அரவக்குறிச்சி நெடுஞ்சாலையில் 1600 கோடி ரூபாய்...! - என்ன நடந்தது?


டந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன், திருப்பூர் அருகே 3 கன்டெய்னர் லாரிகளில் கரன்ஸி நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தினால் ஏற்பட்ட சர்ச்சை இன்னும் ஓய்ந்த பாடில்லை. இதுதொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் சிக்கிய 3 லாரிகளின் பதிவெண்களும் போலி என்றும், திட்டமிட்டு பணம் கடத்தப்பட்டதாக  சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் கரூர் மாவட்டம்,  அரவக்குறிச்சி - மேல்கோவிலூர் நெடுஞ்சாலையில் தாரக்கொட்டாய் எனும் இடத்தில்,  இன்று காலை  2 கன்டெய்னர் லாரிகள் சாலையோரம் நிற்க, லாரிகளில் பணம் இருப்பதாக அக்கம் பக்கம் உள்ள கிராமங்களுக்கு தகவல் பரவியது.  கூடவே,  'இரண்டு கன்டெய்னர் லாரிகளில் ஆயிரம் கோடி ரூபாய் பணம் கொண்டு போகும்போது ஏதோ ஒரு பிரச்னையால் அந்த  லாரிகள் திடீரென நின்றுவிட்டன' என்பதாக தகவல் கிடைத்து போலீஸார் மற்றும் பத்திரிகையாளர்கள் லாரிகள் நிறுத்தப்பட்ட இடத்திற்கு விரைந்தனர்.

விசாரணையில்,  கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள ரிசர்வ் வங்கியில் இருந்து, திருவனந்தபுரத்தில் உள்ள ரிசர்வ் வங்கிக் கிளைக்கு, புதியதாக அச்சடிக்கப்பட்ட பல கோடி ரூபாய் நோட்டுகள் ,  2 கன்டெய்னர் லாரிகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டதாக தெரியவந்தது.  கரூர் தாரக்கொட்டாய்  நெடுஞ்சாலையில் நிற்கும்  2 லாரிகளிலும் ரூ.1600 கோடிகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், அந்த லாரிகளைச் சுற்றியும் பணத்தை பாதுகாக்க, துப்பாக்கி ஏந்திய போலீசார் நிற்கின்றனர். 

இந்நிலையில் என்ஜின் கோளாறு காரணமாகவே நடுரோட்டில் 2 லாரிகளும் நிறுத்தப்பட்டதாகவும், என்ஜின் கோளாறை சரிசெய்தபின் லாரிகளை திருவனந்தபுரம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  மேலும் இதுபற்றி தகவலறிந்த மாட்ட எஸ்.பி., வந்திதா பாண்டே, டி.எஸ்.பி., கீதாஞ்சலி ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணைக்குப்பின் திருச்சி  டி.ஐ.ஜி. அருண், “ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான பணம் அது. மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் புடை சூழ லாரிகள் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு லாரி பிரேக் டவுன் ஆன காரணத்தால் அரவக்குறிச்சி சாலையில் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது என்ஜின் கோளாறு சரிசெய்யப்பட்டு வருகிறது. இரண்டு லாரிகளுக்கும் பாதுகாப்பு போட்டுள்ளோம். இது சாதாரணமான சம்பவம்தான்” என விளக்கம் அளித்துள்ளார்.
கரூர்- அரவக்குறிச்சி இடையே நிற்கும் பணம் அடங்கிய லாரியை பார்க்க மக்கள் ஆர்வத்துடன் வருவதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பணத்தை பாதுகாக்க லாரியைச் சுற்றி துப்பாக்கியுடன் போலீசார் நிற்கின்றனர்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது பணப்புழக்கம் அதிகமாக இருந்ததாக சொல்லப்பட்டது. இதனிடையே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் விரைவில் நடக்கும் எனும் பேச்சு உள்ள நிலையில், கரன்ஸிக் கட்டுகள் அடுக்கப்பட்ட லாரிகள் நிறுத்தப்பட்டிருப்பது மக்களிடையே கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சி.ய.ஆனந்தகுமார்
http://www.vikatan.com/news/tamilnadu/66349-two-containers-hauling-huge-cash-halted-at-nh7.art
அரவக்குறிச்சி நெடுஞ்சாலையில் 1600 கோடி ரூபாய்...! - என்ன நடந்தது? அரவக்குறிச்சி நெடுஞ்சாலையில் 1600 கோடி ரூபாய்...! - என்ன நடந்தது? Reviewed by நமதூர் செய்திகள் on 04:25:00 Rating: 5

No comments:

Powered by Blogger.