குஜராத்தில் பயிரிட்ட குற்றத்திற்காக தலித் அடித்துக் கொலை



குஜராத்தின் சோதனா கிராமத்தை சேர்ந்தவர் ராமா சிங்கிரகியா. இவர் தன் கிராமத்தில் உள்ள நிலம் ஒன்றில் ஆமணக்கு பயிரிட்டதால் உயர் சாதியினரால் கத்தி, கம்பு, கோடரி போன்ற ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைக்கு நியாயம் கிடைக்காதவரை அவரது உடலை பெறப்போவதில்லை என்று அவரது உறவினர்கள் கூறியதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

இவர் மீதான தாக்குதலை அக்கிராம தலைவர் ஹர்பம் கரவத்ரா தலைமை தாங்கியுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இவர் தற்பொழுது தலைமறைவாகியுள்ளார். இந்த கொலை தொடர்பாக தற்பொழுது பிரபாத் கரவத்ரா, லகு மேர் மற்றும் நிலேஷ் பாபர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலையாளிகளின் சமூகத்தை சேர்ந்தவர்களின் கூற்றுப்படி, ராமா பயிர் செய்த இடம் கால்நடை மேய்ச்சலுக்கான இடம் என்றும் அதனால் தான் அவர் அடித்துக் கொல்லப்பட்டார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ராம சிங்கிரகியா உடன் அவருக்கு உதவியாக பயிர் செய்த இருவரையும் அந்த கும்பல் தாக்கியுள்ளது.
இது குறித்து ராமா வின் குடும்பத்தினர் கூறுகையில், கடந்த 15 வருடங்களாக ராம சிங்கிரகியா இதே இடத்தில் தான் பயிர் செய்து வந்தார் என்றும் அவரது உடலை அங்கே தான் அடக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் இவரின் கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்கபப்டாத வரை அவரது உடலை வாங்கப் போவதில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த கொலை குறித்து ராம சிங்கிரகியாவின் சகோதரி வெஜி பாண்டவத்ரா கூறுகையில், “எங்களது பெற்றோர்களும் சகோதரரும் இதே நிலத்திற்காக உயிரிழந்துள்ளனர். தற்பொழுது ராமா தன் உயிரை கொடுத்துள்ளான். அவனை துண்டுத் துண்டாக வெட்டியுள்ளனர். ஆனால் அவன் உதவிக்கு யாரும் வரவில்லை. ஊர் தலைவர் மீதான அச்சம் தான் இதற்க்கு காரணம். என் தம்பியை அங்கேயே அடக்கம் செய்ய வேண்டும்.” என்று கூறியுள்ளார். மேலும் தங்கள் நிலத்தில் விளைந்த பயிர்களை எட்டு மாதம் முன்னர் கிராம உயர் சாதியினர் தீயிட்டு எரித்துவிட்டனர் என்றும் ராமாவின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

இது குறித்து மேர் சமூகத்தை சேர்ந்த ராம்தே மோத்வாடியா கூறுகையில், “இன்று ராமாவை அடக்கம் செய்ய இடம் கேட்கிறார்கள், நாளை அவனுக்கு அங்கு கோவில் கட்டுவார்கள். பின்னர் தோட்டம் கட்டி அந்த இடத்தை ஆக்கிரமிப்பார்கள். தலித்களுக்கு என தனி மயான பூமி உள்ளது. அங்கே அவனது உடலை அடக்கம் செய்யட்டும். எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.” என்று கூறியுள்ளார்.
8000 பேர் வசிக்கக் கூடிய இந்த கிராமத்தில் சுமார் 300 தலித் குடும்பங்கள் உள்ளன. இவர்களில் பெரும்பான்மையினர் உயர் சாதி மேர் சமூகத்தை சேர்ந்தவர்களின் நிலங்களில் வேலை செய்பவர்கள். மேல் சாதியினருக்கு அடிபணிந்து அவர்கள் நிலத்தில் வேலை செய்யாமல் ராமா சுயமாக நிலத்தை பயிரிட்டு வந்ததே அவரது கொலைக்கு காரணம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
குஜராத்தில் பயிரிட்ட குற்றத்திற்காக தலித் அடித்துக் கொலை குஜராத்தில் பயிரிட்ட குற்றத்திற்காக தலித் அடித்துக் கொலை Reviewed by நமதூர் செய்திகள் on 22:00:00 Rating: 5

No comments:

Powered by Blogger.