டிஷ் அரசின் கீழ் பல்வேறு இடங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கிறார். 1901ஆம் ஆண்டு தன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். 1912, அக்டோபர் 28ஆம் தேதி ஸ்காட்லாந்தில் ஜேம்ஸ் காலமானார்.
நன்றி: இளங்கோவன் ராஜசேகரன், Frontline
தமிழாக்கம்: விக்னேஷ் பாபு
பஞ்சமி நிலங்கள் பறிக்கப்பட்ட கதை!
Reviewed by நமதூர் செய்திகள்
on
22:05:00
Rating:
No comments: